காயல்பட்டினம் அரசு மருத்துவமனை கட்டிடங்களைப் பார்வையிட சிறப்புக் குழுவை அனுப்பி வைக்கக் கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில், சென்னையிலுள்ள - தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) டாக்டர் இன்பசேகரனிடம் நேரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த - தமிழக அரசிடம், கடந்த ஓர் ஆண்டிற்கு மேலாக, நடப்பது என்ன? குழுமம் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்துவருகிறது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (15-11-2017) சென்னையில் மருத்துவத்துறை இயக்குனர் (DMS) டாக்டர் எம்.ஆர்.இன்பசேகரனிடம் - பல்வேறு கோரிக்கைகள் - நடப்பது என்ன? குழுமம் சார்பாக - வழங்கப்பட்டன.
2 ஏக்கருக்கும் மேலான இடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையின் பல்வேறு கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஆண்கள் வார்டு கட்டிடத்தின் முகப்பு கூரை - சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்துள்ளது.
இம்மருத்துவமனையில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை என்பதை கருத்தில் கொண்டு - ஒரு குழுவினை அனுப்பி, இக்கட்டிடங்களின் ஸ்தரத்தன்மை ஆய்வு செய்யப்படவேண்டும் என்றும், நவீன வசதிக்கொண்ட புதிய மருத்துவமனை காயல்பட்டினத்தில் உருவாக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் - தற்போது நிரந்தர ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் (LAB TECHNICIAN) கிடையாது; நிரந்தர மருந்தாளுனர் (PHARMACIST) கிடையாது. துப்புரவு பணியாளர்கள் 5 இடங்களுக்கு ஒப்புதல் இருந்தும், இருவர் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே - இக்காலியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி மனு வழங்கப்பட்டது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் உள்ள XRAY மற்றும் ULTRA SOUND கருவிகள் மிகவும் பழமை வாய்ந்தவை; நவீன கருவிகள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வழங்கப்படவேண்டும். மேலும் - பிணவறையில் குளிர்பெட்டி இல்லை; இந்த தேவையையும் உடனடியாக பூர்த்தி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் நடப்பது என்ன? குழுமம் சார்பாக வைக்கப்பட்டது.
கடந்த ஓர் ஆண்டாக - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், பணிக்கு வராத மருத்துவர் டாக்டர் ஹேமா லதா இடம் காலியென அறிவிக்கப்பட்டு, நான்காவது மருத்துவர் - மகப்பேறு மருத்துவராக (DGO) நியமனம் செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையும், மருத்துவத்துறை இயக்குனர் மருத்துவர் எம்.ஆர். இன்பசேகரனிடம் வைக்கப்பட்டது.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை அதிகமான மக்கள் பயன்படுத்தினால், வசதிகள் மேம்ப்படுத்தப்படும் என கடந்த வாரம், நடப்பது என்ன? குழுமத்திற்கு - DMS டாக்டர் இன்பசேகரன் - கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 15, 2017; 8:30 pm]
[#NEPR/2017111501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|