சஊதி அரபிய்யா – ஜித்தா காயல் நல மன்றம் & காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியன இணைந்து, “இலக்கை நோக்கி... – GOAL SETTING” வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்தியுள்ளன. இதில், காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியர் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஜித்தா காயல் நல மன்றம், இக்ராஃ ஏற்பாட்டில்
“இலக்கை நோக்கி...” வழிகாட்டு நிகழ்ச்சி!
அனைத்துப் பள்ளிகளின் 10, +2 மாணவ- மாணவியர் பங்கேற்பு!
காயல் நகர மாணவ-மாணவியரின் கல்வி முன்னேற்றத்திற்காகவும், வளமான எதிர்காலம் அமைந்திட வேண்டுமென்பதற்காகவும் கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை வகுத்து செயலாற்றி வருகிறது இக்ராஃ கல்விச் சங்கம். இதற்கு உறுதுணையாக உலகின் வெவ்வேறு பகுதிகளிலும் செயலாற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு காயல் நல மன்றங்களும், அறக்கட்டளைகளும் இக்ராஃவுடன் இணைந்து பல கல்வி நிகழ்ச்சிகளை நடத்தியும், அணுசரணையளித்தும் வருகிறது.
நவீனங்கள் மிகைத்து விட்ட இக்காலத்தில், கல்வியின்றி- அதுவும் உயர் கல்வியின்றி முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது. அம்முன்னேற்றத்தை அடையச் செய்திடும் உயர்கல்வி எது என சரிவர தெரியாமலும், எதிர்காலத்தைப் பற்றிய சரியான திட்டமிடல் இல்லாமலும் ஒரு இலக்கற்ற பயணமாகவே இன்றைய மாணவ- மாணவியரின் கல்விப் பயணங்கள் அமைந்துள்ளன. இதனால் முன்னேற்றம் என்பது எதிர்பார்த்த அளவில் அமையாமலோ அல்லது முற்றிலும் இல்லாமலோ போய் விடுகிறது.
இக்குறையைக் களைந்திட, பெரு நகரங்களில் தேவையான வழிகாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்ற கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை காயல்பட்டினத்திலும் நடத்தி, இந்நகர மாணவ சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் வருடம்தோறும் பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் நடப்பாண்டு ஜித்தா காயல் நற்பணி மன்றமும், இக்ராஃ கல்விச் சங்கமும் இணைந்து ''இலக்கை நோக்கி...'' என்ற மாணவ-மாணவியருக்கான தன்னம்பிக்கையூட்டும் கல்வி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. காயல்பட்டினம் நகர பள்ளிகளின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ - மாணவியர் அனைவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி சதுக்கை தெரு ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் அரங்கிலும், பெரிய நெசவு தெரு ஹமீதிய்யா அரபிப் பாடசாலையிலும் 11-10-2017, 12-10-2017 ஆகிய இரு தினங்கள் 6 அமர்வுகளாக நடைபெற்றன.
இலக்கை நோக்கி... என்ற இந்த வழிகாட்டு நிகழ்ச்சிகளை ACCESS INDIA என்ற நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை நடத்தியது.11-10-2017 அன்று காலை 10:30 மணிக்கு சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மற்றும் முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு ரத்தினசாமி, இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், கத்தார் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்று மாலை 02:30 மணியளவில் முஹியித்தீன் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த காலை மற்றும் மாலை இரு நிகழ்ச்சியினையும் ACCESS INDIA நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜனாப் N.K.M.காதிர் அலி நடத்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சியை நடத்தித்தந்த N.K.M.காதிர் அலி அவர்களுக்கு இக்ராஃ கல்விச் சங்கத்தின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், கத்தார் காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை ஆகியோர் நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர்.
அன்றைய தினம் (11-10-2017) எல்.கே.மேனிலைப்பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 10:30 மணிக்கும், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 02:30 மணிக்கும் பெரிய நெசவு தெரு, ஹமீதிய்யா அரபிப் பாடசாலையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த காலை மற்றும் மாலை இரு நிகழ்ச்சிகளையும் ACCESS INDIA வின் பயிற்சியாளர் ஜனாப் ஏ.அஹமது மீரா நடத்தினார். நிகழ்ச்சியின் இறுதியில் நிகழ்ச்சியை நடத்தித்தந்த ஏ.அஹமது மீரா அவர்களுக்கு இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும்,ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளருமான அல்ஹாஃபிழ் எம்.ஏ.செய்யது முஹம்மது நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தார்.
மறுநாள் (12-10-2017) நிகழ்ச்சி ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் காலை 11;30 மணியளவில் காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ACCESS INDIA நிறுவனத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், மூத்த பயிற்சியாளருமான ஜனாப் பி.முஹம்மது ஜுனைத் நடத்தினார்.அன்று மாலை 02:30 மணியளவில் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ACCESS INDIA நிறுவனத்தின் மூத்த பயிற்சியாளரும், மனோதத்துவயியலாளருமான ஜனாப் எஸ்.ரியாஸ் நடத்தினார்.நிகழ்ச்சியின் இறுதியில் காலை மற்றும் மாலை நிகழ்ச்சிகளை நடத்தித்தந்த பி.முஹம்மது ஜுனைத் அவர்களுக்கு இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது அவர்களும், எஸ்.ரியாஸ் அவர்களுக்கு இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும்,ஜெய்ப்பூர் காயல் நல மன்றத்தின் செயலாளருமான அல்ஹாஃபிழ் எம்.ஏ.செய்யது முஹம்மது அவர்களும் நினைவுப்பரிசை வழங்கி கவுரவித்தனர். இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
இலக்கை நோக்கி.. என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில், ஒவ்வொருவரும் முன்னேறுவதற்கான ஒரு இலட்சியத்தை,தாமே ஏற்படுத்திக் கொள்வது, அந்த இலக்கை அடைவதற்கு கனவு காண்பது, தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது, அதற்கடுத்து அதற்கான கடின உழைப்பை மேற்கொள்வது என துவங்கி இதனை SMART ACHIEVE மூலம் எப்படி அடைவது என்பதற்கு Specific, Measurable, Adjustable, Reachable, Time bound ஆகிய தலைப்புகளில் அடுத்தடுத்து முறைப்படி கடைபிடிக்க வேண்டிய முயற்சிகள் குறித்து பல்வேறு சம்பவங்கள், நிகழ்வுகளையும், பல்வேறு சாதனையாளர்களின் பின்னணி, அவர்களின் அயராத உழைப்பு, ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு பொன்னானது என்பதனையும் உதாரணங்களுடன் காணொளி உதவியுடன் தெளிவாக, எளிதாக மாணவ-மாணவியர் புரிந்து கொள்ளும் வண்ணம் பயிற்சியாளர்களால் விளக்கப்பட்டது.
அத்துடன் ஒழுக்கத்தின் அவசியம், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவேண்டிய மரியாதை, விடியற்காலை விழிப்பதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள், ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் திறமைகளை எப்படி வெளிக்கொணருவது என்பது குறித்து நகைச்சுவை கருத்துக்களுடன் விளக்கப்பட்டதோடு, படித்தவற்றை எளிதாக மனப்பாடம் செய்வதற்கான - கூர்ந்து கவணிப்பதற்கான பயிற்சியளிக்கப்பட்டது. மேலும் கல்வி கற்பது ஒரு சுமையல்ல என்பதை உதாரணத்துடன் விளக்கப்பட்டதோடு, கற்கவேண்டிய - பலருக்கும் தெரியாத பல்வேறு உயர்கல்வி (பட்டப்படிப்புகள்) குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியை மாணவ- மாணவியர் ஆர்வத்துடன் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்கத்திலும் பயிற்சியாளர்களால் சில நொடிகள் அளிக்கப்பட்ட விரைவுப் பயிற்சி மாணவ-மாணவரிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் இறுதியில் அரங்கிலேயே கருத்து தெரிவித்த ஒரு ஆசிரியை, ''இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், ஒரு இலக்கை நோக்கி பயணிக்கவேண்டியதன் அவசியத்தை தெளிவாக புரிய வைத்துள்ளதாகவும், இன்று முதல் நாங்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து அதன் வழியில் பயணிப்போம்'' என்று கருத்து தெரிவித்திருந்தார். வேறு சில ஆசிரியைகள் ''ஒழுக்கத்தின் அவசியம் (Discipline) குறித்து மாணவியருக்கு மனோத்தத்துவரீதியாக அளித்த விளக்கம் மிகவும் நன்றாக இருந்ததாகவும், இதுபோன்ற முறையில் அளிக்கப்படும் விளக்கங்களே இன்றைய காலத்தில் பலனளிக்கும் என்றும், இன்னும் கூடுதல் நேரம் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்'' என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவியர் பலர் எழுத்து மூலம் தெரிவித்த கருத்துக்களில்,
''இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் எனக்கு படிப்பதே பிடிக்காது. ஆனால் இந்த நிகழ்ச்சி எனது எண்ணத்தை மாற்றி, ''நான் ஏன் பிறந்தேன் என்ற சிந்தனையை ஏற்படுத்தி, நான் ஒரு இலக்கை நிர்ணயித்து வாழ்ந்து சாதனையாளராக மாறிக்காட்ட வேண்டும் என்ற உந்துதலை என்னுள் ஏற்படுத்தி விட்டது''.
''எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியை பார்த்தபின் கல்வியின் முக்கியத்துவம், அதன் அவசியம் குறித்து தெளிவாக புரிந்து கொண்டேன்''
''நான் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சிக்காக வேண்டி நீண்ட காலம் எதிர்பார்த்திருந்தேன். IQ பற்றிய நிறைய விஷயங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. பயிற்சியாளர் சொன்ன '' Early morning wake up'' அவசியத்தை புரிந்து கொண்டேன். இனி என் வாழ்வில் இதனை கடைப்பிடிப்பதோடு என்னை மாற்றிக் கொள்வது குறித்தும் யோசிக்கவாரம்பித்தேன்.இதுவே எனது வெற்றியின் முதல் படி என உணர்கிறேன்''.
''இந்த நிகழ்ச்சியில் பேசியதை கேட்கும் போது நல்ல வேகம் வருகிறது.இன்ஷா அல்லாஹ்! இதனை கடைப்பிடித்து எதிர்காலத்தில் பெரிய ஆளாக ஆகுவேன். அப்போது இந்த நிகழ்ச்சி குறித்து நினைவு கூர்ந்து அதனை மக்களுக்கும் எடுத்துக் கூறுவேன்''.
''எனக்கு படிப்பில் இத்தனை வகை இருக்கிறது என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.இனி படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவேன்''.
''நிகழ்ச்சியில் சொன்ன கருத்துக்கள் மிகவும் அருமையாக இருந்தது.தற்போது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டும்தான் நிகழ்ச்சி நடத்தியுள்ளீர்கள்.எங்கள் பள்ளிக்கு வந்து இதர வகுப்பு மாணவிகளுக்கும் கல்வியின் அவசியம் குறித்து பேசினால் அனைவரும் பயன்பெறுவர்''.
'''இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதே இல்லை.இந்த நிகழ்ச்சியில் காமெடி கருத்துக்களுடன் அறிவுக்கூர்மையான கருத்துக்களை அழகாக மனதில் பதிய வைத்தார்கள்''
''இது போன்ற அருமையான நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும்''
இப்படி ஏராளமான மாணவ - மாணவியர் தங்களின் கருத்துக்களை எழுத்து மூலம் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. . '
நிகழ்ச்சியின் இறுதியில் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது நன்றியுரையாற்றினார். மாணவ-மாணவியர் பலன்பெறும் வகையில் இரண்டு நாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தித்தந்த ACCESS INDIA நிறுவனத்தின் பயிற்சியாளர்களுக்கும், கலந்து கொண்ட மாணவ-மாணவியருக்கும், அவர்களை அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவியர்கள் அனைவரையும் நிகழ்விடத்திற்கு அழைத்து வர தங்கள் கல்லூரியின் வாகனங்களை ஏற்பாடு செய்து தந்த வாவு வஜீஹா மகளிர் கல்லூரியின் நிர்வாகத்திற்கும், மாணவியருக்கான நிகழ்ச்சிகளின் போது பெண்கள் பகுதியில் பணியாற்றிய இக்ராஃ பெண் தன்னார்வலர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாடுகளில் ஒத்துழைப்பு நல்கிய கே.எம்.டி.சுலைமான், அல்ஹாபிஃழ் எம்.ஏ.செய்யது முஹம்மது, கத்தீபு மாமுனா லெப்பை, ஹபீபு இபுறாஹிம், நுஹ்மான், கல்ஃப் செய்யது மற்றும் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது தலைமையில் , பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், செயற்குழு உறுப்பினர் அல்ஹாபிஃழ் எம்.ஏ.செய்யது முஹம்மது, ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லாஹ், கத்தார் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீபு மாமுனா லெப்பை ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான அனுசரணையை ஜித்தா காயல் நற்பணி மன்றம் செய்திருந்தது.
இந்த பயனுள்ள நிகழ்ச்சிகளை நடத்திய ACCESS INDIA நிறுவனமானது மாணவ சமுதாயத்தின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் செயலாற்றி வரும் பொருளாதார நோக்கற்ற தொண்டு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தமிழக கிளை சார்பாக மட்டும் வருடம்தோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான தனித்தனி நிகழ்ச்சிகளை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. அத்துடன் அரசு வேலை வாய்ப்புகளில் நமது மக்களை கொண்டு செல்வதற்கான முயற்சிகளையும் செய்து வருகிறது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து காயல் நகரில் கூடிய விரைவில் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான நிகழ்ச்சியை தனித்தனியாக நடத்துவது குறித்தும், அரசுப் பணிகளுக்கு நமது மக்களை தயார் செய்வது குறித்தும் இக்ராஃவில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|