காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“பயோ கேஸ் திட்டத்தைப் பார்வையிட ஆற்காடு நகராட்சிக்குச் சென்று வந்த நகர்மன்ற உறுப்பினர்கள்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 16ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகங்களில் நாம் கண்டது போல் - குப்பைக்கொட்டுவதற்கான இடமும், பயோ காஸ் திட்டத்திற்கான இடமும் ஒரே பகுதியில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் இடங்கள் தேடப்பட்டு வந்தன.
அவ்வாறு ஒரே இடத்தில் அமைந்தால் தான் - குப்பைக்கிடங்கிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என எளிதாக பிரிக்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, இடம் தேடலும் அவ்வாறே இருந்தது. நகர்மன்றத் தலைவரின் வேண்டுகோள்களும் அந்த அடிப்படையிலேயே ஆரம்பத்தில் இருந்தன.
பின்னர் - அவ்வாறு குப்பைக்கிடங்குகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் இருந்து மக்கும் குப்பையை பிரிப்பது கடினம் என்றும், அதில் கல்லும் - மண்ணும் சேர்த்துக்கொண்டால், பயோ காஸ் கருவிகள் பழுதுபட்டுவிடும் என்றும், எனவே - மக்கும் குப்பைகள் உருவாகும் இடங்களில் இருந்தே (மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், உணவு விடுதிகள்) நேரடியாக மக்கும் குப்பை, பயோ காஸ் மையத்திற்கு கொண்டு வரப்படவேண்டும் என்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அந்த திட்ட இடத்திற்கு அருகில் உள்ள தெரு விளக்குகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்றும், அதன் மூலம் - மக்கும் குப்பைகளும் பிரயோஜனமான வகையில் அழிக்கப்படும் என்றும், இதன் மூலம் - நகராட்சிக்கு, மின்சார செலவு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு - சுமார் 30 மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் - மூன்று அளவில், இந்த பயோ காஸ் திட்டங்களை வழங்கியது. அந்த அளவுகள் - 3 மெட்ரிக் டன், 5 மெட்ரிக் டன் மற்றும் 10 மெட்ரிக் டன் ஆகும்.
காயல்பட்டினத்திற்கு ஒதுக்கப்பட்ட அளவு 5 மெட்ரிக் டன். காயல்பட்டினத்தில் தினமும் உருவாகும் குப்பையின் அளவு - 12 மெட்ரிக் டன் என்றும் அதில் சுமார் 40 சதவீதம் மக்காத குப்பை என்ற அடிப்படையில் 5 மெட்ரிக் டன் அளவிலான பயோ காஸ் திட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. பயோ காஸ் திட்டத்தை நிறுவவும், அதனை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பராமரிக்கவும் - காயல்பட்டினத்திற்கு 90 லட்சம் ரூபாயையும் அரசு ஒதுக்கியது.
முந்தைய பாகங்களில் நாம் கண்டது போல் - குப்பைக்கொட்டுவதற்கு பனைப்பொருள் இலாகாவின் இடத்தை கேட்கலாம் என்ற முயற்சியை துவங்கிய பின்பு, அதற்கு சில காலம் ஆகும் என்று தெரிந்தவுடன், முதலமைச்சரும் சட்டப்பேரவையில் அதிகாரப்பூர்வமாக பயோ காஸ் திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து (ஏப்ரல் 2013), விரைவில் இதற்கான இடம் அடையாளம் காணப்படவேண்டும் என்பதால் - அத்திட்டத்திற்கு மட்டும் தேவையான 25 சென்ட் நிலத்தை பெற்றிடும் முயற்சியில் - சில இடங்கள் அடையாளம் காணப்பட்டது. அந்த முயற்சியை உறுப்பினர்கள் நிராகரித்ததும் முந்தைய பாகங்களில் காண முடிந்தது.
உறுப்பினர்கள் தரப்பில் - இரண்டு திட்டங்களும் ஒரே இடத்தில் வரவேண்டும் என்றும், அதுவும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தர முன்வந்துள்ள, சர்வே எண் 278 இடத்தில் தான் வரவேண்டும் என்றும் அடம்பிடித்து வந்தனர். நாம் ஏற்கனவே முந்தைய பாகங்களில் தெரிவித்தது போல் - டிசம்பர் 2012 இல் ஐக்கிய பேரவையில் இடம் தருவதாக வாக்குறுதி தந்த முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - 22 மாதங்கள் கழித்து தான் (அக்டோபர் 2014 இல்) இடத்தையே எழுதி தருகிறார்.
இரண்டு திட்டங்களும் வேறு இடங்களில் வரலாம் என உறுப்பினர்களுக்கு புரிய வைக்க, வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் - தமிழகத்திலேயே முதல் முறையாக ஒரு நகராட்சியினால் நிறுவப்பட்ட பயோ காஸ் திட்ட இடத்தை பார்வையிட ஏற்பாடு செய்யலாம் என்று நகர்மன்றத் தலைவர் முடிவு செய்தார். இந்த பயணம் மூலம் - பயோ காஸ் திட்டம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக தான் இருக்கவேண்டும் என்ற தவறான புரிதல் களையப்படும் என்றும் அவர் எதிர்பார்த்தார்.
டிசம்பர் 19, 2012 அன்று நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது தீர்மானம் - இந்த திட்டம் குறித்த தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் எழுப்பியிருந்தது. அந்த தீர்மானப்படி - பேரவை, ஐவர் குழுவை அமைத்ததா, அதில் யார் யார் இருந்தார்கள், எந்த அறிக்கை தந்தார்கள் என்று இன்று வரை தெளிவுபடுத்தப்படவில்லை.
தீர்மானம் 3:
கொட்டப்படும் குப்பைகளிலிருந்து எந்திரங்கள் மூலம் எரிவாயு தயாரிப்பதற்கு நமது நகராட்சிக்கு தமிழக அரசு ரூபாய் தொன்னூறு இலட்சம் ஒதிக்கீடு செய்துள்ளது, மேற்படி குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்ற எரிவாயுவால் சுற்றுச்சூழல் மாசுபடுமா? மக்கள் நலம் பாதிக்கப்படுமா? என்பன போன்ற விளக்கங்களை சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரி மூலமாகவும், பயோ எரிவாயு தயாரிக்கப்படுகின்ற ஆலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்கும், பேரவையால் ஐந்து பேர்கள் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டது.
உறுப்பினர்கள் நகராட்சியின் செலவிலேயே ஆற்காடு செல்வதற்கு நகராட்சி நிர்வாகத்துறையின் திருநெல்வேலி மண்டல இயக்குனரின் அனுமதி பெறப்பட்டு, அதற்காக சுமார் 50,000 நிதி ஒதுக்கப்பட்டு, 11 உறுப்பினர்களும், 2 நகராட்சி ஊழியர்களும் - வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்கு சென்று வந்தார்கள்.
அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவரும் அவ்விடத்தை நேரடியாக சென்று பார்த்து வந்தார்.
ஆற்காடு சென்ற தலைவரிடமும், உறுப்பினர்களிடமும் - அங்கு இயங்கி வந்த பயோ காஸ் திட்டம் - அந்த நகராட்சியின் தலைவரால், அதிகாரிகளாலும் - காண்பிக்கப்பட்டது; அந்த ஊரில் பயோ காஸ் திட்ட இடமும், குப்பைக்கிடங்கும் எவ்வாறு பல கிலோமீட்டர் இடைவெளியில் உள்ளது என்பதும் காண்பிக்கப்பட்டது; பயோகாஸ் திட்டம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்புகளுக்கு மத்தியில், திருமண மண்டபத்திற்கு அடுத்தாற் போல் அமைந்துள்ளதையும் தலைவரும், உறுப்பினர்களும் - தாங்கள் தனித்தனியாக சென்றபோது பார்த்து வந்தார்கள்.
https://www.youtube.com/watch?v=z7DxVhCxr2k&list=PL7DVrd7wQwL9SaQcSrsk7OAXf4_eoIDZh
அந்த நகராட்சியில் வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்தில் சிறப்பாக இந்த திட்டம் அமைந்துள்ளது என்றும் சில உறுப்பினர்கள் - கைப்பட எழுதிவிட்டு வந்தார்கள். ஆனால் - காயல்பட்டினம் திரும்பிய உறுப்பினர்கள், பயோ காஸ் திட்டம் ஊருக்குள் அமையவேண்டும் என்பதையும், குப்பைக்கிடங்கு ஊரில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றும் - பிரித்து பார்க்கத் தயாராக இல்லை.
சீரோடு வா அல்லது வரவே வராதே என்ற எண்ண அடிப்படையில், பயோ காஸ் திட்டமும், குப்பைக்கிடங்கு திட்டமும் ஒன்றாக, ஒரே இடத்தில் தான் வரவேண்டும்; அந்த இடமும் முன்னாள் நகர்மன்றத்தலைவர் தருவதாக முன் வந்த, ஆனால் இதுவரை - CRZ இடம் / CRZ இல்லாத இடம் என பிரித்து, அரசுக்கு ஒதுக்கி தராத சர்வே எண் 278 இடத்தில் தான் - வரவேண்டும் என்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து, தெளிவாக இருந்தார்கள்.
இதன் மூலம் - பயோ காஸ் திட்டப்பணிகள் விரைவில் துவக்கப்பட யார் தடையாக இருந்தார்கள் என்பதும், மக்களுக்கு பயன்படக்கூடிய, பொருத்தமான இடத்தில் அந்த திட்டத்தை அமல்படுத்த யார் - தடையாக இருந்தார்கள் என்பதும் - அனைத்து மக்களுக்கும் தெளிவாக புரிந்திருக்கும்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 7, 2017; 12:55 pm]
[#NEPR/2017120701]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|