ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் சார்பில், அந்நாட்டில் நடத்தப்பட்ட வி-யுனைட்டெட் கடற்கரை கபடி போட்டியில் காயல் யுனைடெட் அணி கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழகம் சார்பில் வீ - யுனைடெட் ஸ்போட்ஸ் மற்றும் வீ- யுனைடெட் பாரக்ஸ் நிறுவனம் அனுசரனையில் கடற்கரை கபடி போட்டிகள் ஹாங்காங் தீவில் உள்ள சுங் ஹாம் ஹாக் கடற்கரையில் கடந்த நவம்பர் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற அணிகளுள் - காயல் யுனைடெட், ஹாங்கர்ஸ், தூத்துக்குடி டைகர்ஸ், காயல் கிங்ஸ், சென்னை ராக்கர்ஸ், சென்னை டைகர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் இரு பிரிவுகளாக நடைபெற்ற இப் போட்டியில் காயல் யுனைடெட் , காயல் கிங்ஸ், சென்னை டைகர்ஸ், சென்னை ராக்கர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
முதலாவது அரையிறுதிப் போட்டியில் காயல் யுனைடெட் அணி சென்னை ராக்கர்ஸ் அணியையும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் காயல் கிங்ஸ் அணி சென்னை டைகர்ஸ் அணியையும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
காயல் யுனைடெட், காயல் கிங்ஸ் இடையேயான இறுதிப் போட்டியில் காயல் யுனைடெட் அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்று, வி-யுனைட்டெட் முதலாவது கடற்கரை கபடி போட்டி கோப்பையை வென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற காயல் யுனைடெட் அணிக்கு ஹாங்காங் தமிழ் பண்பாட்டுக் கழக தலைவர் செந்தில் குமாரும், இரண்டாமிடம் பெற்ற காயல் கிங்ஸ் அணிக்கு அதன் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமாவும் - கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கி வாழ்த்தி பேசினர்.
இப்போட்டியை, திரளான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஹாங்காங் தமிழ்ச் சங்க அங்கத்தினர் கண்டு களித்தனர். அவ்வனைவருக்கும் பேருந்து, பகல் உணவு, மாலை தேனீர் வசதிகள் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் செய்து கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்பாடுகளை, ஹாங்காங் தமிழ் பண்பாட்டு கழக தலைவர் செந்தில் குமார், துணைத் தலைவர்கள் குமரன், இஸ்மாஈல், செயலாளர் அருண், செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், அணு, வி-யுனைட்டெட் நிறுவனத்தின் யு.முஹம்மத் நூஹ் ஆகியோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
முத்து இப்றாஹீம் மூலமாக
M.ஜஹாங்கீர்
|