காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
விதிமுறைகளைப் பின்பற்றினால் குப்பைக்கிடங்குக்கு அவசியமே இருக்காது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளதை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் ஐந்தாம் பாக அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
கடந்த ஆண்டு - செப்டம்பர் 29 அன்று, பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைகொட்டப்படுவது சம்பந்தமாக, S.A.K.சேக் தாவூத் மற்றும் A.பன்னீர்செல்வம் ஆகியோர் பெயரில் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில் வழக்கு போடப்பட்டிருந்தது [Application No.221/2016]. சுமார் 7 மாதங்கள் விசாரணையில் இருந்த இவ்வழக்கின் தீர்ப்பு - இவ்வாண்டு ஏப்ரல் மாதம், 12 ஆம் தேதி வழங்கப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பு வெளியான அன்று - ஹாஜி ராவண்ணா அபுல்ஹசன் என்பவர் பேசுவதாக சமூக ஊடகங்களில் ஒரு குரல் பதிவு வெளியானது. அதில் - பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு இடத்தில் குப்பைக்கொட்ட தடைபெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு சில தினங்கள் கழித்து வெளிவந்த அத்தீர்ப்பின் முழு விபரங்கள், வேறு விதமாக - அதாவது, சாலையோரங்களில் குப்பைகளை கொட்ட தடை என்ற வாசகங்கள் கொண்டே - அமைந்திருந்தது.
அந்த தீர்ப்பின் வாசகமும், அதன் தமிழாக்கமும் கீழே வழங்கப்பட்டுள்ளது:
The application is therefore disposed directing respondent No.4 not to dump any Solid Waste on the sides of L.F. Road or the roads, passing through the residential area at Papparapalli or anywhere else in the Municipality. Respondent Nos.1 and 2 are directed to keep a vigil on the activities and see that Municipality does not dumping any solid waste on the sides of the road. (Original English Version)
எனவே - இந்த வழக்கு, நான்காவது எதிர்மனுதாரருக்கு (காயல்பட்டினம் நகராட்சிக்கு) - எல்.எப்.சாலை ஓரங்களிலோ, பப்பரப்பள்ளியில் மக்கள் வாழும் பகுதி வழியாக செல்லும் சாலைகளின் ஓரங்களிலோ, நகரின் இதர மக்கள் வாழும் பகுதி வழியாக செல்லும் சாலைகளின் ஓரங்களிலோ - குப்பைகள் கொட்டப்படக்கூடாது - என்ற உத்தரவை பிறப்பித்து முடித்துவைக்கப்படுகிறது.
எதிர்மனுதாரர் 1 (மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர்) மற்றும் எதிர்மனுதாரர் 2 (மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்) ஆகியோர் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து, நகராட்சியினால் - சாலையோரங்களில் எந்த திடக்கழிவுகளில் கொட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். (தமிழாக்கம்)
25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன் ஆயுட்காலத்தையும் தாண்டி பயன்பாட்டில் உள்ள பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு பகுதியை, விஞ்ஞானபூர்வமான மூடலுக்கு (Scientific Closure) கொண்டு வர ஆயத்த பணிகள் உடனடியாக துவக்கப்படுவதும் அவசியம் ஆகும். ஆனால் - இது சம்பந்தமாக, 221/16 (NGT [SZ]) எண் வழக்கில் ஒன்றும் சொல்லப்படவில்லை.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டவர்கள், சாலைகளிலும், சாலை ஓரங்களிலும் குப்பைக்கொட்டக்கூடாது என மட்டும் உத்தரவு வேண்டி - வழக்கப்போட்டிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் - அத்தீர்ப்பின் வாசகங்கள் அவ்வாறே அமைந்துள்ளது.
அந்த தீர்ப்பினை தொடர்ந்து, பப்பரப்பள்ளி பகுதியில் குப்பைக்கொட்டப்படுவது இன்று வரை நிறுத்தப்படவில்லை. ஆனால் - அங்குள்ள குப்பைக்கிடங்கை சுற்றி, முள்வேலி தடுப்பு சுவர் - நகராட்சியின் மூலம் - தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது, குப்பைகள் - சாலைகளுக்கு சென்றுவிடாமல் தடுக்க என தெரிகிறது.
பாகம் 4 இல் நாம் விளக்கியது போல் - ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ஒரு குப்பைக்கிடங்குக்கு, அவ்வளவு எளிதாக தீர்ப்பாயம் தடை வழங்காது. அதன்படியே தான் - இந்த வழக்கிலும் தீர்ப்பு அமைந்திருந்தது.
இப்பிரச்சினைக்கான ஒரு தீர்வை - S.A.K.சேக் தாவூத் மற்றும் A.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் (221/2016 [NGT;SZ]) - நீதிபதி எம்.எஸ்.நம்பியார், ஒரு விளக்கம் மூலம் பதிவு செய்துள்ளார்.
If the Solid Waste Management Rules, 2016 is strictly complied with, there would be no necessity for a dumping site as was originally required under Municipal Solid Wastes (Management & Handling) Rules, 2000. (Original English Version)
Solid Waste Management Rules, 2016 என்ற (புதிய சட்டத்தின்) விதிமுறைகளை, சரியாக பின்பற்றினால், Municipal Solid Wastes (Management & Handling) Rules, 2000 (என்ற முந்தைய சட்டத்தின்) விதிமுறைப்படி தேவைப்பட்ட குப்பைக்கிடங்கு என ஒன்று தேவையே படாது. (தமிழாக்கம்)
நீதிபதி எம்.எஸ்.நம்பியார் தெரிவித்துள்ளது போல் - Solid Waste Management Rules, 2016 விதிமுறைகளை, காயல்பட்டினம் நகராட்சி முறையாக அமல்படுத்தி, மக்கும்குப்பை (Degradable Waste) மற்றும் மக்காத குப்பை (Non-degradable Waste) என குப்பைகள் உருவாகும் இடத்திலேயே பிரித்து (Source Segregation), அவைகளை முறையாக அழித்தால் (Dispose)/மறு சுழற்சி செய்தால் (Recycle), துவக்கமாக குறைவான குப்பைகள் என்ற இலக்கையும், இறுதியாக குப்பைக்கிடங்கு அவசியம் இல்லை என்ற இலக்கையும் அடையலாம். ஆனால் - இது எளிதாக, உடனடியாக அடையக்கூடிய இலக்கு அல்ல.
இதற்கிடையே - பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு இடத்திற்கு மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்ட, கொம்புத்துறை (கடையக்குடி) பகுதி சர்வே எண் 278 இடத்தில் குப்பைக்கொட்டுவது குறித்த வழக்கும் [50/2016 (NGT;SZ)] - 1.5 ஆண்டுக்கும் மேலாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில் நிலுவையில் உள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 1, 2017; 8:00 pm]
[#NEPR/2017120105]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|