காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“பயோ கேஸ் திட்டம் காலதாமதமாகக் காரணம் யார்?” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 14ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகத்தில் தெரிவித்தது போல் - காயல்பட்டினத்திற்கு பயோ காஸ் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா - ஏப்ரல் 10, 2013 அன்று தான் சட்டசபையில் அறிவித்தார்.
இப்பணியை விரைவாக முடிக்கும் நோக்கிலும், குப்பைக்கிடங்குக்கான இடம், இறுதியாக இன்னும் சில காலம் எடுக்கும் என்பதாலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் IAS இடம் நகர்மன்றத்தலைவர் வைத்த கோரிக்கைப்படி, கிராம நிர்வாக அலுவலகம் (VAO) இடத்தின் அருகில் உள்ள சர்வே எண் 625/3 இடத்தை இறுதி செய்யும் பணிகள் நடந்து வந்த சூழலில், திடீரென மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார் மாற்றலாகி, புதிதாக, ம.ரவிக்குமார் IAS - ஆட்சியராக நியமனம் ஆகிறார்.
பயோ காஸ் திட்டத்தை, சட்டசபையில் முதல்வர் அறிவித்து ஏறத்தாழ ஆறு மாதம் நிறைவுற்ற சூழலில் - இத்திட்டத்திற்கான இடத்தினை மட்டுமே இறுதி செய்து, பணிகளை துவக்க, காயல்பட்டினத்திற்கு புதிய ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS - அக்டோபர் 8, 2013 அன்று - வருகை தருகிறார். தனது வருகையின் போது - மூன்று இடங்களை பார்க்கிறார்.
ஒன்று - சிவன்கோவில் தெருவிற்கு அருகில் உள்ள சர்வே எண் 392/5. (1958ஆம் ஆண்டு குப்பைக் கிடங்கு அமைக்க, அப்போதைய தலைவர் ஹாஜி எம்.கே.டி. அபூபக்கர் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட இடம்)
இரண்டு - அருணாச்சலபுரத்தில் இருந்த ஒரு சில புறம்போக்கு இடங்கள் (334/1, 334/2, 334/12, 334/15)
மூன்றாவது - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தருவதாக கூறியிருந்த சர்வே எண் 278 இடம்
மாவட்ட ஆட்சியர் பார்வையிட்ட ஒவ்வொரு இடங்களின் நன்மை, தீமை பற்றி மாவட்ட ஆட்சியர் - தனது அறிக்கையில் பின்னர் விபரமாக, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார். அறிக்கை வருமாறு:-
===============================
சர்வே எண் 392/5 குறித்து மாவட்ட ஆட்சியர்
===============================
இந்நிலத்திற்கு முறையான அணுகு பாதை உள்ளது
மயான நிலமாக இருந்தாலும், தற்போது அதன் ஒரு பகுதி மட்டுமே மயானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது
ஒவ்வொரு ஜாதி வாரியாக மயானம் அமைப்பதற்கு இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்தில் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம் (மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட மன்ற உறுப்பினர் - அப்போதைய 18வது வார்டு உறுப்பினர் இ..எம்.சாமி)
இத்திட்டத்திற்கு தேவையான 25 சென்ட் நிலத்தை இப்பகுதியில் இருந்து தெரிவு செய்யலாம்
===============================
சர்வே எண் 334/1, 334/2, 334/12, 334/15 குறித்து மாவட்ட ஆட்சியர்
===============================
வருவாய் ஆவணங்களில் இவ்விடங்கள் நத்தம் காலிமனையாக உள்ளன
ஆனால் - இவ்விடங்களை சில தனியார், தங்கள் இடம் என உரிமைகொண்டாடுகிறார்கள்.
இது குறித்து விசாரிக்கவேண்டும். ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க இவ்விடத்தை சுற்றி வேலி அமைக்கலாம்
இத்திட்டத்திற்கு தேவையான 25 சென்ட் நிலத்தை இப்பகுதியில் இருந்தும் தெரிவு செய்யலாம்
===============================
சர்வே எண் 278 குறித்து மாவட்ட ஆட்சியர்
===============================
இவ்விடம் தனியார் இடம். இந்த இடத்தை உரிமையாளர் இனாமாக தர வாய்ப்புள்ளது என நகர்மன்றத் தலைவி தெரிவித்ததால், இவ்விடமும் பார்வையிடப்படுகிறது
நகர்புறத்தில் இருந்து இவ்விடம் 4 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது
கடற்கரை பகுதியினை ஒட்டி இவ்விடம் அமைந்துள்ளது
நிலத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது
25 சென்ட் அளவு நிலப்பரப்பை குறைந்த விலைக்கு அரசுக்கு தருவதாக நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது
மேற்படி நிலத்தை இலவசமாக பெற நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்
கடற்கரைப் பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால், CRZ வரையறைக்குள் அமைய பெறாவண்ணம் இடம் தேர்வு செய்யப்படலாம்
இம்மூன்று இடங்களில் ஒரு இடத்தை தெரிவு செய்து நகராட்சி தீர்மானம் நிறைவேற்றி துரித நடவடிக்கை எடுக்க ஆணையருக்கு, மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார்.
இந்த மூன்று இடங்களில் - அருணாச்சலபுரம் இடத்தில் உள்ள நிலங்களை ஒரு சிலர் உரிமை கொண்டாடி வருகிறார்கள் என்பது ஆட்சியர் அறிக்கையில் இருந்து தெளிவாக தெரிகிறது. எனவே - அவ்விடத்தில், பயோ காஸ் திட்டத்தை கொண்டு வந்தால் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது.
எஞ்சிய இரண்டு இடங்களில், சர்வே எண் 392/5 - அரசு இடம், ஆவணப்படி - 1976 ஆம் ஆண்டே, அப்போதைய காயல்பட்டினம் பஞ்சாயத்துக்கு, வட்டாச்சியர் அலுவலகம் வழங்கியுள்ள இடம். இதை பெறுவதற்கு எவ்வித சிரமும் இல்லை; ஆட்சியர் அவ்விடத்தை பலமாகவும் பரிந்துரைக்கிறார்.
392/5 இடத்திற்கு _முறையான அணுகுபாதை உள்ளது என்றும் ஆட்சியர் தனது அறிக்கையில் கூறுகிறார்; உறுப்பினர் சாமியின் கோரிக்கையான மயானத்திற்கு கூடுதல் இடம் தேவை என்பதை நிராகரித்து விட்டு,மயானத்திற்கான இடம் தேவை என்பதையும், ஏற்கனவே 5 ஏக்கர் மயானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொண்டு - எஞ்சிய இடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வரலாம் என்கிறார் ஆட்சியர்.
392/5 இடத்தை - தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து அளவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து சர்வே எண் 278 இடம்.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், டிசம்பர் 2012 இல் நடந்த பேரவை கூட்டத்தில் இடம் தருவதாக தெரிவித்தபிறகு, இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் - ஆட்சியர் பார்வையிட வரும் நாள் வரை - எடுக்கவில்லை.
CRZ க்குள் வரும் இடம், CRZ க்குள் வராத இடம் என பேரவை கூட்டத்தில் வாக்குறுதி கொடுத்து 10 மாதங்கள் ஆகியும் அவ்வாறு முன்னாள் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் பிரிக்கவில்லை; அரசுக்கும் அன்றைய தேதிவரை எழுதிக் கொடுக்கவில்லை.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, நகராட்சி ஆணையர் அசோக் குமார் - மாவட்ட ஆட்சியர் காயல்பட்டினம் வந்து சென்ற அதே தேதியில் (8-10-2013), 392/5 இடத்தை காயல்பட்டினம் நகராட்சிக்கு - பயோ காஸ் திட்டத்திற்காக - எழுதி வழங்க ஆட்சியரிடம் விண்ணப்பிக்கிறார்.
மாவட்ட ஆட்சியர் - தனது அறிக்கையில் அறிவுறுத்தியப்படி, மாவட்ட ஆட்சியரின் அறிக்கையை பரிசீலனை செய்ய, மூன்று தினங்கள் கழித்து (11-10-2013), அவ்வறிக்கை கூட்டத்தில் பொருளாக வைக்கப்பட்ட போது,
// இதுவரை தனியாரால் அரசுக்கு எழுதிக்கொடுக்கப்படாத
// CRZக்குள் வரும் பகுதி / CRZக்கு வெளியிலான பகுதி என இதுவரை பிரிக்கப்படாத
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தருவதாக முன்வந்துள்ள சர்வே எண் 278 இடத்தில் தான் - பயோ காஸ் திட்டத்தையும், குப்பைக்கிடங்கு திட்டத்தையும், கொண்டு வரவேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்!
அதாவது - தீர்மானம் நிறைவேற்றப்படும் தினத்தில் அரசுக்கு எழுதிக்கொடுக்கப்படாத, அது மட்டும் அல்ல - அன்றைய தேதியில் இருந்து இன்னும் இன்னும் ஓர் ஆண்டுக்கு எழுதிக்கொடுக்கப்படாமல் இருக்க போகிற - ஒரு நிலத்தை, உறுப்பினர்கள், 11-10-2013 அன்று தேர்வு செய்கிறார்கள்.
ஐக்கிய பேரவை கூட்டத்தில் வாக்குறுதி கொடுக்கப்பட்டு - ஏறத்தாழ 2 ஆண்டுகள் கழித்தே, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - அக்டோபர் 9, 2014 இல் - காயல்பட்டினம் நகராட்சிக்கு - நிலத்தையே எழுதி கொடுக்கிறார்!
அன்றே - மாவட்ட ஆட்சியரின் பலமான பரிந்துரையின்படி, சர்வே எண் 392/5 இடம் - பயோ காஸ் திட்டத்திற்கு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டிருந்தால், அத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த, பணிகளை துவக்கியிருக்கலாம்.
இதில் வேடிக்கை என்னவென்றால் - இந்த உண்மைகள் எல்லாம், மறைக்கப்பட்டு, முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களால் தான் பயோகாஸ் திட்டம் நிறைவேற்றப்படுவது காலதாமதம் ஆகியது என ஆதிக்க சக்திகளும், அதிகார வர்க்கமும், நிலப்பிரபுத்துவவாதிகளும் பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்!!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 6, 2017; 8:00 am]
[#NEPR/2017120601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |