காயல்பட்டினத்தையும் உள்ளடக்கிய - தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, குறைந்தபட்சம் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளையேனும் காயல்பட்டினத்தில் மேற்கொள்ள – நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் நேரில் கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் - தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து குறைந்தது 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் நட்டர்ஜியிடம் நடப்பது என்ன? குழுமம் – 24.11.2017. வெள்ளிக்கிழமையன்று கோரிக்கை வைத்துள்ளது.
இது சம்பந்தமாக - தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து - நடப்பது என்ன? குழுமம் நிர்வாகிகள் இன்று வைத்த கோரிக்கைகளின் முழு விபரம் வருமாறு:
காயல்பட்டினம் நகரம் - தூத்துக்குடி மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஊர் என்பதை தாங்கள் அறிவீர்கள். சுமார் 45,000 மக்கள், 32,000 வாக்காளர்கள் கொண்ட ஊர் - காயல்பட்டினம் ஆகும். 12.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட, இக்கடலோர ஊருக்கு என பல்வேறு தேவைகள் உள்ளன. மத்திய அரசாங்கம் - ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், அவரின் தொகுதியின் தேவைகளை பூர்த்தி செய்ய - ஆண்டொன்றுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்குகிறது.
இந்த நிதியின் மூலம் - அத்தொகுதியின் அனைத்து பகுதி மக்களும், வளர்ச்சி திட்டங்கள் பெற விரும்புவர் என்பதனை தாங்கள் அறிவீர்கள்.
மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஊர் என்ற அடிப்படையில் எங்கள் நகருக்கு - தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம், அதிகளவில் பணிகள் நடைபெறவேண்டும் என நாங்கள் எதிர்பார்த்தாலும், பிற பகுதி மக்களும் இதே எதிர்பார்ப்பில் இருப்பர் என்பதை கருத்தில் கொண்டு, தூத்துக்குடி நாடாளுமன்ற வாக்காளர்கள் எண்ணிக்கையில், காயல்பட்டினம் வாக்காளர்கள் - 2.5 சதவீதம் என்பதால், தங்களுக்கு மத்திய அரசு - ஐந்தாண்டுகளில் ஒதுக்கும் 25 கோடி ரூபாயில், 2.5 சதவீதமான, 65 லட்சம் ரூபாய் - காயல்பட்டினம் நகர் பணிகளுக்கு ஒதுக்கிட - தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு, பல்வேறு தேவைகள் உள்ளன. அங்கு தற்போது - பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள் - மிகவும் பழமை வாய்ந்தவை. எனவே - நவீன XRAY, SCAN, DIALYSIS கருவிகளை - காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு - தங்கள் தொகுதி நிதி மூலம் வழங்கிட தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் - தங்கள் தொகுதி நிதிமூலமாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் - இரத்த வங்கி துவங்கிட - ஆவனம் செய்யும்படியும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் - காயல்பட்டினம் கடற்கரை பகுதியில், பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதால் - அவற்றை தடுக்கவும். மாநில நெடுஞ்சாலை, பிரதான மாவட்ட சாலை உட்பட நகரின் பிரதான சாலைகளின் பாதுகாப்புகளை கருத்தில் கொண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் - CCTV கேமரா பொருத்திட ஆவனம் செய்யவும் தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் - MPLADS திட்டத்தின் ஓர் அம்சமான "ONE MP - ONE IDEA" என்ற திட்டத்தின்படி, காயல்பட்டினம் பகுதியின் அனைத்து மக்களின் ஆலோசனைகளை கேட்டும், அனைத்து பகுதி மக்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளை அறிந்தும் - இந்நிதிமூலம், பணிகள் மேற்கொள்ளவும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 24, 2017; 8:00 pm]
[#NEPR/2017112401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|