தணிக்கைத் துறைக்கு முறையான விளக்கத்தை வழங்கி, காயல்பட்டினம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு விரைவில் நிதியொதுக்கிடக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், சென்னையிலுள்ள – National Health Mission (NHM) திட்ட இயக்குநர் டாக்டர் தரேஸ் அஹ்மத் இடம் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் உட்பட 100 க்கும் மேற்பட்ட நகராட்சிகளில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் (URBAN PRIMARY HEALTH CENTRE) அமைத்திட - தமிழக அரசு, 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அரசாணை வெளியிட்டது.
அதனை தொடர்ந்து, இத்திட்டத்திற்கு - கோமான் ஜமாஅத் சார்பாக இடம் தர முன்வர, ஏப்ரல் 2012 இல் - பிற இடங்களையும் பரிசீலனை செய்து - கோமான் ஜமாஅத் தரமுன்வந்த இடத்தை பரிந்துரை செய்து - காயல்பட்டினம் நகராட்சி தீர்மானமும் நிறைவேற்றியது.
அதன் பிறகு - செப்டம்பர் 2012 இல், கோமான் ஜமாஅத் மூலம் - வாடகை கட்டிடம் வழங்கப்பட்டு, தற்காலிக அடிப்படையில் - அக்கட்டிடத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் இயங்க துவங்கியது. டிசம்பர் 2012 இல் - கோமான் ஜமாஅத் சார்பாக, 50 சென்ட் நிலமும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட - அரசுக்கு வழங்கப்பட்டது.
எனினும் - ஏற்கனவே பொது மருத்துவமனை உள்ள, மக்கள் தொகை 50,000 க்கும் குறைவாக உள்ள ஊரில் ஆரம்ப சுகாதார நிலையம் எவ்வாறு அமைத்திட ஒப்புதல் கொடுக்கப்பட்டது என தணிக்கைத்துறை கேள்வி எழுப்பிய காரணத்தால் - இது சம்பந்தமாக எவ்வித முன்னேற்றமும் அதன் பிறகு இல்லை.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் மற்றும் கோமான் ஜமாஅத் சார்ந்தவர்களும் இது சம்பந்தமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். நடப்பது என்ன? குழுமம் சார்பாக - கடந்த சில மாதங்களாக, இது சம்பந்தமான முயற்சிகள், தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
நடப்பது என்ன? குழுமம் எடுத்த முயற்சிகளை தொடர்ந்து - அரசு மருத்துவமனையின் பணிகள் வேறு, ஆரம்ப சுகாதார நிலைய பணிகள் வேறு என விளக்கி, தணிக்கை தடையை நீக்க NHM அதிகாரிகள் - மீண்டும் தணிக்கைத்துறைக்கு கடிதம் எழுத சம்மதம் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தணிக்கைத்துறை இதுவரை முடிவெடுக்காத நிலையில், மீண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி - திட்ட இயக்குனர் Dr.தரேஸ் அஹமத் IAS அவர்களிடம், இன்று - நேரடியாக, நடப்பது என்ன? குழுமம் சார்பாக - சென்னையில், கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 16, 2017; 3:30 pm]
[#NEPR/2017111601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|