காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“இந்திய அரசியல் சாசனம் தந்த அம்பேத்கர் மறைந்த நாளில் பழுகுழியில் புதைக்கப்பட்ட ஜனநாயகம்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் பத்தாம் பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
நவம்பர் 30, 2012 அன்று நடந்த நகர்மன்றக்கூட்டத்தில், பப்பரப்பள்ளிக்கு மாற்றாக வேறு இடத்தில குப்பைக்கிடங்கு அமைக்கவும், பயோ காஸ் திட்டத்தினை அமைக்கவும் - 4 புறம்போக்கு இடங்களை இறுதி செய்து, அதில் ஒன்றை நகராட்சிக்கு வழங்கிட கோரி - ஏகமனதாக தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, நகராட்சியை விட்டு வெளியே வந்த உறுப்பினர்கள் - அதே திட்டங்களுக்கு இடம் வழங்கிட கோரி, காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை கதவை - டிசம்பர் 6, 2012 அன்று - தட்டினார்கள். அதாவது தீர்மானம் நிறைவேற்றிய 6 தினங்களுக்குள்!
அரசு புறம்போக்கு நிலங்களை பரிசீலனை செய்யலாம் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதற்கான எந்த கால அவகாசமும் கொடுக்காமல், ஆறு தினங்களுக்குள் - தங்களிடம் நேராக வந்து - இடம் கோரி - கடிதம் தந்த நகர்மன்ற உறுப்பினர்களிடம், காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை, என்ன சொல்லியிருக்க வேண்டும்?
உறுப்பினர்கள் தந்த கடிதத்தின் பொருளை படித்தவுடன் - பேரவையினர்களுக்கு விளங்கி இருக்கும் இது எது குறித்த கடிதம் என்று!
ஆகஸ்ட் 9, 2012 அன்று - இது சம்பந்தமாக - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்கள் - எங்களை எல்லாம் ஐக்கியப் பேரவைக்கு அனுப்பிய, நாங்கள் அங்கம் வகிக்கின்ற ஒவ்வொரு ஜமாஅத்துக்கும் வழங்கிய கடிதத்தில் இந்த சமாச்சாரம் இருந்தது; நாங்கள் அலசி பார்த்தோம் - ஒரு இடமும் கிடைக்கவில்லை அல்லது ஒரே ஒரு இடம் கிடைத்தது, அது ஆறாம்பள்ளி ஜமாஅத் சார்ந்த, கண்ணியமிக்க நமது முன்னாள் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களுடைய இடம். முக்கியமான விஷயம் ஆயிட்டே, நாங்கள் எல்லாம் சின்ன பிள்ளைகளாக இருக்கும் போதிலிருந்தே - உள்ள பிரச்னையல்லவா பப்பரப்பள்ளி விஷயம். அதனால் நாங்கள் உடனடியாக – நகர்மன்றத் தலைவருக்கு தகவல் கொடுத்துவிட்டோம் என்று அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் - பேரவையினர் அவ்வாறு சொல்லவில்லை; ஏன் என்றால் அவர்கள் அவ்வாறு நடக்கவில்லை.
அந்த கடிதத்தை தொடர்ந்து படித்திருந்தார்கள் என்றால், இறுதியில் கையெழுத்து பகுதிக்கு வந்திருப்பார்கள். அதில் அனைவரின் கையெழுத்தும் இருந்திருக்கும் - ஒருவரின் கையெழுத்து தவிர. அது தான் நகர்மன்றத்தலைவரின் கையெழுத்து.
உடனடியாக - பேரவையினர் என்ன செய்திருக்க வேண்டும்?
வந்த உறுப்பினர்களிடம் ஏன் - தலைவி, கையெழுத்து போடவில்லை என வினவியிருக்க வேண்டும். வினவியிருப்பார்கள் என வைத்துக்கொள்வோம். உறுப்பினர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? தலைவி கையெழுத்து போட மறுத்துவிட்டார்கள் என சொல்லியிருப்பார்கள்?
உடனடியாக - பேரவையினர் என்ன செய்திருக்க வேண்டும்?
தான் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு - பேரவையினரை சந்தித்து வாழ்த்து பெற்றவர்தானே ... அவரின் தொலைபேசி எண் - பேரவையினரிடம் இல்லாமலா இருக்கும். உடனே அவரை தொடர்புக்கொண்டு - "என்ன அம்மா ... ஆகஸ்ட் மாதமே நீங்கள் எல்லா ஜமாஅத்துக்கும் கடிதம் எழுதினீர்களே, உங்களுக்கு இன்னும் இடம் கிடைக்கவில்லையா? இப்போது எங்களை தேடி 18 உறுப்பினர்களும் இடம் கேட்டு வந்திருக்கிறார்களே" - என கேட்டிருக்கவேண்டும்? ஆனால் - அப்படி அவர்கள் கேட்கவில்லை.
அப்படி அவர்கள் கேட்டிருந்தால் - விளக்கமாக நகர்மன்றத்தலைவி தெரிவித்திருப்பார்கள். என்னவென்று?
"பப்பரப்பள்ளிக்கு மாற்று இடமாகவும், பயோ காஸ் திட்டத்தினை அமைத்திடவும் - 4 புறம்போக்கு இடங்கள் அடையாளம் கண்டுள்ளோம்; அதில் ஒன்றை நகராட்சிக்கு தர வேண்டி ஏகமனதாக - அதாவது 18 உறுப்பினர்களும் - ஆதரவு தெரிவித்து - தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்" என தெரிவித்திருப்பார்கள்.
டிசம்பர் 6 அன்று தங்களை சந்தித்த உறுப்பினர்களிடம் இது சம்பந்தமாக பேரவை கூடி முடிவு செய்யும் என தெரிவித்துவிட்டு - ஜனநாயகத்தை படுகுழியில் புதைத்து, உறுப்பினர்களை வழியனுப்புகிறார்கள் பேரவையினர்.
டிசம்பர் 19 அன்று ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் பேரவை கூட்டம் கூடுகிறது. அதில் இடம்பெற்ற ஒற்றை பொருள் - குப்பைக்கிடங்குக்கு இடம்கோரி உறுப்பினர்கள் சமர்ப்பித்த கடிதம்.
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்து பல மாதங்கள் கழித்து நடந்த ஐக்கிய பேரவை கூட்டத்தில் - அந்த கூட்டம் நடந்த ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் இருந்து, கூப்பிடும் தூரத்தில் இருக்கும் நகர்மன்ற கூட்டரங்கில் - டிசம்பர் 14, 2012 அன்று - நகர்மன்ற உறுப்பினர்கள் செய்த அட்டூழியம் கூட்டுப்பொருளாக இல்லை.
இரண்டாம் குடிநீர் திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளிக்கு, ஒப்புதல் வழங்க டிசம்பர் 14 அன்று கூட்டப்பட்ட நகர்மன்ற கூட்டத்தில் - உறுப்பினர் ஒருவர், நகர்மன்றத்தலைவரை "வவுந்து விடுவேன்" என மிரட்டுகிறார்; அந்த உறுப்பினரை எச்சரித்து, காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டிய கடமையில் இருந்த இதர உறுப்பினர்கள், இந்த சம்பவங்களை வீடியோ பதிவு செய்துக்கொண்டிருந்த செய்தியாளரை - வீடியோ எடுப்பதில் இருந்து தடுக்கிறார்கள்.
மக்கள் மன்றத்தில் - 10,000 மக்களின் வாக்கினை பெற்று, மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட ஒரு நகர்மன்றத்தலைவரை - அதுவும் ஒரு பெண்மணியை, பேரவையில் அங்கம் வகிக்கும் ஒரு ஜமாஅத்தினை (புதுப்பள்ளி) சார்ந்தவரை - தாக்க முற்பட்ட உறுப்பினர்களை கண்டித்து - பேரவை கூட்டிய கூட்டத்தில் ஒரு தீர்மானம் கிடையாது; தேர்தலில் நிற்காதீர்கள் என தாங்கள் தூதுவிட்டும், அதனை கேட்காமல் தேர்தலில் நின்று - மக்களின் ஆதரவு பெற்று - நகர்மன்றத்தலைவர் ஆனவர் அல்லவா; அவருக்கு ஆதரவாக ஒரு விரலை நாங்கள் எப்படி அசைப்போம் என்ற நினைப்பில் அவர்கள் இருந்தார்கள் போலும்.
அநீதிக்கு எதிராக ஒரு விரலையும் அன்று அசைக்காத பேரவையினர் - தாங்கள் பதவிக்கு வரும்போது நகர்மன்ற வளாகத்தில், சபையோர் சாட்சியாக, எடுத்த உறுதிமொழியை மறந்து, தாங்கள் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கே புறம்பாக, பேரவையை நாடிய உறுப்பினர்கள் தந்த கடிதம் மட்டுமே - டிசம்பர் 19 அன்று ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில், பேரவை கூட்டிய கூட்டத்தின் ஒரே பொருள். அந்த ஒரு பொருளுக்கு மூன்று தீர்மானங்கள்.
டிசம்பர் 19, 2012 கூடிய ஐக்கிய பேரவை நிறைவேற்றிய முதல் தீர்மானம்:
நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள் 13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள். மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.
தான் நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை மூன்று மாதங்களுக்குள் ரத்து செய்யும் அதிகாரம் - அந்த தீர்மானத்தை நிறைவேற்றிய, இந்திய அரசியல் சாசனப்படி, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட நகர்மன்றத்திற்கே கிடையாது. அப்படி ரத்து செய்யவேண்டும் என்றால் - அதற்கான சிறப்பு கூட்டம் கூட்டி - அதனை ஒரு பொருளாக வைத்து தான் ரத்து செய்யவேண்டும்.
பார்க்கவும் தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் 1920, தொகுப்பு 3, பிரிவு 8.
SCHEDULE III: RULES REGARDING PROCEEDINGS OF THE COUNCIL (See section 25)
MODE OF TRANSACTING BUSINESS
8. No resolution of the Council shall be modified or cancelled within three months after the passing thereof except at a meeting specially convened in that behalf and by a resolution of the Council supported by not less than one-half of the sanctioned number of members.
ஆனால் - சட்டரீதியாக எந்த அங்கீகாரமும், அதிகாரமும் இல்லாத காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை, உண்மையான மக்கள் மன்றமான நகர்மன்றம் - 19 தினங்களுக்கு முன் நிறைவேற்றிய தீர்மானத்தை செல்லா காசாக்க முற்படுகிறது.
டிசம்பர் 19, 2012 கூடிய ஐக்கிய பேரவை நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானம்:
தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே.
கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நகராட்சியின் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கெளரவ ஆலோசனை குழு உறுப்பினர் மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
அரசு நிலம் ஒன்றை தேடி பார்ப்போம் என நகர்மன்றம் எடுத்த தீர்மானத்திற்கு மாற்றமாக, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் (மீண்டும்) தர முன்வந்த - அவரின் கடையக்குடி இடத்தை - வழிமொழிந்து, தக்பீர் முழக்கத்துடன் இரண்டாவது தீர்மானமும் நிறைவேற்றப்படுகிறது.
அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு, தனது கடையக்குடி இடத்தை - பப்பரப்பள்ளி இடத்திற்கு மாற்றாக (இரண்டாவது முறையாக, முதல் முறை ஆகஸ்ட் 2009 இல்) தர முன்வந்த - முன்னாள் தலைவரிடம், நீங்கள் பொறுப்பில் இருந்த 2006 - 2011 வரையிலான காலகட்டத்தில் ஏன் அதை செய்து முடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்படவில்லை.
அந்த கேள்வியை - மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதிய தலைவரிடம் - எதிர் வரும் புத்தாண்டிலும் (2013), 2014 லும், 2015 லும், 2016 லும், 2017 லும், வாய்ப்பிருந்தால் 2018 லும் கேட்போம் என பாதுகாத்து வைத்தார்கள் போலும்?
நியாயமாக, கண்ணியமாக நடந்துக்கொள்ளவேண்டிய ஐக்கிய பேரவையின் கண்ணை அன்று மறைத்தது 18 உறுப்பினர்களின் கையெழுத்து!
நாம் நிற்கவைத்த தலைவர் வெற்றிபெறவில்லை என்றால் என்ன; எங்களிடம் 18 உறுப்பினர்கள் உள்ளார்கள்; இனி நாங்கள் தான் தலைவர்கள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள் போலும்?
அல்லது இந்த தலைவியை பதவி விட்டு நீக்க, சென்னையில் அதே வாரம் நடந்த உறுப்பினர்கள் - ஒரு IAS அதிகாரியுடனான சந்திப்பு செய்தி, அவர்களையும் எட்டியிருக்கும். அந்த நல்ல நாளை எதிர்பார்த்து பொறுமை காத்திருந்திருப்பார்கள்?
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 4, 2017; 1:45 pm]
[#NEPR/2017120401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|