காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு தொடர்பாக எப்போது, யார் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் மூன்றாம் பாகம் வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நடப்பது என்ன? குழுமம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (கெப்பா) ஆகியவை மீது ஒரு சிலரால் வைக்கப்படும் அவதூறான குற்றச்சாட்டுகளில் ஒன்று - இவர்கள் ஏன், பப்பரப்பள்ளி சம்பந்தமாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை என்பதாகும்.
// நடப்பது என்ன? குழுமம் - துவக்கப்பட்டது மே 2016 ஆகும்
// கெபா அமைப்பு - துவக்கப்பட்டது மார்ச் 2012 ஆகும்
// மெகா அமைப்பு துவக்கப்பட்டது - ஆகஸ்ட் 2011 ஆகும்
இத்தொடரின் முதல் இரண்டு பாகத்தில் நாம் தெளிவாக விளக்கியது போல் - பப்பரப்பள்ளியில் குப்பைகள் கொட்டப்பட துவங்கியது 25 ஆண்டுகளுக்கும் முன்பு.
அதாவது இவர்கள் கேள்வி கேட்கும் அமைப்புகள் எல்லாம் - உருவானது கடந்த 6 ஆண்டுகளுக்குள் தான்.
ஆனால் - அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே - பப்பரப்பள்ளியில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது; அப்போதும் நகரில் அமைப்புகள் இருந்துள்ளன; அப்போதும் அரசியல் பிரமுகர்கள் இருந்துள்ளார்கள். அப்படி இருக்க - அவர்களை பார்த்து தங்கள் கேள்வியை வைக்காமல், புதிதாக உருவாகிய அமைப்புகள் ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்வி நியாயமானதுதானா?
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் பப்பரப்பள்ளி இடம் குறித்து, யார், எப்போது - முதலில் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கவேண்டும்?
எவ்வித பஞ்சாயத்து அனுமதி இல்லாமல் / மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி இல்லாமல் - பப்பரப்பள்ளி பகுதியில் முதன் முதலில் குப்பைகள் கொட்டப்பட்ட போது, பொறுப்பில் இருந்த பஞ்சாயத்து / நகராட்சி தலைவர்களா? உறுப்பினர்களா? செயல்பாட்டில் இருந்த அமைப்புகளா? அரசியல் பிரமுகர்களா?
அல்லது - கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உருவான - நடப்பது என்ன?/கெப்பா/மெகா அமைப்புகளா?
பொதுமக்களே, சற்று சிந்தித்து பாருங்கள்!
எவ்வித தடுப்பு சுவரும் இல்லாமல் - குப்பைகள் எல்லாம், அருகாமை நிலங்களிலும் கொட்டப்பட்டபோது, யார், எப்போது - முதலில் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கவேண்டும்?
அவ்விடத்திற்கு அருகில் இருந்த நில உரிமையாளர்களா?
அல்லது - வழக்கிற்கு சென்றால் உங்களுக்கும் அந்த நிலங்களுக்கும் சம்பந்தம் இல்லை (NO LOCUS STANDI) என நீதிமன்றம் கூற வாய்ப்புள்ள - ஆறு ஆண்டுகளுக்குள் உருவான அமைப்புகளா?
பொதுமக்களே, சற்று சிந்தித்து பாருங்கள்!
MUNICIPAL SOLID WASTE RULES 2000 சட்டம் - 2000 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தபின்பும், அந்த சட்டம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் - தற்போது பயன்படுத்தப்படும் குப்பைக்கிடங்குகள் அனைத்திலும், புதிய சட்டம் கூறும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் (தடுப்பு சுவர், நிலத்துநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள்) எடுக்க தவறிய குற்றம் - அப்போதைய பஞ்சாயத்து தலைவர் / உறுப்பினர்கள் உடையதா? அப்போது செயல்பாட்டில் இருந்த அமைப்புகள் உடையதா? அரசியல் பிரமுகர்கள் உடையதா?
அல்லது - கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உருவான - நடப்பது என்ன?/கெப்பா/மெகா அமைப்புகளா?
பொதுமக்களே, சற்று சிந்தித்து பாருங்கள்!
கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக - எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் இன்றி குப்பைகள் கொட்டப்பட்டதால் சுற்றுவட்டார நிலங்கள், நிலத்து நீர் பாதிக்கப்பட்டுள்ளது என அறிந்தும் - அவ்விடத்திற்கு அருகே, ஆடு / மாடு அறுப்பு இடம் (SLAUGHTER HOUSE) கொண்டு வந்தது யாருடைய குற்றம்? 2006 - 2011 ஆண்டுகளில் பொறுப்பில் இருந்த நகர்மன்றத்தலைவர் / உறுப்பினர்கள் குற்றமா? அதற்கு துணைபோன, அப்போது செயல்பாட்டில் இருந்த அமைப்புகளின் குற்றமா? அரசியல் பிரமுகர்களின் குற்றமா?
அல்லது - அதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு உருவான நடப்பது என்ன? குழுமம்/கெப்பா/மெகா அமைப்புகளின் குற்றமா?
பொதுமக்களே, சற்று சிந்தித்து பாருங்கள்!
2000 ஆம் ஆண்டு புதிய சட்டம் வந்து, 2004 ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக காயல்பட்டினம் ஆகி, அந்த சட்டங்களின் விதிமுறைக்குள் வந்தபிறகும் - பயன்பாட்டில் இருந்த குப்பைக்கிடங்கை ஒழுங்கு படுத்தவோ, அல்லது அதற்கு மாற்றமாக, புதிய இடம் தேடி - மாற்று இடத்திற்கு குப்பைக்கிடங்கை கொண்டு செல்லாதது, 2001 - 2006 மற்றும் 2006 - 2011 காலகட்டங்களில் நகர்மன்றத்தலைவர்கள்/உறுப்பினர்களாக இருந்தவர்கள் குற்றமா?
அல்லது - அதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு உருவான நடப்பது என்ன? குழுமம்/கெப்பா/மெகா அமைப்புகளின் குற்றமா?
பொதுமக்களே, சற்று சிந்தித்து பாருங்கள்!
குப்பைக்கிடங்கு அருகில் உள்ளது; எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் அங்கு குப்பைகள் கொட்டப்படுகிறது; நிலம் பாதிக்கப்பட்டுள்ளது; நிலத்து நீர் பாதிக்கப்பட்டுள்ளது என அறிந்தும், அதன் அருகே - 23 லட்சம் ரூபாய்க்கு, தனியாரிடம் 90 சென்ட் நிலம் வாங்கி -2011 ஆம் ஆண்டு, மின்வாரியத்துறைக்கு வழங்கிய குற்றம் யாருடையது? அந்த செயலை செய்த, 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அப்போதைய காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை நிர்வாகத்தின் குற்றமா?
அல்லது - அதற்கு பல ஆண்டுகளுக்கு பிறகு உருவான நடப்பது என்ன? குழுமம்/கெப்பா/மெகா அமைப்புகளின் குற்றமா?
பொதுமக்களே, சற்று சிந்தித்து பாருங்கள்!
மேலே - விரிவாக விளக்கப்பட்டுள்ள அனைத்து தவறுகளையும் - கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரங்கேற விட்டுவிட்டு, அதனை எதிர்த்து ஒரு முறை கூட - கடந்த கால் நூற்றாண்டுகளில் நீதிமன்றம் செல்லாமல் இருந்து விட்டு - கடந்த ஆறு ஆண்டுகளுக்குள் உருவான நடப்பது என்ன? குழுமம் / கெப்பா / மெகா அமைப்புகளை, ஏன் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என கேள்விகேட்பது வேடிக்கையாக இல்லையா?
தங்களின், தங்களுக்கு நெருக்கமானவர்களின், கால் நூற்றாண்டு தவறுகளை மறைக்க - திசை திருப்பும் செயல் இது இல்லையா?
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: நவம்பர் 30, 2017; 11:00 pm]
[#NEPR/2017113011]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|