காயல்பட்டினத்திலுள்ள வணிக நிறுவனங்களில் சேரும் குப்பைகளைச் சேகரிக்க, நகராட்சியின் சார்பில் சிறப்பேற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் கூறியுள்ளதாவது:-
இதுகாலம் வரை குடியிருப்புகளிலுள்ள குப்பைகளைச் சேகரிக்கச் செல்கையில் வணிக நிறுவனங்களின் குப்பைகளும் சேகரிக்கப்பட்டு வந்தன. இதன் காரணமாக, வணிகர்கள் எதிர்பார்த்த நேரங்களில் சென்று குப்பைகளை உடனுக்குடன் சேகரித்துச் செல்ல இயலாத நிலை இருந்தது.
தற்போது, குடியிருப்புகளில் குப்பைகளைச் சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள முதன்மைச் சாலை, கூலக்கடை பஜார் உள்ளிட்ட பகுதிகளில் அன்றாடம் வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அனைத்து வகை குப்பைகளும் ஒன்றாகவே சேகரிக்கப்பட்டு வந்தாலும், வெகு விரைவில் – மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் தனித்தனியே பிரித்துப் பெற திட்டமுள்ளது.
அதுபோல, வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை வினியோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பாக, வணிகர்கள் நல்ல ஒத்துழைப்பை தற்போது வழங்கி வருகின்றனர். இந்த ஒத்துழைப்பு நிரந்தரமாகத் தொடர வேண்டும் என்பதே எமது அவா.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இத்தகவலை, நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் தெரிவித்துள்ளார்.
|