காயல்பட்டினத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டிகள், முறையாக சுத்தம் செய்யப்படாமலும், தண்ணீர் நிரப்பப்படாமலும் காட்சிப் பொருளாகிவிட்டதாகவும், 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாகவும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில், பல ஆயிரம் ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நிறுவப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகள் - குடிநீர் நிரப்பப்படாமலும், சுத்தம் செய்யப்படாமலும் காட்சிப்பொருட்களாகவே - கடற்கரையிலும், பரிமார் தெரு சந்திப்பிலும், தபால் நிலையம் அருகிலும், அரசு மருத்துவமனையிலும் உள்ளன.
இது சம்பந்தமாக பல மாதங்களாக, ஆணையர் உட்பட பல்வேறு அதிகாரிகளிடமும், பல தருணங்களிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இறுதியாக - கடந்த அக்டோபர் 30 அன்று இது சம்பந்தமான புகார், மாவட்ட ஆட்சியரிடமும், அதன் நகல் - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்களின் தணிக்கை துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த மனுவில் - தொட்டியினை முறையாக சுத்தம் செய்து, குடிநீர் நிரப்பிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்ய முடியவில்லையென்றால் - அந்த தொட்டிகளை ஏலம் விட்டு, இழப்பினை நகராட்சி அதிகாரிகள் ஈடுசெய்ய உத்தரவிடவும் கோரப்பட்டிருந்தது.
காயல்பட்டினம் நகராட்சி சார்பாக அந்த மனுவிற்கு வழங்கப்பட்டுள்ள பதிலில், மூன்று தினங்களுக்கு ஒரு முறை தொட்டியை சுத்தம் செய்து குடிநீர் நிரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும்.
நகராட்சி தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதே இல்லை; பல நாட்களாக குடிநீர் தொட்டிகள் காலியாக தான் உள்ளன. பலமுறை நினைவுபடுத்தினாலும், குடிநீர் நிரப்பப்படுவதில்லை.
பல ஆயிரம் ரூபாய் செலவில் தொட்டிகளை நிறுவ ஆர்வம் காண்பித்த காயல்பட்டினம் நகராட்சி, மக்களுக்கு பயனளிக்க குடிநீர் நிரப்ப எவ்வித ஆர்வமும் காண்பிக்கவில்லை.
எனவே - நகராட்சியின் உண்மைக்கு புறம்பான தகவலுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக, ஒவ்வொரு தொட்டியின் அடியிலும், கருப்பு பலகை நிறுவி - அதில், கடைசியாக சுத்தம் செய்யப்பட தினம், கடைசியாக குடிநீர் நிரப்பப்பட்ட தினம் என எழுதிட உத்தரவிட கோரியும், அவ்வாறு நகராட்சியினால் செய்யமுடியாது என்றால், மக்களுக்கு எவ்வித பயனுமின்றி உள்ள குடிநீர் தொட்டிகளை, ஏலம் விட்டு - அதன் தொகையை நகராட்சி பொது நிதிக்கு மீண்டும் கொண்டுவரவும், அதனால் ஏற்பட்ட நிதி இழப்பினை ஆணையர் உட்பட அனைத்து அதிகாரிகளும் ஈடுகட்ட, உள்ளாட்சிமன்றங்களின் தணிக்கைத்துறைக்கு பரிந்துரை செய்யவும் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு வழங்கப்பட்டது.
மேலும் - ஒரு வாரத்திற்குள், இக்குறையினை தெளிவான முறையில் தீர்க்கவில்லை என்றால் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்ய நடப்பது என்ன? குழுமம் முடிவுசெய்துள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 13, 2017; 7:30 pm]
[#NEPR/2017111303]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|