காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கில் ஒவ்வொரு முறையும் தீ மூட்டப்பட்டபோது அதைத் தொடர்புபடுத்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பிக் குளிர்காய்ந்த கூட்டம் தொடர்பாக – “நடப்பது என்ன?” குழுமத்தால் நான்காம் பாக அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பாகம் 3 இல், 25 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் பப்பரப்பள்ளி பகுதியில் ஏன் முற்கூட்டியே நீதிமன்றம் நாடியிருக்கவேண்டும் என விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
ஒரு தீர்வை எதிர்பார்த்து - நீதிமன்றத்தையோ, தீர்ப்பாணையத்தையோ - ஒருவர் நாடும் போது, அந்த வழக்கை அனுமதிக்கும் கட்டத்திலேயே (ADMISSION STAGE) - தவறு / விதிமீறல் நடந்து, எத்தனை காலம் கழித்து (LIMITATION) - நீதிமன்றத்தின் கதவு தட்டப்பட்டுள்ளது என நீதிமன்றம் பார்க்கும்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்படும் இடத்தையும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் ஒரு தொழிற்சாலையையும் - "தடை செய்யுங்கள்" என்ற சாதாரண வழக்கு மூலமாக - தடை செய்வது கடினமாகும். காலம் தாழ்த்தி - நீதிமன்றங்களை அணுகும்போது, இத்தனை காலம் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி தான் முதலில் - நீதிமன்றத்தில் எழுப்பப்படும் (LIMITATION).
இதன் காரணமாக தான் - DCW குறித்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கெப்பா அமைப்பு மூலமாக தொடுக்கப்பட்டபோது - ஏற்கனவே சுற்றுச்சூழலை கடுமையாக பாதித்துள்ள DCW தொழிற்சாலையை விரிவாக்கம் (EXTENSION) செய்ய அனுமதிக்க கூடாது என வழக்கு தொடரப்பட்டது.
1958 ஆம் ஆண்டு முதல் செயல்புரிந்து வந்த தொழிற்சாலைகளை மூட விண்ணப்பம் செய்திருந்தால், வழக்கு அனுமதிக்கப்படும் கட்டத்திலேயே, 60 ஆண்டுகளாக என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கும். எங்களின் மூதாதையர்கள் அதன் பாதிப்புகளை உணராமல் அனுமதித்து விட்டார்கள் என்ற வாதங்கள் நீதிமன்றத்தில் செல்லாது. நீதிமன்றத்தை பொறுத்தவரை "சட்டம் அறியாமை" (IGNORANCE OF LAW), ஒரு வாதமாக ஏற்றுக்கொள்ளவே படாது.
அது போல தான் - பப்பரப்பள்ளி பிரச்சனையும் கூட.
துவக்க கட்டங்களிலேயே, அதற்கான தடையை நீதிமன்றத்தில் பெறாமல் - குப்பைக்கொட்டப்பட துவங்கி, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பிறகு, நீதிமன்றத்தை நாடினால் - எளிதாக, அவ்விடத்தில் குப்பையை கொட்ட தீர்ப்பாயம் தடை வழங்காது. வழக்கு அனுமதிக்கப்படும் கட்டத்திலேயே, அவ்விடத்தில் / இவ்விசயத்தில் தொடர்ச்சியான விதிமீறல்கள் உள்ளன (CONTINUOUS, ONGOING VIOLATION) என எடுத்துரைத்து நீதிமன்றத்தை திருப்தி அடைய செய்தால் தான் மட்டுமே வழக்கே அனுமதிக்கப்படும்.
அவ்வாறு வழக்கு அனுமதிக்கப்பட்ட பிறகும், நாம் விரும்பும் தீர்ப்பை பெற - பல கேள்விகளுக்கு திருப்தியான பதிலை வழங்க வேண்டியிருக்கும்.
குப்பைகள் கொட்ட துவங்கும்போது - அப்பகுதியில் குடித்தனங்கள் இல்லை என்ற வாதத்தை வைத்து, தடை கோர இயலாது. அவ்வாறு கோரினால் - குப்பை கொட்டப்படும் இடத்தில் இருந்து, கணிசமான தூரத்திற்கு கட்டுமானங்களுக்கு அனுமதி கிடையாதே (NO DEVELOPMENT ZONE), ஏன் குடித்தனங்களை கட்டினீர்கள் என்ற கேள்வியை தீர்ப்பாயம் எழுப்பும்.
இந்த குப்பைக்கிடங்கால், நிலம் / சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என வழக்கு பதிவு செய்தால், ஏன் சுற்றுச்சுவர் கட்டவில்லை; ஏன் நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி, அந்நடவடிக்கைகளை மேற்கொள்ள - நகராட்சிக்கு, கால அவகாசம் தான் தீர்ப்பாயம் வழங்கும்.
குப்பைகளை அவ்விடத்தில் கொட்ட எந்த அனுமதியும் பெறவில்லை என வழக்கு பதிவு செய்தால், ஏற்கனவே பல ஆண்டுகளாக குப்பைகொட்டப்பட்டு வருவதால், உடனடியாக தீர்ப்பாயம் தடை வழங்காது. சில கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அரசு துறைகளிடம் - அவ்விடத்தில் குப்பைகொட்ட, அனுமதி பெறுங்கள் என நீதிமன்றம் கூறும். இது தான் - பயோ காஸ் திட்டம் வழக்கில் நடந்தது. அந்த வழக்கு பதிவு செய்யப்படும்போது, எவ்வித அரசு அனுமதியும் இல்லை; வழக்கு நிலுவையில் இருந்த காலகட்டத்தில், அதற்கான அனுமதிகள் பெறப்பட்டன.
ஒரு குப்பைக்கிடங்கின் ஆயுட்காலம் சுமார் 25 ஆண்டுகள்; அதனையும் தாண்டி - தற்போதைய குப்பைக்கிடங்கு பயன்பாட்டில் உள்ளது என்றோ, அல்லது கடுமையான வகையில் - அந்த பகுதி நிலங்களும், அந்த பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஆய்வறிக்கைகள் - புள்ளிவிபரங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தை நாடினால் - விரைவில் மாற்று இடம் பார்க்க உத்தரவிட்டு - வழக்கினை, தீர்ப்பாயம், முடிவுக்கு கொண்டு வரும். ஆனால் அதற்கு எளிதான மாற்று இல்லாத காரணத்தால், - தற்போது பயன்பாட்டில் உள்ள குப்பைக்கிடங்கை உடனடியாக மூட உத்தரவிடாது.
மேலே விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான், நடப்பது என்ன? குழுமமோ/மெகா அமைப்போ - பப்பரப்பள்ளி விஷயத்தில், தீர்ப்பாயத்தை நாட, பெரிய முயற்சிகள் எடுக்கவில்லை. பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு சம்பந்தமாக - கடந்த ஆண்டு தீர்ப்பாயத்தில், S.A.K.சேக் தாவூது மற்றும் A.பன்னீர்செல்வம் என்ற இருவர் பெயரில், தொடரப்பட்ட வழக்கில் கூட (Application No.221/2016; NATIONAL GREEN TRIBUNAL [SOUTH ZONE]), பப்பரப்பள்ளியில் குப்பையை கொட்ட தடை வழங்கப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மாற்று இடம் குறித்த முடிவு வரும்வரை, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள குப்பை கிடங்கினால் - அப்பகுதி மக்கள் சந்தித்து வரும் - குப்பைகள் தீமூட்டப்படும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சிகளை நடப்பது என்ன? குழுமம் மேற்கொண்டது.
அதன் பயனாக - குப்பைகள் எரிக்கப்பட்டால், காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற ஆணையையும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், நடப்பது என்ன? குழுமம் வாயிலாக பெறப்பட்டு, அந்த ஆணைக்கு பிறகும் குப்பைகள் ஒரு சில முறை எரிக்கப்பட்டவுடன், காவல்நிலையத்தில் - நடப்பது என்ன? குழுமம் மூலம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு - காவல்த்துறை ஆய்வாளர், கடுமையான எச்சரிக்கை விடவே, நகராட்சி ஊழியர்களால் குப்பைகள் எரிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்விஷயத்தில் - நடப்பது என்ன? குழுமம் நடவடிக்கை எடுக்கும்வரை, குப்பைகள் எரிக்கப்படும் சம்பவங்கள் அனைத்தும் - நடப்பது என்ன? குழுமம் / அங்கத்தினர் மீது அவதூறுகள் பரப்பவும், கொம்புத்துறை (கடயக்குடி) வழக்கில் ஒரு வாதமாகவுமே - பயன்படுத்தபட்டப்பட்டது. அப்பகுதி மக்களுக்காக குரல் கொடுப்பதாக நாடகமாடியவர்கள் - குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க, ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 1, 2017; 11:00 am]
[#NEPR/2017120103]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|