எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் ஆகியன இணைந்து, “பதியம்” என்னும் பெயரில் புதிய செயல்திட்டம் ஒன்றை துவங்கவுள்ளது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் முனைப்போடு, நம் மக்களிடம் புதிய & மாற்று சிந்தனையை கொண்டு செல்லும் முன்னோடி தளமாக “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பு விளங்குகிறது.
அதன் ஒரு பிரிவாக செயல்படும் “கண்ணும்மா முற்றம்”, குழந்தைகளிடம் - இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருவதை தாங்கள் அறிவீர்கள்.
பதியம் - சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!
இத்தகைய தொடர் முயற்சிகளுக்கிடையே, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் இணைவில், ‘பதியம்’ எனும் பெயரில் ஒரு புதிய செயல்திட்டம் ஒன்றை கண்ணும்மா முற்றம் பிரிவின் மூலம் துவங்கவுள்ளோம் (இறைவன் நாடினால்)!
நல்ல மண்ணில் பதியம் போடப்படும் செடிகொடிகள் - வேரூன்றி வளர்ந்து பெரிதாவதுபோல், பிஞ்சு நெஞ்சங்களில் விதைக்கப்படும் நற்கல்வியும் - அதனை அடைவதற்கான சரியான பாதையை அடையாளப்படுத்துவதும், சிறார்களின் படைப்பாற்றல் திறனை முறையாக வளரச் செய்து, எதிர்கால வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மைகொண்டதாக இருக்கிறது.
“இன்றைய பெரும்பாலான வாசகர்களும் எழுத்தாளர்களும் சிறுவர்-இதழ்கள் வழியே தான் வாசிப்பினை துவங்கினர்,” என்பது பிரபல சிறார் இலக்கியவாதி திரு விழியன் அவர்களின் கூற்று!
சிறுபிராயத்தில் இத்தகைய இதழ்களில் விரும்பி பதிவிடும் குட்டிக் கதைகளும் துணுக்குகளும், சிறார்களின் தன்னம்பிக்கையை வளர்த்து, இலக்கியத் துறை மீது அவர்களுக்கு புத்தார்வம் அளித்து, எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளர்களாக அவர்களை மாற்றிட வழிவகை செய்யும் என்னும் உறுதியான நம்பிக்கையே, இம்முயற்சிக்கு வித்தாக அமைகிறது.
தமிழில் வெளியாகும் சிறார் இதழ்களில், பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டும் முயற்சியே இந்த ‘பதியம்’!
செயல்முறை
1> குட்டிக் கதை, ஓவியம், பாட்டு, கவிதை, துணுக்கு, கட்டுரை, ஒளிப்படம், பயணக் கட்டுரை, நூல் அறிமுகம், நூல் மதிப்புரை & குழந்தைகளுக்கான திரைப்படங்களின் விமர்சனம் போன்ற பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் ஆக்கங்களை உருவாக்கிட தூண்டுதல் (பல்வேறு நிகழ்ச்சிகள் / பயிற்சிகளின் மூலம் அவர்களை ஊக்குவித்தல்).
2> ஆக்கங்கள் அனைத்தும் மாணவர்களே உருவாக்கியதாக இருத்தல் வேண்டும் (originality).
3> இறையருளுக்குப் பின், இத்திட்டத்தின் வெற்றியானது - இதில் பங்கேற்கும் பள்ளிகளின் ஒத்துழைப்பை சார்ந்தே அமையும் என்பதால், ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒரு பொறுப்பாசிரியர் அடையாளம் காணப்படுவார்.
4> ஆக்கங்களை மாணவர்கள் பள்ளியின் பொறுப்பாசிரியரிடம் வழங்கிட வேண்டும்.
5> பள்ளியின் பொறுப்பாசிரியர், கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்புவார்.
6> தேர்வுசெய்யப்பட்ட ஆக்கங்களை மட்டும் வகைப்படுத்தி, பொருத்தமான இதழ்களுக்கு ‘பதியம்’ மூலம் அனுப்பப்பட்டு – அவை பிரசுரிக்கும் வரை முறையே பின் தொடரப்பட்டு, பள்ளிக்கு தகவல் அளிக்கப்படும்.
7> குறிப்பிட்ட காலவரையறை ஏதும் இதற்கு இல்லாததால், எப்போதெல்லாம் மாணவர்கள் எழுதுகிறார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் – ‘பதியம்’ தளத்துக்கு (பள்ளியின் மூலம்) அனுப்பி வைக்கலாம்.
8> ஒரு மாணவர் எத்தனை ஆக்கங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
நவ. 25 சிறப்பு நிகழ்வில் துவக்கம்…
தேசிய கல்வி தினம், தேசிய நூலக வாரம் & குழந்தைகள் தினம் ஆகிய கொண்டாட்டங்களை முன்னிட்டு, 24.11.2017 & 25.11.2017 தேதிகளில் - பள்ளி மாணவர்களுக்கான இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம்.
இந்த சிறப்பு அமர்வுகளில், காகித மடிப்புக் கலையும் (ORIGAMI; ஒரிகமி) பயிற்றுவிக்கப்பட உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசியர்களான திரு. நிழல் & திரு. காந்தி ஆகியோர் இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.
இந்த கதைசொல்லல் அமர்வுகள், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 22 & 23-ஆவது நிகழ்வுகளாகவும் & கண்ணும்மா முற்றம் பிரிவின் 7 & 8-ஆவது நிகழ்வுகளாகவும் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றுள், 25.11.2017 அன்று அரசு பொது நூலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், ‘பதியம்’ செயல்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு - துவங்கப்பட உள்ளது (இறைவன் நாடினால்).
கூடுதல் தகவலுக்கு…
பள்ளிகளின் பொறுப்பாசிரியர்கள், மாணவர்களின் ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: fazel.ismail@gmail.com.
கூடுதல் தகவலுக்கு, ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் (ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு; 9962841761), ஜனாப் முஜீப் (நூலகர், காயல்பட்டினம் அரசு பொது நூலகம்; 9894586729) அல்லது பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களையோ அனுகலாம்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> நவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள்!!
(13.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19906)
2> கதை சொல்லுதலை வலியுறுத்தி - நாடு தழுவிய ’விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்’ மேற்கொள்ளும் திரு. குமார் ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு!
(07.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19883)
3> சிறார் நூல்கள் அறிமுகம் & கதைசொல்லல் நிகழ்வுகளோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)
4> கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்
(09.05.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
|