முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், அப்பள்ளியின் நிர்வாகம் & முன்னாள் மாணவர்கள் இணைவில், மூன்று மாத காலங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டுள்ளன. இது குறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:
பசுமைத் திட்டம்
கடந்த சில ஆண்டுகளாக, பூமியின் வெப்பம் மிகுதியாவதை நாம் நன்குணர்கிறோம். இந்த வெப்பத்தை குறைக்கும் முக்கிய காரணியாக மரங்கள் விளங்குகின்றன.
"மரங்களை வளர்த்தல் வறண்ட நிலப்பகுதியை பசுமையாக்கி, மண் வளத்தை பெருக்கி, பாலைவனமாக்கலை தடுத்து, உணவு பாதுகாப்பை உறுதி செய்து, நீர் நெருக்கடியை பெருமளவு குறைக்கிறது."
இந்த பேருண்மையை கருத்தில் கொண்டு, காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப் பள்ளியில் ‘பசுமைத் திட்டம்’ ஒன்றை, 24.08.2017 அன்று துவங்கினோம். புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!
இதன் மூலம், பள்ளி வளாகத்தின் பரந்த நிலப்பரப்பில், மிகுதியான மரங்களை வளர்த்து - பசுமை நிறைந்த ஒரு சோலைவனமாக அதனை மாற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மூன்று மாதங்களாக நடைபெறும் பணிகள்
துவக்கமாக, வல்லுநர்களிடம் முறையான ஆலோசனைகள் பெறப்பட்டு, சொட்டு நீர் பாசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பின்னர், பல்வேறு கட்டங்களாக, நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் நடவு செய்யும் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்நிகழ்வுகளுக்கு, பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரான ஹாஜி அப்துல் லத்தீஃப் தலைமை ஏற்க, பள்ளியின் துனை செயலாளர் ஜனாப் கே.எம்.டீ.சுலைமான் நெறிப்படுத்தி - முறையே அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
பள்ளியின் நிர்வாகி ஹாஃபிழ் இர்ஷாத் அலி, பள்ளியின் செயலாளர் ஹாஃபிழ் சம்சுதீன், முதல்வர் திரு ஆர். ரத்தினசாமி & மாணவியர் பிரிவின் தலைமை ஆசிரியை திருமதி சிரோன்மணி, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் & ஜனாப் ஃபழ்ல் இஸ்மாயீல், நவீன காயலின் முதல் விவசாயி ஜனாப் செம்பருத்தி 48 இப்றாஹீம், சமூக ஆர்வலர்கள் ஜனாப் அப்துல் பாசித் & ஹாஃபிழ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீது & இளைஞர் ஐக்கிய முன்னனியின் செயலாளர் ஜனாப் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பள்ளி வளாகத்தை பசுமையாக்க வேண்டுமென்ற நிர்வாகத்தின் நோக்கத்தை, (04.09.2017 அன்று நடைபெற்ற பயின்றோர் பேரவை கூட்டத்தில் கலந்துகொண்ட) முன்னாள் மாணவர்களும் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
25 நாட்டு மர / செடி வகைகள்
இத்திட்டத்தின் கீழ், புன்னை, மகிழம், இலுப்பை, கடம்பு, நீர் மருதம், செண்பகம், பூவரசு, மகாகனி, சரக்கொன்றை, மந்தாரை, நாவல், புங்கன், வேம்பு, அரச மரம், எலுமிச்சை, மாதுளை, நொச்சி, நந்தியாவட்டம், வாடாச்சி, நாட்டு செம்பருத்தி, தங்க அரளி, சிறியா நங்கை, நாக தாளி, நெல்லி & ரோசா என 25 வகையான மரக்கன்றுகள் & செடிகள் நடப்பட்டன. இவற்றுள், சில மூலிகை செடிகளும் அடங்கும்.
முதல் கட்ட நிகழ்வுக்கு (24.08.2017), மதுரையை சார்ந்த சிறுதானிய விவசாயி திரு.கார்த்திகேயன் பார்கவிதை சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பல வகையான நாட்டு மரக்கன்றுகளை (மொத்தம் 88), மதுரையில் இருந்து தருவித்ததோடு – முறையே அவற்றை நட்டு பராமரிப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
அதன் பின்னர், 07.10.2017 அன்று, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அன்பளிப்பாக வழங்கிய 50 மரக்கன்றுகள், பள்ளி வளாகத்தினுள் நடப்பட்டன.
பள்ளியின் தோட்ட பராமரிப்பாளர் திரு சாமி, மரங்களை நடும் பணிகளில் சிறப்புற செயல்பட்டதோடு, இன்றும் இத்திட்டம் தொடர்ந்து வெற்றிகரமாக இயங்குவதற்கு பெரும் பங்காற்றுகிறார். இந்நிகழ்வுகளில், ஆர்வமுள்ள மாணவ-மாணவியர்கள் & ஆசிரிய-ஆசிரியைகளும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இயற்கைக் கல்வி
08.10.2017 அன்று எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் இணைவில், மாணவர்களுக்கான இயற்கைக் கல்வி முகாம் ஒன்று, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்முகாமில், முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி உட்பட நகரின் 4 பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இயற்கை வளம், மரம் வளர்த்தலின் பயன், மண் பாண்டங்களின் நன்மைகள் & பறவைகள்-பூச்சிகள் குறித்த விழிப்புணர்வு என பல்வேறு சூழலியல் குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
மதுரையை சேர்ந்த பறவை ஆர்வலர் திரு. இரவீந்திரன் & ஆழ்வார்திருநகரியை சேர்ந்த குயவர் திரு. தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு பயிர்சியாளர்களாக கலந்துகொண்டனர்.
முகாமின் ஒரு பகுதியாக, பள்ளி வளாகத்தில் நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆர்வமுள்ள மாணவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில், காயல்பட்டினம் நகராட்சியின் முன்னாள் தலைவர் ஜனாபா ஆபிதா ஷேக் தலைமையேற்று சிறப்பித்தார்.
ஜனாப் கே.எம்.டீ சுலைமான் அவர்களுடன், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஜனாப் அ.ர.ஹபீப் இப்றாஹீம் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இயற்கை ஆர்வலரான ஜனாப் கவுஸ் முஹம்மது மரம் வளர்ப்பதன் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கி - செய்முறை பயிற்சி வழங்கினார்,
எதிர்காலத் திட்டங்கள்
இன்னும் வெவ்வேறு நாட்களில், இன்ன பிற மரக்கன்றுகளும் நடப்பட்டன. ஆக, இந்த மூன்று மாத காலத்தில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் / செடிகள் நடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
மரம் நடுவதோடு நம் பணி நிறைவுறாது. அவைகளுக்கு தேவையான அளவில் பாசன வசதி வழங்கி, சரியான இயற்கை உரம் இட்டு, தொடர்ச்சியான பராமரிப்பு பணியில் ஈடுபடுவதும் அவசியம் என்பதை நன்கு அறிந்துள்ளதால், அதற்கான பல்வேறு முயற்சிகளை, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் & பள்ளியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மீது பெருவிருப்பம் கொண்டுள்ள சமூக ஆர்வலர்களின் உதவிகொண்டு, முழுமையாக செயல்படுத்துகிறோம். வருங்காலங்கலில், இத்திட்டத்தின் நீட்சியாக – பள்ளி வளாகத்தின் ஏனைய வெற்று நிலங்களிலும் மரங்களை நட்டு பசுமையாக்கிடும் முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்த, இறையுதவியை கோருகிறோம்.
மரங்களை வளர்ப்பதோடு நில்லாமல், அதனைக்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அழகிய முறையில் இயற்கைக் கல்வியை வழங்கவும், தற்சார்பு வாழ்க்கைக்கான அடிப்படை பயிற்சிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் (இறைவன் நாடினால்).
நன்றி பாராட்டுதல்
இத்திட்டம் இதுவரை வெற்றிகரமாக நடந்திட அருள்புரிந்த வல்ல இறைவனை போற்றிப் புகழ்ந்தவர்களாய், இதற்காக பெரிதும் உழைத்த & நிதியுதவி அளித்த முன்னாள் மாணவர்கள் & தன்னார்வலர்கள்; நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, ஆலோசனைகள் வழங்கிய, களப்பணியாற்றிய சிறப்பு விருந்தினர்கள், பயிற்சியாளர்கள், முன்னாள் & இன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், முதல்வர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி ஊழியர்கள் & தோட்ட பராமரிப்பாளர் ஆகிய அனைவருக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்!
மேலும், இத்திட்டம் தொடர்ந்து செயல்படவும் வெற்றியடையவும் பிரார்த்திக்குமாறு, உங்களை பணிவன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1. பள்ளியை என்றும் இயற்கைச் சூழல் மாறாமல் பாதுகாக்க வேண்டும்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி பயின்றோர் பேரவை கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்!
(04.09.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19648)
2. நான்கு பள்ளிகளில் இருந்து 71 மாணவர்கள் பங்கேற்ற “இயற்கை முகாம்”!! எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & முஹ்யித்தீன் மெட்ரிக் மேனிலைப் பள்ளி இணைவில் நடைபெற்றது!!
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல், களப்பணி & ஒளிப்படங்கள்
ஹாஃபிழ் இர்ஷாத் அலி, கே.எம்.டீ.சுலைமான், ஷேக் முஹம்மது, அப்துல் பாசித், ஹாஃபிழ் பீ.எஸ்.ஷாஹுல் ஹமீது, ஃபழ்ல் இஸ்மாயீல், சாளை பஷீர் ஆரிஃப், கவுஸ் முஹம்மது, செம்பருத்தி 48 இப்றாஹீம் & அ.ர.ஹபீப் இப்றாஹீம்
செய்தியாக்கம்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
|