எழுத்து மேடை மையம் - தமிழ்நாடு & காயல்பட்டினம் அரசு பொது நூலகம் ஆகியன இணைந்து, ‘பதியம்’ என்னும் பெயரில், சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியது. அதன் முதலாவது முயற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட உள்ள ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, ‘பதியம்’ தளம் மூலம் - காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகக் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் தனி பிரிவாக செயல்படும் கண்ணும்மா முற்றம், குழந்தைகளிடம் - இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை செய்து வருகிறது.
‘பதியம்’ – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!
காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தின் இணைவில், கண்ணும்மா முற்றம் பிரிவின் ஒரு புதிய செயல்திட்டமாக, ‘பதியம்’ என்னும் பெயரில் சிறார் இலக்கிய தளம் ஒன்றை அண்மையில் துவங்கியதை தாங்கள் அறிவீர்கள்.
தமிழில் வெளியாகும் சிறார் இதழ்களில், பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டுவதே, ‘பதியம்’ தளத்தின் நோக்கமாகும்!
அவ்வகையில், தமிழகத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய ஆர்வலர்களால் ஒருங்கிணைக்கப்பட உள்ள ‘கதை வண்டி’ எனும் திட்டத்தில் பங்கேற்க, காயல்பட்டினம் பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
‘கதை வண்டி’ – சிறார்களுக்காக சிறார்களே கதை எழுதும் முயற்சி!
தமிழில் சிறுவர்களுக்கான கதைகளை அவர்களே எழுதும்போது அவை இன்னும் உயிர்ப்போடு இருக்கும். அதற்கான ஒரு முயற்சியே இந்த ‘கதை வண்டி’ பயணம். இதனை சிறுவர் இலக்கிய ஆர்வலர்களான திரு விழியன், திரு விஷ்ணுபுரம் சரவணன் & திரு வெற்றிச்செழியன் மற்றும் ஓவியர் திருமதி வித்யா ஆகியோர் அடங்கிய குழுமம், தமிழக அளவில் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்க உள்ளது.
தமிழில் கதைகள் எழுத ஆர்வமாக இருக்கும் ஒரு சில சிறார்களை தேர்ந்தெடுத்து, அவர்களுடன் நேரிலும், அஞ்சல் & தொலைபேசி வழியாகவும், கதை வண்டி திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு - ஒரு வருட காலம் பயணிக்க இருக்கிறார்கள். அதன் வாயிலாக, சிறார்களுக்குள் இருக்கும் கதை எழுதும் ஆற்றலை வெளிக்கொணர அவர்கள் உதவுவர்.
பயணத்தின் முடிவில், ஒவ்வொருவரின் கதைகளையும் தனித்தனிப் புத்தகமாக்கி, சிறப்பான விழாவில் அவற்றை வெளியிடவும் இருக்கிறார்கள்.
தேர்வு செயல்முறை
உங்கள் வீட்டில்/பள்ளியில், கதை எழுத ஆர்வமாக இருக்கும் பிள்ளைகள் இருப்பின், அவர்களே சொந்தமாக தமிழில் எழுதிய கதைகளை மின்னஞ்சல் வழியாக ‘பதியம்’ தளத்திற்கு அனுப்ப வேண்டும். சிறார்கள் & பெற்றோர்களைப் பற்றிய தன்னறிமுகக் குறிப்பையும் (பெயர், பெற்றோர், படிக்கும் வகுப்பு/பள்ளி, தொடர்பு எண், முகவரி உள்ளிட்டவை) அத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
>> வயது: 9 வயது முதல் 14 வயது வரை
>> கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: திங்கள், 25 டிசம்பர் 2017
>> கதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: fazel.ismail@gmail.com
>> ஒருவர் எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
>> வார்த்தை வரம்பு ஏதுமில்லை
சிறார்களிடம் இருந்து பெறப்படும் கதைகள் அனைத்தும், ‘பதியம்’ தளம் மூலம் ‘கதை வண்டி’ ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அனுப்பப்படும். அக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எழுதிய சிறார்களுக்கு (மட்டும்), அடுத்த கட்டப் பயிற்சி குறித்த தகவல் வழங்கப்படும்.
இந்த முதல் முயற்சியைத் தொடர்ந்து, ‘பதியம்’ தளத்தின் இன்ன பிற செயல்பாடுகள் முறையே துவங்கும் (இறைவன் நாடினால்).
கூடுதல் தகவலுக்கு…
கூடுதல் தகவலுக்கு, ஜனாப் முஜீப் (நூலகர், காயல்பட்டினம் அரசு பொது நூலகம்; 9894586729), ஜனாப் கே.எம்.டீ சுலைமான் (துனை செயலாளர், முஹ்யித்தீன் மெட்ரிக்குலோஷன் மேனிலைப் பள்ளி; 9486655338) & ஜனாப் சாளை பஷீர் ஆரிஃப் (ஒருங்கிணைப்பாளர், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு; 9962841761) ஆகியோரில் ஒருவரை அனுகலாம்.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> “பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!! அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம்!! எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!
(22.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19944)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்
விழியன், வித்யா, விஷ்ணுபுரம் சரவணன் & வெற்றிச்செழியன்
ஒருங்கிணைப்புக் குழு – ‘கதை வண்டி’
செய்தியாக்கம்
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
|