எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள் நடைபெற்றன. 180-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமியர் பங்கேற்ற இந்நிகழ்வுகளில், ‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான வெங்கட் நிழல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுகள் குறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை கீழ் வருமாறு:
முப்பெரும் தினங்கள்
குழந்தைகளிடம் – இலக்கியம், பண்பாடு, கலை & இயற்கைக் கல்வி போன்றவைகளை முறையே கொண்டு சேர்க்கும் பெரும்பணியை, எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் ஒரு பிரிவாக செயல்படும் ‘கண்ணும்மா முற்றம்’, நமதூரில் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தேசிய கல்வி தினம், தேசிய நூலக வாரம் & குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் கொண்டாட்டங்களை முன்னிட்டு, கண்ணும்மா முற்றம் & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில், 24.11.2017 (வெள்ளி) & 25.11.2017 (சனி) தேதிகளில், இருவேறு நிகழ்விடங்களில் கதைசொல்லல் அமர்வுகள் நடத்தப்பட்டன.
சிறப்பு கதைசொல்லி
‘குட்டி ஆகாயம்’ சிறார் இதழின் ஆசிரியர்களுள் ஒருவரான வெங்கட் நிழல், இந்நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சிறார் இலக்கிய ஆர்வலரான இவர் - கதை அமர்வுகள், சிறுவர் நூல்களின் அறிமுகம், நூல் மதிப்புரை அமர்வுகள் & குழந்தைகள் குறித்த உரையாடல்கள் என பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திவருகின்றார்.
சுபைதா பள்ளியில் முதல் நிகழ்வு
காயல்பட்டினம் சுபைதா துவக்கப் பள்ளியில் நடைபெற்ற முதல் நாள் (24.11.2017) நிகழ்விற்கு, முஹ்யித்தீன் மேனிலைப் பள்ளியின் துனை செயலாளர் கே.எம்.டீ.சுலைமான் தலைமையேற்று வரவேற்புரையாற்றினார். அவர் முன்னின்று நடத்திய முந்தைய கதைசொல்லல் நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்து, சிறப்பு விருந்தினரையும் அறிமுகம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, வெங்கட் குழந்தைகளுக்கு குதூகலமான சில கதைகளை சொல்லியதோடு, காகித மடிப்புக் கலையையும் (origami / ஒரிகமி) அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில், 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இளவல்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
அரசு பொது நூலகத்தில் இரண்டாம் நாள் நிகழ்வு
இரண்டாம் நாளான 25.11.2017 அன்று, காயல்பட்டினம் அரசு பொது நூலகத்தில், சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் துவக்கமாக, எல்.கே.மேனிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் கே.எம்.எல். முஹம்மது அபூபக்கர் கிராஅத் ஓதிட, நூலகர் முஜீப் வரவேற்புரையாற்றினார்.
பணி ஓய்வுபெற்ற சுகாதார ஆய்வாளரும் & நூலக புரவலருமான காயல் அ. கருப்பசாமி, கதைசொல்லல் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். ‘உருவுகண்டு எள்ளாமை’ எனும் நற்போதனையை, ஒரு காக்கைக் கதையின் மூலம் அவர் சுவைபட கூறினார்.
பின்னர், சமூக ஆர்வலர் கத்தீப் மாமூனா லெப்பை, சிறப்பு விருந்தினரான வெங்கட் நிழலை அறிமுகம் செய்தார்.
ரஃப்யாஸ் ரோஸரி & ரஹ்மானியா மழலையர் பள்ளிகளின் இளவல்கள் & அரசு பொது நூலகத்துக்கு வாடிக்கையாக வரும் இதர பள்ளிகளின் மாணவர்கள் என மொத்தம் 87 மாணவர்களும் & 15 ஆசிரியைகள் / தாய்மார்களும், இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தனி-ஆள் குறு நாடகம் (Mono Act)
நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் துவக்கமாக, ஊதற்பை (Balloon) வியாபாரி போன்று வெங்கட் நடித்துக் காட்டினார். வசனங்கள் ஏதுமில்லாத ஒரு ‘தனி-ஆள் குறு நாடகத்தை (Mono Act)’ அவர் நிகழ்த்தினார். அதனைக் மகிழ்ச்சிப் பொங்க கண்டு ரசித்த குழந்தைகள் - தங்களின் சிந்தனைக்கு எட்டியவற்றை விளக்கிடச் செய்தமை, அவர்களின் கற்பனைத் திறனை வெளிக்கொணரும் வகையில் அமைந்தது.
கதைசொல்லல்
அதன் பின்னர், கதைசொல்லல் நிகழ்வு நடைபெற்றது. வெங்கட் நிழல் கூறிய அழகிய கதைகளுக்கு, துவக்கம் முதலே சிறார்கள் உற்சாகத்தோடு காணப்பட்டனர். ஒருதலை உரையாக மட்டும் இல்லாது, அவர் குழந்தைகளையும் கதைசொல்ல வைத்தார். இந்த ஒருங்கிணைந்த முயற்சி, சிறுபிள்ளை முதல் வளர்ந்த குழந்தைகள் வரை அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
ஒரிகமி காகித மடிப்புக் கலை
கதைசொல்லல் நிகழ்வை தொடர்ந்து, ஜப்பானிய பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படும் ஒரிகமி காகித மடிப்புக் கலை அறிமுகம் செய்யப்பட்டது. வெங்கட் முன்னின்று பயிற்சியளிக்க, மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்ட சிறுவர்-சிறுமியர் வண்ண வண்ண காகிதங்களைக் கொண்டு, பல விதமான தோற்றங்களை உருவாக்கினர்.
ஓவியக் கலை
ஆறு எளிதான வடிவங்களைக் கொடுத்து – அவற்றைக் கொண்டு சித்திரங்களை வரையுமாறு குழந்தைகளிடம் வெங்கட் கூற - மரம், தொலைக்காட்சிப் பெட்டி, சூரியன், கடிகாரம், ஊர்தி & இன்னும் பல வகையான சித்திரங்களை அவர்கள் உருவாக்கினர். சிறார்களின் கற்பனைத் திறனை வளர்த்திடும் உன்னத முயற்சியாகவே இது அமைந்தது.
நிகழ்வுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகையை உற்று நோக்கி, அதில் இருந்த ‘குட்டி ஆகாயம்’ கோமாளி ஓவியத்தை - ஒரு குழந்தை வரைந்தமை, அன்றைய நிகழ்வு அக்குழந்தைகளிடம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு சான்றாக விளங்கியது.
‘பதியம்’ அறிமுகம்
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் இணைவில் துவங்கப்பட்டுள்ள ‘பதியம்’ செயல்திட்டத்தை வெங்கட் அறிமுகம் செய்ய, முஜீப் அது குறித்து விளக்கவுரையாற்றினர்.
சிறார் இதழ்களின் பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் – நமதூரின் மாணவ-மாணவியர்களை எழுதிடத் தூண்டும் முயற்சியே இந்த ‘பதியம்’! கூடுதல் விபரங்களுக்கு, இவ்வலைப்பக்கத்தை சொடுக்குக!
‘குட்டி ஆகாயம்’ சிறார் பதிப்பகம்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகும் ‘குட்டி ஆகாயம்’ சிறுவர் இதழ், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாழும் குழந்தைகளின் கலை ஆக்கங்களை பதிப்பிக்கிறது. இது குறித்த அறிமுகத்தை கத்தீப் மாமூனா லெப்பை வழங்கினார்.
சிறுவர் இதழின் வெற்றியைத் தொடர்ந்து, குட்டி ஆகாயம் எனும் பெயரிலேயே ஒரு பதிப்பகத்தை துவங்கப்பட்டுள்ளதை, வெங்கட் அறிவித்தார். அதன் முதல் வெளியீடான ‘குட்டி யானை வீட்டுக்குப் போகுது – சீன நாட்டுக் கதை’ நூல் குறித்தும் அவர் பேசினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலை ஆர்வமிக்கவர்களாக இருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தினார்.
நூலக உலா
நிகழ்வில் கலந்துகொண்ட குழந்தைகளில் பலருக்கும், அரசு பொது நூலகத்துக்கு வருவது அதுவே முதன்முறை! நூலகத்தின் பிரதான அறைக்குள் அவர்கள் சென்று, நூல்கள் அடுக்கப்பட்டிருந்த தட்டடுக்குகளை பார்வையிட்டனர். சில சிறுவர் நூல்களை வெங்கட் நிழல் அறிமுகம் செய்ததும், குழந்தைகள் அவற்றை விரும்பி வாசித்தனர்.
நூலகத்தின் நோக்கம் & பயன்பாடு குறித்த அறிமுகத்தை பெற்றிட, அச்சிறு உலா ஒரு அழகிய வாய்ப்பாக அமைந்தது.
நினைவுப் பரிசு & அன்பளிப்பு
இரு நாட்களின் நிகழ்வுகளை நிறைவாக நடத்திய வெங்கட் நிழலுக்கு, நூலக உறுப்பினர் முத்துக்குமார் அவருக்கு சால்வை அணிவிக்க, சமூக ஆர்வலர் கத்தீப் மாமூனா லெப்பை நினைவுப் பரிசினை வழங்கினார்.
நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட இரு புத்தகங்கள் குறித்த விபரங்கள் கீழே:
1> கானகப் பள்ளி கடிதங்கள்
ஒரிசாவில் 1950களில் உருவாக்கப்பட்ட கானகப் பள்ளியில் நடத்தப்பெற்ற கல்விப் பரிசோதனையின் உணர்ச்சி ததும்பும் உண்மைக்கதை இது. செய்திதாளுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் வடிவில் படைக்கப்பட்டுள்ளது (ஆசிரியர்: சித்தரஞ்சன் தாஸ்).
2> பள்ளிக்கூடம் (நாவல்)
நாவலின் தலைப்பு பள்ளிக்கூடம் என்றிருப்பதால் வெறும் ஆசிரியர்கள், மாணவர்களோடு கதை நின்றிடவில்லை. பள்ளிக்கூடம் ஆலமரத்தின் மையத்தூணாய் இருக்க பொருளாதார ஏற்றத்தாழ்வு, சாதியம், பெண்ணியம் என்று கதையின் போக்கு வளைந்து நெளிந்து கிளைபரப்பி விரிந்து கொண்டே செல்கிறது. எத்தனை கிளைபரப்பி நாவல் விரிந்தாலும் நாவலின் மையச்சரடாய் இருப்பது மனிதம்! புறக்கணிக்கப்படும் அரசுப்பள்ளிகள், பாதிக்கப்படும் ஆசிரியர்கள், மாணவர்கள், எளியவர்கள், பெண்கள் என அனைவரையும் திகட்டத் திகட்ட நேசித்த ஒரு எளிய “மனிதனின்” எழுத்துக்களே இந்நாவல் (ஆசிரியர்: பா.செயப்பிரகாசம்; மதிப்புரை: ராமமூர்த்தி நாகராஜன்).
கருத்துகேட்பு
ரஹ்மானியா மழலையர் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி விஜயா நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். வெங்கட் நிழலின் உன்னதான பங்களிப்பை வியந்து பாராட்டினார். அவரைத் தொடர்ந்து, சில குழந்தைகளும் தத்தம் கருத்துக்களையும் நன்றியினையும் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினரை, நிகழ்வுகளுக்குப் பின்னர் தொடர்புகொண்ட பெற்றோர்கள் & பள்ளி ஆசிரியைகள், இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்திட விருப்பம் தெரிவித்தனர்.
“மாமா, எல்லா சனிக்கிழமைகளிலும் அந்த அங்கிளை வரச் சொல்லி – கதை சொல்ல சொல்லுங்க… செம ஜாலியா இருந்துச்சு…” என நிகழ்வில் பங்கேற்ற ஒரு சிறுமி அன்பு கட்டளை விடுத்தார்.
“இந்நிகழ்வு குழந்தைகளுக்கானது மட்டுமல்ல; பெற்றோர்களுக்கும் நல்ல அனுபவத்தையே தந்தது. அவர் கதைசொல்லும் போது, ஏதேனும் ஒரு குழந்தை குறுக்கிட்டால், அவர் அக்குழந்தைக்கு மதிப்பளித்து அந்த இளவல் கூறுவதை முழுவதுமாக கேட்டு – அதையும் கதையினுள் சேர்த்து சொன்ன விதம், எனக்கு ஒரு நல்ல படிப்பினையை கொடுத்தது. இது மாதிரியான நிகழ்வுகள் வருங்காலங்களில் ஏற்பாடு செய்தால், தவறாது தெரிவிக்கவும்.” – நிகழ்வில் பங்கேற்ற ஒரு தாயாரின் கருத்து!
நன்றி நவில்தல்
இறையருளுக்குப் பின்னர், இந்நிகழ்வின் வெற்றிக்கு பலரும் காரணமாக இருந்தனர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வெங்கட் நிழல்; நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவ-மாணவியர், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் அழைப்பை ஏற்று பெரிதும் ஒத்துழைத்த பள்ளிகளின் நிர்வாகங்கள், தலைமை ஆசிரியைகள், ஆசிரியைகள், ஊர்தி ஓட்டுநர்கள் & மழலைகளின் பெற்றோர்கள்; நூலக உதவியாளர் மணிகண்டன்; நூலக உறுப்பினர்கள் ஹாலிக், முத்துக்குமார் & கொமைந்தார் ஷாஹுல் ஹமீது; நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு உதவி புரிந்த எல்.கே. மேனிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களான – அபூபக்கர், அப்துல்லாஹ், ஜாஃபர் அலீ & அஹமது அலீ; நிகழ்ச்சி ஏற்பாட்டு குழும அங்கத்தினர்; ஏனைய தன்னார்வலர்கள் & இன்னும் இப்பட்டியலில் விடுபட்டுப்போன அனைத்து நல்லுள்ளங்களுக்கும், எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு & அரசு பொது நூலகம் – காயல்பட்டினம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
இறுதியில், தேசியக் கீதத்தோடு நூலக நிகழ்வு நிறைவுற்றது.
இவ்வாண்டில் 5 கதைசொல்லல் நிகழ்வுகள்
எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு அமைப்பின் 22 & 23-ஆவது நிகழ்வுகளாகவும் & கண்ணும்மா முற்றம் பிரிவின் 7 & 8-ஆவது நிகழ்வுகளாகவும் அமைந்த இந்த இரு நிகழ்வுகளையும் சேர்த்து, இவ்வாண்டில் இதுவரை மொத்தம் ஐந்து கதைசொல்லல் நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய முந்தைய பதிவுகள்
1> நவ. 24 & 25 தேதிகளில் சிறார் இலக்கியவாதிகள் பங்கேற்கும் இருவேறு கதைசொல்லல் நிகழ்வுகள்!!
(13.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19906)
2> “பதியம்” – சிறார்களை இலக்கிய உலகோடு இணைத்திடும் முயற்சி!! அரசு பொது நூலகத்துடன் இணைந்து புதிய செயல்திட்டம்!! எழுத்து மேடை மையம் நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!
(22.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19944)
3> கதை சொல்லுதலை வலியுறுத்தி - நாடு தழுவிய ’விழிப்புணர்வு மிதிவண்டி பயணம்’ மேற்கொள்ளும் குமார் ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு!
(07.11.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19883)
4> சிறார் நூல்கள் அறிமுகம் & கதைசொல்லல் நிகழ்வுகளோடு நடந்தேறிய சிறார் இலக்கிய மன்றம் (இயற்கைக் கல்வி முகாமின் ஓர் பகுதி)
(08.10.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19807)
5> கதைசொல்லல் & கைவினைப் பொருட்கள் உருவாக்கல் பயிற்சி முகாம்
(09.05.2017; http://www.kayalpatnam.com/shownews.asp?id=19218)
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல், கள உதவி & ஒளிப்படங்கள்:
கே.எம்.டீ சுலைமான், முஜீப், கத்தீப் மாமூனா லெப்பை, அப்பாஸ், ஹாஃபிழ் ஈஸா, ஆபிதா ஷேக், மணிகண்டன், முத்துக்குமார் & மொகுதூம் தம்பி
நூல்களின் முன்னட்டைப் படங்கள் & மதிப்புரைகள்:
CommonFolks இணையதளம் & குட்டி ஆகாயம் சிறார் பதிப்பகம்
செய்தியாக்கம்:
அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்)
|