காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“காயல்பட்டினம் & ஆறுமுகநேரிக்குப் பொதுவான குப்பைக் கிடங்கு அமைய இரு ஊர் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வேண்டுகோள்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 17ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
ஆகஸ்ட் 2012 இல், பயோ காஸ் திட்டத்திற்கும், பப்பரப்பள்ளி குப்பைக் கிடங்குக்கு மாற்றாகவும், அப்போதைய நகர்மன்றத் தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் - அனைத்து ஜமாஅத்துகள், பொது நல அமைப்புகள், பொதுமக்களிடமும் இடம் கோரி அறிக்கை வெளியிட்டார்.
அதன் பிறகு - நான்கு புறம்போக்கு இடங்கள் - அடையாளம் காணப்பட்டு, அவற்றில் ஒன்றை மாவட்ட ஆட்சியர் - அரசுக்கு பரிந்துரைக்க, நவம்பர் 2012 இல் நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் இரு மாவட்ட ஆட்சியர்கள் - காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்து பார்வையிட்டதன் அடைப்படையில், குப்பைக்கொட்டுவதற்கான இடங்கள் குறித்தும், பயோ காஸ் திட்டத்திற்கான இடங்கள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
குப்பைகொட்டுவதற்கு பனைப்பொருள் துறைக்கு சொந்தமான சர்வே எண் 524/1இடம் பரிசீலனையில் இருந்தது. இது சம்பந்தமாக காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், உ.சகாயம் IAS யை சந்தித்த பிறகு - சந்தை விலையில் அந்த இடத்தை தர, அத்துறையும் சம்மதம் தெரிவித்திருந்தது. அரசு வழிகாட்டல் விலையில் அவ்விடத்தை வாங்க - கடித போக்குவரத்துகள் நடந்துக்கொண்டிருந்தன.
சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா - காயல்பட்டினத்திற்கான பயோ காஸ் திட்டத்தினை - ஏப்ரல் 2013 இல் அறிவித்திட, பயோ காஸ் திட்டத்திற்கு தனி இடம் பார்க்கும் முயற்சிகள் துவங்கப்பட்டு - சில இடங்களும், முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே - எவ்வித அவசியமும் இல்லாமல், உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டார்கள் என்ற காரணத்தை கூறி - டிசம்பர் 19, 2012 இல் காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை ஒரு கூட்டத்தை கூட்டி - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - இத்திட்டங்களுக்கு இடம் தருவார் என அறிவித்திருந்தது.
அதனை நம்பி - உறுப்பினர்கள், பயோ காஸ் திட்டத்திற்கு காண்பிக்கப்பட்ட அனைத்து மாற்று இடங்களையும் நிராகரித்து வந்தனர். இச்செய்திகள் - ஆவணங்கள் அடிப்படையிலான ஆதாரங்களுடன், முந்தைய பாகங்களில் தெளிவு படுத்தப்பட்டது.
பப்பரப்பள்ளிக்கு மாற்றாக புதிய குப்பைகொட்டும் இடம் தேடல் - பனைப்பொருள் இலாக்காவிற்கு சொந்தமான சர்வே எண் 524/1 இடத்துடன் நிற்கவில்லை.
நவம்பர் 2012 இல் காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் - காயல்பட்டினம் குறுக்கு சாலை (BYE PASS) அருகே, இரு இடங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தது.
அவ்விடங்கள் விபரம் வருமாறு:
(1) புல எண் 8 A - ஏக்கர் 24 - காயல்பட்டினம் வட பாக கிராமம்
(2) புல எண் 237/BB/1 - ஏக்கர் 22 - காயல்பட்டினம் தென் பாக கிராமம் - மத்திய அரசின் உப்பு இலாக்கா
காயல்பட்டினத்திற்கு அடுத்துள்ள ஊரான ஆறுமுகநேரியும் குப்பை கொட்டுவதற்கான இடம் தேடி வருவதை அறிந்து, காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களும், ஆறுமுகநேரி டவுன் பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரம் அவர்களும் - இரு உள்ளாட்சிகளுக்கும் பொதுவான ஒரு இடத்தை - குறுக்கு சாலை அருகே தேர்வு செய்யலாம் என விரும்பினர்.
காயல்பட்டினம் நகர்மன்றம் - குறுக்கு சாலை அருகே இரு இடங்களை பரிசீலனை செய்ய தீர்மானம் நிறைவேற்றியது போல், ஆறுமுகநேரி டவுண் பஞ்சாயத்தும் - குறுக்கு சாலை அருகே உள்ள இடத்தில் குப்பைக் கிடங்கு அமைத்திட தீர்மானம் நிறைவேற்றியது.
அவ்விரு தீர்மானங்களையும் எடுத்துக்கொண்டு - இரு உள்ளாட்சி தலைவர்களும், இணைந்து - மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் IAS அவர்களை சந்தித்து - தங்கள் கோரிக்கையை வைத்தனர்.
மே 2013 இறுதியில் காயல்பட்டினத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் IAS அவர்களும் - அவ்விடத்தை பார்த்து சென்றார்.
காயல்பட்டினம் நகராட்சிக்கு என 2009 இல் அறிவிக்கப்பட்ட CITY DEVELOPMENT PLAN (CDP) திட்டமும், தனது பரிந்துரையில் (பக்கம் 51) - அருகில் உள்ள உள்ளாட்சி மன்றங்கள் இணைந்து - பொதுவான குப்பைக்கிடங்கை உருவாக்கலாம் என பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
KM should co-ordinate with State Government for clustering in regional engineered land fill site for waste disposal involving other neighbouring ULBs. This ensures scale and viability to the private participation mode. (CITY DEVELOPMENT PLAN - FINAL DRAFT - KAYALPATTINAM MUNICIPALITY; PAGE 51)
குப்பை கொட்டுவதற்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தருவதாக கூறியுள்ள இடத்தில் தான் குப்பைக் கிடங்கு அமைய வேண்டும் என அக்டோபர் 11, 2013 இல் - உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து - வேறு இடங்களை, உறுதியான வகையில் பரிசீலனை செய்யமுடியாத சூழல் உருவானது.
வாக்குறுதி கொடுத்து பல மாதங்கள் ஆகியும் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் எழுதிக்கொடுக்காததால், பப்பரப்பள்ளிக்கு மாற்று இடம் முடிவு செய்வதும் கால தாமதம் ஆகிக்கொண்டிருந்தது; பயோ காஸ் திட்டத்திற்கு டெண்டர் விடுவதும் காலதாமதம் ஆகி கொண்டிருந்தது.
வேறு வழியில்லாமல் - ஜூலை 3, 2014 அன்று பயோ காஸ் திட்டத்திற்கு, டெண்டர் அழைப்பு, காயல்பட்டினம் நகராட்சி சார்பாக விடப்பட்டது.
வேடிக்கை என்னவென்றால் - டெண்டர் விடப்பட்ட நேரத்தில் கூட, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - CRZ இடம் / CRZ இல்லாத இடம் என பிரித்து, காயல்பட்டினம் நகராட்சிக்கு, தான் தருவதாக - டிசம்பர் 2012 இல் சொன்ன இடத்தை - தரவில்லை.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 7, 2017; 6:30 pm]
[#NEPR/2017120702]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|