காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள அளவில் மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசுக்கு பிரேரணை (proposal) அனுப்பப்பட்டுள்ளதாக, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS), ‘நடப்பது என்ன?’ சமூக ஊடகக் குழுமத்திற்கு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நான்கு மருத்துவர்கள் பொறுப்புக்கு தற்போது அனுமதியுள்ளது (SANCTIONED POSTS). இந்த எண்ணிக்கையை அதிகரிக்க கோரி - கடந்த பல மாதங்களாக நடப்பது என்ன? குழுமம் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
இது சம்பந்தமாக தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரகப் பணிகள் துறை இயக்குநர் (DMS) டாக்டர் M.R.இன்பசேகரன் - நடப்பது என்ன குழுமத்திற்கு வழங்கியுள்ள பதிலில் - ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கையை (SANCTIONED POSTS) அதிகரிக்க அரசுக்கு பிரேரணை (PROPOSAL) அனுப்பபட்டுள்ளதாகவும், அரசின் அனுமதிக்காக எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி - தற்போது காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள் எண்ணிக்கை 4 இல் இருந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனையை தாலுகா தகுதி அரசு மருத்துவமனையாக தகுதி உயர்த்த வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதில் வழங்கியுள்ள இயக்குனர், தற்போதைய அரசின் கொள்கைப்படி - நிர்வாகக்காரணங்களுக்காக - ஒரு தாலுகாவிற்கு ஒரு தாலுகா மருத்துவமனை தான் உருவாக்கமுடியும் என்றும், அந்த அடிப்படையில் திருச்செந்தூர் தாலுகாவில் - தலைமை ஊர் திருச்செந்தூர் என்பதால் - அங்கு தாலுகா மருத்துவமனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனை தற்போது தாலுகா மருத்துவமனையாக இல்லாவிட்டாலும், மருத்துவமனை தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு ஏற்பவும் - வசதிகள் வழங்கப்படுகின்றன என்றும், தற்போது மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 5, 2017; 3:15 pm]
[#NEPR/2017120502]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|