காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது. காயல்பட்டினம் பப்பரப்பள்ளியில் குப்பை கொட்ட முடிவெடுத்ததற்கும், அதனாலான சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் காரணமானவர்கள் யார் என்பதை விளக்கும் வகையில் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் குப்பைகள் கொட்ட - (ஆவணங்கள் அடிப்படையில்) முதலில் தேர்வு செய்யப்பட்ட இடம் - அரசுக்கு பாத்தியப்பட்ட, சிவன்கோவில்தெரு அருகில் உள்ள, காயல்பட்டினம் தென்பாக கிராமம் சர்வே எண் 392/5 ஆகும். இதற்கான தீர்மானம் - அப்போதைய பஞ்சாயத்து தலைவர் ஹாஜி எம்.கே.டி. அபூபக்கர் அவர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் - 3.12.1958 அன்று - நிறைவேற்றப்பட்டது.
எத்தனை காலம் - அங்கு குப்பைகள் கொட்டப்பட்டன என்ற ஆதாரங்கள் இல்லை. ஆனால் - தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, 7.5 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கர் நிலம் மயானத்திற்கும், 2.5 ஏக்கர் நிலம் குப்பைகள் கொட்டவும் ஒதுக்கப்பட்டது.
எப்போது அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிறுத்தப்பட்டு, பப்பரப்பள்ளியில் - காயல்பட்டினம் தென்பாக கிராமம் சர்வே எண் 43/1 இடத்தில் - குப்பைகள் கொட்டப்பட துவங்கியது என்ற தெளிவான ஆதாரங்களும் இல்லை.
இருப்பினும் - கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு (பப்பரப்பள்ளியில்) குப்பை கொட்டப்பட்டு வருகிறது. நகராட்சி மூலம் - தீர்ப்பாயத்தில் பதிவு செய்யப்பட மனு ஒன்றில் 50 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று, அவதூறான வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் - நடப்பது என்ன? குழுமம் / மெகா நிர்வாகிகளில் பெருவாரியானோர், 392/5 இடம் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 1958ஆம் ஆண்டில் பிறக்கக்கூட இல்லை.
பப்பரப்பள்ளி பகுதியில் - குப்பைகள் கொட்ட துவங்கும் போது, இன்று அவதூறான வகையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படும் நடப்பது என்ன? குழுமம் / மெகா நிர்வாகிகளில் பெருவாரியானோர், மாணவப்பருவதில் இருந்திருப்பார்கள்.
எனவே, பப்பரப்பள்ளியில் குப்பைகளை கொட்ட முடிவெடுக்கப்பட்டதற்கான பொறுப்பு, யாருடையது?
|| கடந்த ஆண்டு துவக்கப்பட்ட நடப்பது என்ன? குழுமத்துடையதா?
|| ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட மெகா அமைப்புடையதா?
|| ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பிற்கு வந்த நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் உடையதா?
அல்லது, 25க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு, அங்கு குப்பைகளை கொட்ட முடிவெடுத்த அப்போதைய பஞ்சாயத்து தலைவர் / உறுப்பினர்கள் உடையதா? அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அப்போதைய ஊர் அமைப்புகளுடையதா? பிரமுகர்கள் உடையதா?
25 ஆண்டுகளுக்கும் மேலாக - பப்பரப்பள்ளியில் குப்பைகொட்டப்பட்டு வருவதால், ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு யார் காரணம்?
கடந்த ஆண்டு துவக்கப்பட்ட நடப்பது என்ன? குழுமம் காரணமா?
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட மெகா அமைப்பு காரணமா?
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பிற்கு வந்த நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் காரணமா?
பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புவோரே - சற்று சிந்திக்கவும்!
பப்பரப்பள்ளியில் தற்போது குப்பைகள் கொட்டப்படுவதற்கும், அதனால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் முழு பொறுப்பு -
>>> எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், அங்கு குப்பை கொட்ட முடிவெடுத்த...
>>> எவ்வித தொலைநோக்கு பார்வையும் இல்லாமல், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வண்ணம் தற்காப்பு ஏற்பாடுகள் (சுற்றுச்சுவர், நிலத்துக்கடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்) செய்யாத...
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, பஞ்சாயத்து/நகராட்சி தலைவர்களாக அப்பொறுப்பினை அலங்கரித்த தலைவர்கள், உறுப்பினர்கள், அக்காலகட்டத்தில் செயல்புரிந்த அமைப்புகள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோரையே சாரும்.
இந்த நிதர்சன உண்மையை, கையாலாகதனத்தை, நிர்வாகத் திறமையின்மையை மறைக்க - பல ஆண்டுகளாக பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்படுவதற்கு காரணம் - சில மாதங்கள்/ஆண்டுகளுக்கு முன்பு உருவான நடப்பது என்ன? குழுமம் / மெகா அமைப்பு என அவதூறுகள், ஒரு சிலரால் பரப்பப்படுகிறது.
இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 30, 2017; 5:00 pm]
[#NEPR/2017113008]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|