காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, மழலையரின் உற்சாகக் கொண்டாட்டங்களுடன் களைகட்டியது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் பீ.எம்.ஐ.ஸஊத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஹாங்காங் நாட்டில், ஜூன் மாதம் 25ஆம் நாள் ஞாயிற்றுகிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி:
பெருநாளை முன்னிட்டு, நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் காணச் செய்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக, கடந்தாண்டுகளைப் போல இவ்வாண்டும் நமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் கொண்டாடப்பட்ட 25.06.2017 ஞாயிற்றுகிழமையன்று, ஹாங்காங்கிலுள்ள Middle Road Park (Sindhi Park) பூங்காவில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று 19.30 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியை இளவல் பி.எஸ். இல்யாஸ் அஹ்மத் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். அமைப்பின் பொருளாளர் ஹாபிழ் பி.எஸ்.அஹ்மது ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
தலைமையுரை:
பேரவைத் தலைவர் ஹாபிழ். ஏ.எல். இர்ஷாத் அலி பேரவையின் செயல்பாடுகளை விளக்கி பேசினார். இது வரை உறுப்பினர்களாகதவர்கள் மற்றும் தமது உறுப்பினர் சந்தாக்களை செலுத்தாதவர்கள் செயற்குழு உறுப்பினர்களிடம் செலுத்தி தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மழலையர் பலூன் கொண்டாட்டம்:
கடந்தவருடம் போல், இவ்வாண்டும் குழந்தைகளுக்காக கண்கவர் பலூன்கள் - பல வண்ணங்களில், பல வகைகளில், பல வடிவங்களில் - அதற்கான சிறப்பு நிபுணரால் தயாரித்து வழங்கப்பட்டது.
குழந்தைகள் விரும்பிய வண்ணங்களிலும், வடிவங்களிலும் பலூன்களை உடனுக்குடன் செய்து கொடுத்தது, அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த மகிழ்ச்சியை மழலையருக்கு அளிப்பதற்காகவென்றே இந்த ஏற்பாடு பேரவையின் சார்பில் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.
பல்சுவை நிகழ்ச்சி:
நிகழ்ச்சியில் பங்கேற்ற மழலையர், சிறாருக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து, வருகை தந்திருந்த உறுப்பினர்கள் பங்கேற்ற இஸ்லாமிய பாட்டு பாடல் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இந்நிகழ்வுகள் யாவையும் பொருளாளர் ஹாஃபிழ் பி.எஸ். அஹமத் சாலிஹ் ஒருங்கிணைத்தார்.
நகர்நல நிதி சேகரிப்பு:
இந்நிகழ்ச்சியில், பொதுநல நிதி சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தாராளமாக நிதி வழங்கினர். நிறைவில், அமைப்பின் பொது நிதிக்காக ரூபாய் 12 ஆயிரம் தொகையும், ஜகாத் நிதிக்காக ரூபாய் 17 ஆயிரம் தொகையும் சேகரிக்கப்பட்டது.
பங்கேற்றோர்:
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் மற்றும் சீனா வாழ் காயலர்கள் சுமார் 250 பேர் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் சுவையான தேனீருடன், இனிப்பு, தின்பண்டங்கள் மழலையருக்கு ஜூஸ் ஆகியன பரிமாறப்பட்டன.
ஹாஃபிழ் எம். எஸ். ஷெய்க் தாவூத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன.
மொத்தத்தில், பெருநாளையடுத்த இரவுப் பொழுது அனைவருக்கும் இன்பமாகக் கழிந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! நிகழ்ச்சிகளின் நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன @ 11:58 / 16.07.2017.] |