காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அருகில், கே.டீ.எம். தெரு – முதன்மைச் சாலை சந்திப்பில் பழுதடைந்துள்ள நெடுஞ்சாலைப் பகுதியை நேரில் பார்வையிட வருவதாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திடம் – நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை (#176), பல இடங்களில் பழுதடைந்துள்ளது குறித்து கடந்த செப்டம்பர் மாதம், மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அக்டோபர் 30 க்குள் - பழுதுகள் புனரமைக்கப்படும் என - தூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர், நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஹாஜியப்பா பள்ளி அருகே புனரமைக்கும்பணி நடந்தது. மழை நீர் தேங்கியிருந்த காரணத்தால், அஜ்ஹர் சந்திப்பில் - அடுத்த சில தினங்களில், புனரமைப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை தொடர்ந்து அப்பணிகள் துவக்கப்படவில்லை.
29.11.2017. முதல் - நகரில் பலத்த மழை துவங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் நீர் தேங்கி - சிறு, சிறு விபத்துகள் நடந்துள்ளன.
இதுகுறித்து - திருச்செந்தூர் பிரிவு பொறியாளரிடம் வினவியதில் திருப்தியான பதில் வழங்கப்படவில்லை. மழை நீர் தேங்கியிருப்பதால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அவர் தெரிவித்தார். அதனால் தான் - மழை காலத்திற்கு முன்பே, இது குறித்த தகவல் - நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்கப்பட்டது என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக - தூத்துக்குடி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திரு பாலசுப்ரமணியம் அவர்களை நடப்பது என்ன? குழுமம் தொடர்புக்கொண்டு, விபரீத நிலையை எடுத்துக்கூறியது. சனிக்கிழமை தான் நேரடியாக காயல்பட்டினம் வந்து அப்பகுதியை பார்வையிட வருவதாக அவர் உறுதியளித்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 30, 2017; 12:30 pm]
[#NEPR/2017113003]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|