காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“புல எண் 625/3இல் பயோ கேஸ் திட்டம் அமைய தான் மாற்றலாவதற்கு முன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் ஒப்புதல்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 13ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சென்னையில் Khadi and Village Industries Board அமைப்புடைய தலைமை செயல் அலுவலர் (CEO) திரு உ.சகாயம் IAS அவர்களை சந்தித்து விட்டு ஊர் திரும்பிய நகர்மன்றலைவர் ஐ.ஆபிதா சேக் - மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் IAS அவர்களை ஏப்ரல் 9, 2013 அன்று நேரடியாக சந்தித்து, திரு உ.சகாயம் IAS அவர்களை சந்தித்த விபரங்களை தெரிவிக்கிறார். மேலும் - அந்த நிலத்தை (புல எண் 524/1), அரசு வழிகாட்டல் (GUIDELINE) தொகைக்கே வழங்கிட பரிந்துரைக்கவும் வேண்டுகிறார்.
அந்த நிலத்தை கையகப்படுத்த சில காலங்கள் ஆகும் என்ற காரணத்தால் - பயோ காஸ் திட்டமும், குப்பைகொட்டப்படும் இடமும் வேறு வேறு இடத்தில் இருக்கலாம்; ஆற்காடு நகராட்சியில் அவ்வாறு தான் உள்ளது; எனவே பயோ காஸ் திட்டத்திற்கு தனி இடம் தேடலாம் என சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தலை தொடர்ந்து, நகர்மன்றத்தலைவர் - மாவட்ட ஆட்சியரிடம், வருவாய் துறை அதிகாரிகளால் அடையாளம் காட்டப்பட்ட, காயல்பட்டினம் தென் பாக கிராம அலுவலகத்திற்கு அருகில் உள்ள சர்வே எண் 625/3 இடத்தினை கோரி மாவட்ட ஆட்சியரிடம் அன்றே கடிதமும் கொடுக்கிறார்.
இவ்வாறு ஊர் நலனுக்காக நகர்மன்றத்தலைவர் முயற்சிகளை மேற்கொண்டிருக்க - நகர்மன்ற உறுப்பினர்கள், தங்கள் அடாவடித்தனத்தை நிறுத்தவில்லை. ஏப்ரல் 5, 2013 அன்று நடக்கவிருந்த நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை வழங்கவே, ஏப்ரல் 19, 2013 அன்று நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு உறுப்பினர்கள் எழுதிய கடிதத்தில், அந்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். பின்னர் - அதே மனுவை, வேறு தேதியில், வேறு சட்டப்பிரிவை மேற்கோள்காட்டி உறுப்பினர்கள் வழங்கினர் என்பது துணுக்கு செய்தி. அந்த முயற்சியிலும் அவர்கள் வெற்றிகாணவில்லை என்பது வரலாறு.
உறுப்பினர்கள் தங்கள் மனுவை வாபஸ் வாங்கிய பிறகு, நகர்மன்றக்கூட்டம் - ஏப்ரல் 29, 2013 அன்று நடந்தது. உறுப்பினர்கள் தங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் வைத்த ஒரு குற்றச்சாட்டு - கூட்டங்கள் நிறைவுபெற்றவுடன், தலைவர் - அனைத்து தீர்மானங்களையும், மூன்று தினங்களுக்குள் அரசுக்கு அனுப்பவேண்டும்; அதனை அவர் செய்வதில்லை என்பதாகும்.
ஏப்ரல் 29, 2013 அன்று நடந்த கூட்டத்தை அடுத்து - இனியும் பிரச்சனைகள் எழக்கூடாது என்ற நோக்கில் - தீர்மானங்கள் நகலை ஆணையரிடம் - தலைவி கேட்டார். தான் வெளியூர் சென்றுள்ளதாகவும், வெளியில் இருப்பதாகவும் என பல்வேறு காரணங்களை கூறி, தீர்மானங்கள் நகல் தர ஆணையர் காலதாமதம் செய்யவே, அவரின் அனுமதி பெற்று, நகராட்சி ஊழியரையும் அழைத்துக்கொண்டு , நகராட்சிக்கு எதிரில் உள்ள நகல் எடுக்கும் கடையில் - தீர்மானங்களை நகல் எடுத்தார் தலைவர்.
இதனை கேள்வியுற்ற சில நகர்மன்ற உறுப்பினர்கள், சில ஊடக செய்தியாளர்களை அழைத்து வந்து, நகராட்சிக்கு வெளியே MINUTES புத்தகத்தை எடுத்துச்செல்லக்கூடாது என்ற விதியை மீறிவிட்டார் தலைவி என்று ரகளை செய்தனர். தீர்மான நகலை அரசுக்கு - உரிய காலத்திற்குள் தலைவி அனுப்பவில்லை என்று குற்றம் சாட்டிய உறுப்பினர்கள், ஏப்ரல் 29, 2013 அன்று நடந்த கூட்டத்திற்கு பிறகு - உடனே தீர்மான நகலை அரசுக்கு அனுப்பும் முயற்சியில் தலைவி ஈடுபட்டிருந்தபோது - அதனை தடுக்கும் தரம் கெட்ட செயலையும் செய்தனர்.
தலைவி கடையில் நகல் எடுக்கும் காட்சியையும், வெளியே வரும் போது நகராட்சி ஊழியர், MINUTES புத்தகத்தை கையில் கொண்டு வரும் காட்சியையும், விதவிதமாக படம் எடுத்து - ஒரு உறுப்பினர் கீழ்த்தரமாக நடந்துக்கொண்டார்.
இதற்கிடையே - நகர்மன்றத்தலைவர் - மாவட்ட ஆட்சியரிடம், ஏப்ரல் 9, 2013 அன்று கொடுத்த பயோ காஸ் திட்டத்தை சர்வே எண் 625/3 இடத்தில் கொண்டு வருவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் - ஜூன் 19, 2013 அன்று நகர்மன்றத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் - இடம் மாற்றலுக்கான விண்ணப்பத்தை - 5 நகல்களாக ஆட்சியருக்கு அனுப்ப கோரினார். கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், 28.6.2013 அன்று விண்ணப்பத்தை, மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பவே, அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க - மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆகஸ்ட் 13, 2013 அன்று திருச்செந்தூர் வட்டாட்சியருக்கு கடிதம் எழுதுகிறது. கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே - மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் - ஆகஸ்ட் 7, 2013 அன்று திடீரென மாற்றலாகிறார்*.
புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற திரு M.ரவிக்குமார் IAS - அக்டோபர் 8, 2013 அன்று ஆய்வுகள் செய்ய, காயல்பட்டினம் வந்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 5, 2017; 11:15 pm]
[#NEPR/2017120503]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |