காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, 22.11.2017. புதன்கிழமையன்று தூத்துக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது திறந்து வைத்தார். முன்னதாக, விழாவில் பங்கேற்க வந்த முதல்வரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்று, மேடைக்கு அழைத்துச் சென்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள – காயல்பட்டினம் நகராட்சிக்கான புதிய கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களின் விபரப் பட்டியல்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள – காயல்பட்டினம் நகராட்சிக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்ட அரசு நலத் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அவற்றின் விபரப் பட்டியல்:-
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து – தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆற்றிய உரை வருமாறு:-
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆற்றிய உரை வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிய கட்டிடம் அமைய முழுக் காரணமான – நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் – அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் குறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இன்று - புதிய நகர்மன்ற கட்டிடம் - எல்லாப்புகழும் இறைவனுக்கே!
நாளை - ஊழல், லஞ்சம் இல்லாத காயல்பட்டினம் நகர்மன்றம் - இறைவன் நாடினால்!!
அன்புடையீர்,
இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
1.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நகர்மன்ற கட்டிடம் - இன்று (நவம்பர் 22, 2017) - தமிழக முதல்வரால், அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது - எல்லாப்புகழும் இறைவனுக்கே!
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பொறுப்புக்கு வந்த புதிய நகர்மன்றம் செயல்பட - ஒழுங்கான நகரமன்ற கட்டிடம் கூட கிடையாது. நகர்மன்றத்தலைவரின் அறை பழுதடைந்த நிலையில் மூடப்பட்டிருந்தது. பழுதடைந்த கூட்டரங்கில்தான், நகர்மன்றத்தலைவர் - தனது பணிகளை செய்து வந்தார்.
இந்த சூழலில் தான் சென்னை சென்ற நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், நிலைமையை எடுத்துரைக்க - நகர்மன்றதீர்மானம் இயற்றித்தந்தால் - புதிய கட்டிடம் கட்ட, அனுமதி தருவதாக அப்போதைய நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் - திரு சந்திரகாந்த் காம்ப்ளே IAS, நகர்மன்றத்தலைவரிடம் உறுதியளித்தார்.
மார்ச் 2012 இல் மாதிரி கட்டிடம் வரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 17, 2012 இல் நடந்த நகர்மன்றக்கூட்டத்தில் - தீர்மானம் எண் 198 மூலமாக தூவப்பட்ட விதை, இன்று வளர்ந்து - கம்பீரமான கட்டிடமாக காட்சியளிக்கிறது.
2012 - 13 நிதியாண்டிலேயே இதற்கான நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் ஓர் ஆண்டு ஆகும் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவிக்க - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. அரசு மூலம் நிதி ஒதுக்கப்படும் வரை காத்திராமல், புதிய கட்டிடம் உருவாக்க - தனிப்பெண்மணியாக - அதற்கான பணிகளை துவக்கினார்.
நகராட்சியினை முடக்கும் நோக்கத்தில் உறுப்பினர்கள் நகர்மன்றக் கூட்டங்களைப் புறக்கணிக்கும் காட்சிகளும், வெளிநடப்பு செய்யும் காட்சிகளும் ஒரு புறம் அரங்கேறி கொண்டிருக்க - புதிய நகர்மன்ற கட்டிடம் உருவாக்குவதற்கான ஆயத்தப்பணிகளை முழுவீச்சில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் முன்னின்று செய்தார்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவரை பதவி நீக்கம் செய்ய உறுப்பினர்கள் முழுவீச்சில் பணியாற்றி வந்த மார்ச் - ஏப்ரல் 2013 காலகட்டத்தில், 2013-14 பட்ஜெட்டில் காயல்பட்டினம் நகர்மன்றம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட - முழுமுயற்சியில் நகர்மன்றத்தலைவர் ஈடுபட்டிருந்தார்.
ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெறவிருந்த முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டத்திற்கு ஏப்ரல் 3 அன்று உயர்நீதிமன்றம் தடைவழங்கிய அதே வாரத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா - காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நகர்மன்ற கட்டிடத்திற்கு 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
கட்டிட வரைப்படம் சமர்ப்பிக்கப்பட்டு, DTCP அனுமதி பெற சில சிக்கல்கள் எழ, அப்போதைய DTCP ஆணையரை சென்னையில் நேரடியாக சந்தித்து - அனுமதியையும் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் பெற்றார்.
வழமையான அரசு கட்டிடமாக இல்லாமல், நவீன கட்டிடமாக இருக்கவேண்டும், பொது மக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் இருக்கவேண்டும், கூட்டரங்கம் பொது மக்கள் வருகைபுரிந்து அவதானிக்க வசதியாக இருக்கவேண்டும், என்பதில் உறுதியாக இருந்த நகர்மன்றத்தலைவர், கட்டிடத்திற்கான வரைபடமும் - அனுபவம் வாய்ந்த வல்லுநர்களால் தயாரிக்கப்படவேண்டும் என முடிவு செய்து, அதற்கான தனி ஒப்பந்தப்புள்ளியும், மாநில அளவில் - ஆகஸ்ட் 2013 இல் கோரினார். பல்வேறு நாடுகளில் அலுவலகம் கொண்ட RAYYAN IBRAHIM ARCHITECTS (P) LIMITED என்ற நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியும், வடிவமும் தேர்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து பிப்ரவரி 2014 இல் புதிய நகர்மன்றம் கட்டிட ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. தளவாணிமுத்து என்பவர் ஒப்பந்தப்புள்ளியும் பெற்றார். ஓர் ஆண்டு கழித்து - ஜனவரி 2015 இல் - பழைய கட்டிடத்தை அகற்ற ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு - பழைய கட்டிடம் அகற்றப்பட்டது.
பிப்ரவரி 2015 இல் - அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடந்த விழாவில் - புதிய நகர்மன்றத்திற்கான - அடிக்கல் நாட்டப்பட்டது. நகர்மன்றத்தலைவருடன் பல கருத்துவேறுபாடுகளில் இருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் - இக்கட்டிடம் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் தனிப்பெரும் முயற்சி என அக்கூட்டத்திலேயே அறிவித்தார்.
கட்டிட மாதிரி வரைபடம்:-
கட்டிட திட்ட வரைபடம்:-
கட்டிட மாதிரி வரைபடத்தை அரசு விழாவில் அறிமுகப்படுத்துகிறார் அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்:-
நகர்மன்றத் தலைவரின் பெயர் இக்கட்டிட கல்வெட்டில் இடம்பெறக்கூடாது, அவர் பதவி காலத்தில் இப்பணிகள் நிறைவுபெற்று அவ்வளாகத்தில் இருந்து அவர் பணியாற்றக்கூடாது என உறுதியாக சில நகர்மன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும், ஆதிக்க சக்திகளும் இருந்தார்கள். அந்த அளவில் வெற்றியும் கண்டார்கள். அதன் விளைவாக - ஓர் ஆண்டுகளில் நிறைவு செய்யப்படவேண்டிய பணிகள், இரண்டரை ஆண்டுகள் கழித்து நிறைவு பெற்றுள்ளன.
இன்று துவக்கப்படும் அக்கட்டிடத்தில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் பெயர் இல்லை; தனி பெண்மணியாக உருவாக்கிய அக்கட்டிடத்தில் இன்று அவர் நகர்மன்றத்தலைவராக இல்லை.
ஆனால் - காயல்பட்டினம் நகராட்சியில், ஐந்தாண்டுகளாக - ஊழல் - லஞ்சத்திற்கு எதிராக, நகரின் ஆதிக்க சக்திகளின், பணம் படைத்த அதிகார வர்க்கத்தின் சதி திட்டங்களை எதிர்த்து - ஐ.ஆபிதா சேக் என்ற பெண்மணி துணிச்சலாக நின்று, வெற்றிக்கண்டத்திற்கான அடையாள சின்னமாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் புதிய கட்டிடம் - திகழும்; வரலாறும் அவ்வாறே சான்றுரைக்கும்.
நம் வரிப்பணத்தில் சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு, நமக்கு சேவை செய்ய லஞ்சம் கோரும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் கேள்விகேட்டு, சட்டத்திற்கு முன்பு நிறுத்தும் துணிவுக்கொண்டவர்களும்,
தங்கள் சுய லாபங்களுக்காக திட்டங்களை கொண்டுவராமல், மக்கள் வரிப்பணம் - முழுமையாக மக்கள் பணிகளிலேயே செலவு செய்யப்படவேண்டும் என்ற தூய நோக்கம் கொண்டு செயலாற்றும் நகர்மன்றத்தலைவரும், நகர்மன்ற உறுப்பினர்களும் - எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று
அப்புதிய கட்டிடத்திற்குள் - இறைவன் நாடினால், மக்கள் பிரதிநிதிகளாக நுழைந்து - நல்லாட்சி வழங்கிட, இத்தருணத்தில் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 22, 2017; 10:30 am]
[#NEPR/2017112201]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காயல்பட்டினம் நகராட்சிக்குப் புதிய கட்டிடம் திறக்கப்பட்டதையொட்டி, அக்கட்டிடம் மின் விளக்குகளாலும், கட்டிடத்தின் முன் வண்ணக்கோலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|