காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினத்தில் குப்பைக் கிடங்கும், பயோகேஸ் உயிரி எரிவாயு திட்டமும் அமைந்திட, 4 வெவ்வேறு இடங்களில் அடையாளம் காணப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் ஒன்பதாம் பாக அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
2006 - 2011 நகர்மன்ற காலகட்டம், காயல்பட்டினம் வரலாற்றில் - மிகவும் மோசமான நிர்வாக சீர்கேட்டை கண்ட காலகட்டமாகும்.
2006ஆம் ஆண்டு பொறுப்புக்கு வந்த நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் மீது உறுப்பினர்கள் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஓர் ஆண்டின் நிறைவில் அவர் ராஜினாமா செய்தார்.
சமர்ப்பித்த ராஜினாமாவை வாபஸ் வாங்க சட்டத்தில் இடமில்லை என்றாலும், அப்போதைய ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தலையிட்டதை தொடர்ந்து, எஞ்சிய நான்கு ஆண்டுகள் - தலைவராக ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தொடர்ந்தார்.
தலைவராக எஞ்சிய நான்கு ஆண்டுகள் நிறைவுசெய்தாலும் - அப்போதைய துணைத்தலைவரே - முழு அதிகாரம் படைத்தவராக வலம் வந்தார். இந்த காலகட்டத்தில் துணைத்தலைவரே - சுமார் 14 லட்சம் ரூபாய், நகராட்சி பணத்தை மோசடி செய்தது அரங்கேறியது.
ரோஜா சுயஉதவி குழு என்ற பெயரில் 10 பேர் துப்புரவு பணிக்கு என நியமனம் செய்யப்பட்டார்கள். தாங்கள் ஒவ்வொருவரும் 30,000 ரூபாய் பணம் கொடுத்து, பணியில் சேர்ந்துள்ளதாக நாளிதழ்களுக்கு பகிரங்கமாக பேட்டியும் அவர்கள் அளித்தார்கள். அவர்கள் அனைவரும் துப்புரவு பணிகளை தவிர அனைத்து பணிகளையும் நகராட்சியில் செய்தார்கள்.
2008 ஆம் ஆண்டில் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) சுனாமி தொகுப்பு வீடுகளுக்கு அனுமதிக்கொடுத்த அதே தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் - 2010 ஆம் ஆண்டு இறுதியில், அவ்விடம் - CRZ - 1 இடம் என தீர்மானம் நிறைவேற்றி, 2011 துவக்கத்தில் வீதியில் வந்து போராடிய வேடிக்கையும் - இந்த காலகட்டத்தில்தான் அரங்கேறியது.
2011 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், ஆளும் கட்சிக்கு தேர்தல் நிதி சேர்க்க - 2 கோடி ரூபாய் கடனில், நகரில் சிமெண்ட் சாலைகள் போட, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன. மாவட்ட செயலாளர் அறிவுரையில் தான் இந்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது என கூட்டத்தில் வெளிப்படையாக பேசும் அவலங்களும் நடந்தது. சாலைகள் போட துவங்குவதற்கு முன்பே - 60 சதவீத தொகை, ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்பட்டது.
இப்படி லஞ்சம் - ஊழல் - நிர்வாக சீர்கேடுகள் நகராட்சியில் தலைவிரித்தாடிய காலகட்டம் தான் 2006 - 2011. இந்த காலகட்டத்தில் – குப்பைக் கிடங்குக்கான மாற்று இடம் முடிவு செய்யப்படாததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
இந்த துரதிர்ஷ்டமான காலகட்டத்தைத் தொடர்ந்து - அக்டோபர் 2011 இல் நடந்த உள்ளாட்சிமன்றதேர்தலில் - திருமதி ஐ.ஆபிதா சேக் - சுயேட்சையாக நின்று, ஐக்கிய பேரவை ஆதரவு, நகரின் அனைத்து கட்சிகள், சமுதாய அமைப்புகள் ஆதரவு பெற்றிருந்த வேட்பாளரை - ஏறத்தாழ 4300 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று - தலைவர் பொறுப்புக்கு வந்தார்.
அவரின் வெற்றி - நகரின் ஆதிக்க சக்திகளுக்கும், அதிகார வர்க்கத்திற்கும், நிலப்பிரபுத்துவவாதிகளுக்கும் - பேரிடியாக இருந்தது. பொறுப்புக்கு வந்த உடனே, நகர் முன் இருந்த பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காண - புதிய நகர்மன்றத்தலைவர், துரிதமாக செயல்புரிந்தார்.
பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு சம்பந்தமாக கடந்த ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த ஆவணங்களை அவர் பார்வையிட்டார்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் தர முன் வந்த சர்வே எண் 278 இடம் - CRZ எல்லைக்குள் வருவதால், அதில் குப்பைக்கிடங்கு அமைக்க சாத்தியம் இல்லை என அறிந்து - இவ்விஷயத்திற்காக அரசு புறம்போக்கு நிலம் தர கோரி - அப்போதைய பொறுப்பு ஆணையர் திருமதி வி.எஸ்.சுப்புலட்சுமி மூலம், மாவட்ட ஆட்சியருக்கு - ஏப்ரல் 9, 2012 அன்று - அதாவது பதவிக்கு வந்து ஆறு மாதத்தில் - கடிதம் எழுத செய்தார்.
ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் - நகர்மன்ற உறுப்பினர்கள் - வெளிநடப்பு செய்வதில் மும்முரமாக இருந்த காலகட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சிக்கு - பயோ காஸ் திட்டம் வழங்கப்பட்டுள்ள தகவல் நகராட்சிக்கு வந்தது.
ஏப்ரல் மாதம் கடிதத்திற்கு அரசு அதிகாரிகள் முழுமையான தகவல் தராத சூழலில், நகரின் அனைத்து ஜமாத்துகளுக்கும், பொது நல அமைப்புகளுக்கும், பொது மக்களுக்கும் - பயோ காஸ் திட்டம் மற்றும் குப்பைகொட்டுவதற்கான இடம் கோரி - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், ஆகஸ்ட் 9, 2012 அன்று கடிதமும் எழுதினார்.
இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான்- முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் காலகட்டத்தில் - சர்வே எண் 278 க்கு விளக்கம் கேட்டு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இரு முறை கடிதம் எழுதியும், ஒன்னரை ஆண்டுகளாக எந்த பதிலும் வராத காரணத்தால் - அது சம்பந்தமான கோப்புகள், நகராட்சிக்கு திரும்பி இருந்தன.
இதனை தொடர்ந்து - அதிகாரிகள் மட்டத்தில் இருந்தும், ஓய்வு பெற்ற சில அரசு அதிகாரிகளிடம் இருந்தும் - நகரில் உள்ள புறம்போக்கு நிலங்கள் பட்டியல் கிடைத்தது. அவற்றை பார்வையிட்டு - அதிக பரப்பளவு கொண்ட மற்றும் இத்திட்டங்களுக்கு பொருத்தமான - நான்கு இடங்களை சிறுபட்டியல் செய்து, நவம்பர் 30, 2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில், நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் இணைத்தார்.
அப்பொருளில் (#75) இடம்பெற்ற நிலங்கள் விபரம் கீழே:
(1) புல எண் 8 A - ஏக்கர் 24 - காயல்பட்டினம் வட பாக கிராமம்
(2) புல எண் 524/1 - ஏக்கர் 8.5 - காயல்பட்டினம் தென் பாக கிராமம் (தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம்)
(3) புல எண் 237/BB/1 - ஏக்கர் 22 - காயல்பட்டினம் தென் பாக கிராமம் - மத்திய அரசின் உப்பு இலாக்கா
(4) புல எண் 46 - ஏக்கர் 13 - காயல்பட்டினம் தென் பாக கிராமம் - பூந்தோட்டம்
இது சம்பந்தமாக அன்றைய தினம் விவாதம் நடந்தபோது, உறுப்பினர்கள் பலர் - காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையிடம் - இடம் கேட்கலாம் என கூறினர். அதற்கு பதில் கூறிய நகர்மன்றத்தலைவர் - அரசு இடம் எதுவும் கிடைக்கவில்லை என்றால், அதன்பிறகு தனியார் அமைப்புகளை நாடுவோம் என தெரிவித்தார்.
இறுதியாக - நான்கு இடங்களில் பொருத்தமான ஒரு இடத்தை, நகராட்சிக்கு தர - மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் போடப்பட்ட கையெழுத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே, உறுப்பினர்கள் அனைவரும் - குப்பைக்கொட்டவும், பயோ காஸ் திட்டத்திற்கும் இடம் கேட்டும் - காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவையிடம், டிசம்பர் 5, 2012 அன்று கடிதம் கொடுத்தார்கள்.
அந்த கடிதத்தை பெற்ற ஐக்கிய பேரவை என்ன செய்திருக்கவேண்டும்? ஆனால் - என்ன செய்தார்கள்?
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 3, 2017; 9:30 pm]
[#NEPR/2017120302]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|