சிங்கப்பூரில் 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சிங்கப்பூரில் 25.06.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. அன்று அதிகாலையில், அந்நாட்டின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகையும், குத்பா உரையும் நடைபெற்றது.
அங்குள்ள பென்கூலன், அல்-அன்ஸார், ஜாமிஆ சூலியா பள்ளிவாசல்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் சிங்கப்பூர் வாழ் காயலர்கள் கலந்துகொண்டனர். தொழுகை நிறைவுற்றதும், அவர்கள் தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
அன்று மாலையில் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில், சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பாக ஏற்படு செய்யப்பட்டிருந்த பெருநாள் ஒன்றுகூடலில் மன்ற உறுப்பினர்கள், காயலர்கள் தம் மழலையர் & பெண்களுடன் திரளாகக் கலந்துகொண்டனர்.
17.00 மணிக்கு நிகழ்விடம் வந்தடைந்த காயலர்கள், பச்சை பசேலெனக் காட்சியளிக்கும் தாவரவியல் பூங்காவில் தம் குழந்தைகளை ஓடியாடி விளையாட விட்டுப் பார்த்து மகிழ்ந்தனர்.
மகளிருக்கான தனிப் பகுதியில் அவர்கள் அமர்ந்து - ஊர் நடப்புகள், பெருநாளையொட்டி செய்த உணவுப் பதார்த்தங்கள், பலகாரங்கள் குறித்து ஆர்வமுடன் கருத்துப் பரிமாறினர்.
அனைவருக்கும் சுவையான தேநீர், வடை ஆகியன சிறுகடி/குடியாகப் பரிமாறப்பட்டன. மஃரிப் வேளை வந்ததும் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டு, இமாம் ஜமாஅத்தோடு தொழுகை நிறைவேற்றப்பட்டது.
20.30 மணியளவில் அனைவருக்கும் சுவையான மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான எம்.எம்.மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபழ்ல் இஸ்மாஈல் வழிநடத்தலிலான குழுவினர் ஏற்பாடுகளைத் திட்டமிட்டபடி சிறப்புற செய்திருந்தனர்.
இரவுணவு நிறைவுற்றதும், இதுபோன்ற தருணத்தை மீண்டும் மீண்டும் எதிர்பார்த்தவர்களாக, மறவா நினைவுகளுடன் அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.N.L.முஹம்மத் ரஃபீக்
(செய்தி தொடர்பாளர் – சிங்கை கா.ந.மன்றம்)
|