காயல்பட்டினத்தில் கடந்த நவம்பர் மாதம் 28 முதல் இன்று (டிசம்பர் 01) இரவு வரை தொடர் மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள மழைபொழிவுப் பட்டியலின் படி, மாவட்டத்திலேயே அதிகளவாக காயல்பட்டினத்தில் 84.40 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 02) 07.45 மணி துவங்கி சுமார் 30 நிமிடங்கள் இதமழை பெய்தது. அதன் பிறகு மழை பொழியவில்லை. கடந்த 4 நாட்களாக இருண்டிருந்த வானம் ஓரளவுக்கு வெளிச்சத்துடன் காணப்படுகிறது. இதமான வானிலை நிலவுகிறது.
இதுவரை பெய்துள்ள மழை காரணமாக, நகரின் பெரும்பாலான சாலைகள் பெயர்ந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்களும், பொதுநல அமைப்புகளும் முறையிட்டதைத் தொடர்ந்து – காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் – நகர சாலைகளில் மழை நீர் தேங்கிய பகுதிகளிலிருந்து மோட்டார் பம்ப் செட் மூலம் மழை நீரை உறிஞ்சியகற்றும் பணியும், பள்ளமான பகுதிகளில் மணல் சரல் கொண்டு நிரப்பி, சாலையைச் சமப்படுத்தும் பணியும் - நேற்றும், இன்றும் நடைபெற்றுள்ளன.
காயல்பட்டினத்திற்குத் தண்ணீர் தரும் தாமிரவருணி ஆற்றின் மூலமான பாபநாசம் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அதிகளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நீண்ட காலமாக தரையைத் தடவிய அளவில் நீர் ஓடிக்கொண்டிருந்த ஆத்தூர் – முக்காணி தாழ்வு பாலத்தில் தற்போது பாலத்தின் சுவற்றைத் தொடுமளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
|