சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகளை முன்னிட்டு, அதன் ஆண் / பெண் உறுப்பினர்களுக்குத் தனித்தனியே பல்வேறு போட்டிகள் அறிவிக்கப்பட்டு, சில நடைபெற்று முடிந்துள்ளன.
நடத்தி முடிக்கப்பட்டுள்ள கேரம் & பவுலிங் போட்டிகளின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நலமன்றத்தின் வருடாந்திர விழாவை முன்னிட்டு ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனியே பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனர். குர்ஆன் மனன போட்டி, பொது அறிவு, பூப்பந்து, கால்பந்து, பவுளிங், கேரம் என உற்சாகமான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் வசிப்போருக்கு வேலைப்பளு, நேரமின்மை, பரபரப்பான எந்திரமயமான வாழ்க்கை எனும் இறுக்கமான சூழலை மாற்றி அவர்களை உற்சாகப்படுத்தவும், இன்னும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அவர்களது அன்றாட அலுவல்களான அடுப்பிலும், அலுப்பிலிருந்து விடுவித்து அவர்களின் திறமைக்கு மதிப்பளித்து, அவர்களும் மன உற்சாகத்தைப் பெற வேண்டும் என்பதே இந்த போட்டிகளின் நோக்கம்.
போட்டிகளின் தொடர்ச்சியாக இம்மாதம் நவ: 5-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:00 மணிக்கு, பெடூக் நார்த் அவின்யூவில் உள்ள 98-வது பிளாக்கில் வைத்து மகளிர்க்கான கேரம் போர்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் குழுவுக்கு இருவர் என தேர்வு செய்யப்பட்டு பன்னிரெண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இருபத்தினான்கு மகளிர் பங்கெடுத்தனர்.
விருவிருப்பாக நடைபெற்ற மங்கையர்க்கான கேரம் போட்டியில், RSH.ஃபாத்திமா & நாச்சி நஸ்ரின் (Team-G) அணியும், நாச்சி & ஜுல்ஃபா (Team-F) அணியும் இறுதிச் சுற்றுக்கான தகுதியை பெற்றிருந்தன. போட்டியில் இறுதியாக நாச்சி & ஜுல்ஃபா (Team-F) அணியினர் வெற்றி பெற்றனர்.
கடந்த மாதம் அக்:18 தேதி கல்லாங் விளையாட்டு மைதானத்தின் உள்ளரங்கத்தில் வைத்து காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை தனித்தனியே நடைபெற்ற ஆண்கள், பெண்களுக்கான பவுலிங் போட்டியில், ஆண்கள் போட்டியில் வெண்மை நிற அணியான செய்யது மைதீன், MRF.ஸூஃபி, ரப்பானி, மொகுதூம் முஹம்மத் அணியினர் வெற்றி பெற்றனர்.
பெண்களுக்கான பவுலிங் போட்டியில் தனித்தனியே எட்டு பெண்கள் பங்கெடுத்தனர்.
இப் போட்டியில் 65 புள்ளிகளைப் பெற்று சாயிதா (W/o சாளை மொகுதூம் நெய்னா) மூன்றாவது இடத்தையும், 70 புள்ளிகளைப் பெற்று ஃபாத்திமா சபீனா (W/o அபு முஹம்மத் உதுமான்) இரண்டாவது இடத்தையும், 72 புள்ளிகளைப் பெற்று தாஸீம் பீவி (W/o ஷெக்கனா) முதல் இடத்தையும் வென்றனர்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசினை வருடாந்திர பொதுக்குழு குடும்ப சங்கமத்தின் போது அளிக்கப்படும் என்று மன்றத்தின் அலோசகர் பாளையம் ஹாஜி முஹம்மத் ஹஸன் அறிவித்துள்ளார். இன்ஷா அல்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம் & படங்கள்:
M.N.L.முஹம்மத் ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்)
தகவல்:
தவ்ஹீத் & ஜமீல்
(போட்டிக் குழு)
|