புன்னைக்காயலில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் – KSC அணி கோப்பை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
அமரர் மனுவேல்ராஜ் பிஞ்ஞேயிரா நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான 44 வது மாவட்ட கால்பந்தாட்டப் போட்டி புன்னைக்காயல் புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகம் சார்பில் அதன் மைதானத்தில் ஜூலை 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது.
இப்போட்டியில் புன்னைக்காயல் புனித ஜோசப் அணி, காயல்பட்டினம் USC, DCW அணிகள், பட்டனம் இனைஞர் மன்றம் வீரபாண்டியன்பட்டணம், மர்காசியஸ் நாசரேத், தூத்துக்குடி ஸ்பிரிட்டட் யூத், பிரண்ட்ஸ் கிளப், SDAT Sports Hostel ஆகிய அணிகளுடன், காயல்பட்டினம் KSC அணியும் பங்கேற்றது.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் அரை இறுதி ஆட்டத்தில் KSC அணி வீரபாண்டியன் பட்டணம் அணியை 1 - 0 என்ற கோல் கணக்கிலும், புன்னைக்காயல் அணி USC அணியை சமனுடைப்பு முறையிலும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டி 16ம் தேதி ஞாயிற்று கிழமையன்று KSC மற்றும் புனித ஜோசப் புன்னைக்காயல் அணிகளுக்கிடையே நடைபெற்றது. ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் சமனுடைப்பு முறை கையாளப்பட்டு அதில் KSC அணி 4- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற, வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பையும், வீரர்களுக்கு பரிசும் அளித்து வாழ்த்தி பேசினர். இப்போட்டி தொடரின் சிறந்த வீரராக KSC அணியின் கோல் கீப்பர் அஸ்கர் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சிறப்பு பரிசு அளித்து கவ்ரவித்தனர்.
இறுதி போட்டியை காண்பதற்காக காயல் கால்பந்து ரசிகர்கள் திரளாக நேரில் வந்து கண்டு ரசித்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் & வாவு முத்து இப்றாஹீம்
|