காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழுப் பிரிவில், கடந்த கல்வியாண்டில் 15 மாணவர்கள் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்தமைக்காக ஹாஃபிழ் பட்டம் (ஸனது) பெற்றிருந்தனர்.
அவர்கள் அனைவருக்கும் ஊக்கப் பரிசாக உம்றா பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த தனியார் ஹஜ் சேவை நிறுவனமான அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அந்த 15 ஹாஃபிழ் மாணவர்களும், தற்போது புனித உம்றா கிரியைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்திலிருந்து பைத் பாடி வழியனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், அல்ஃபத்தாஹ் ஹஜ் சர்வீஸ் நிறுவன அதிபர் அபுல்ஹஸன் தலைமையில் - அங்கிருந்து சென்னை புறப்பட்டுச் சென்று, சென்னை விமான நிலையம் மூலமாக சஊதி அரபிய்யா ஜித்தாவைச் சென்றடைந்துள்ளனர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அதன் ஆசிரியர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், பொறுப்பாளர்களான ஹாஃபிழ் ஊண்டி ஸாலிஹ் உள்ளிட்டோரால் அம்மாணவர்கள் வழியனுப்பி வைக்கப்பட்டனர். |