பல்வேறு பட்ட மேற்படிப்புகளுக்காக – காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க நேர்காணல் மூலம், நகரின் 36 மாணவர்களுக்கு 3 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதன் செயலாளர் என்.எஸ்.இ.மஹ்மூது வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கடந்த 12 ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I. போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 40 முதல் 50 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு (2017-18) 29 மாணவ-மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக ரூபாய் 4,41,000 வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இது தவிர கடந்த ஏழு ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இவ்வருடமும் (2017-18) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 09:45 மணி முதல் 01:30 மணி வரை, காயல்பட்டினம் கீழ நெயினா தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.ஸதக் தம்பி, ஹாஜி ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஐ.மெஹர் அலி, ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர்.
இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது ஆகியோர் இந்நேர்காணல் நிகழ்வின்போது உடனிருந்தனர்.
அழைக்கப்பட்டிருந்த 39 மாணவ - மாணவியரில் 28 மாணவர்கள், 8 மாணவியர் உட்பட மொத்தம் 36 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான) ரூ.3,72,000/- நேர்காணல் முடிந்த நான்காவது தினத்தில் வழங்கி முடிக்கப்பட்டது.
இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் B.Pharm, B.Ed., M.Sc(Media Communication), M.Sc (IT), M.Com, B.Sc (AHS) Critical Care Technology, B.Sc (HONS) Sports Medicine, B.Sc(Hotel Management), B.Sc(Comp. Sci.), B.E. (Mechanical, ECE, Civil, Automobile), Dip. in Mechanical, Civil, Automobile, Fire & Safety (PDFSE) உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் B.Sc (Nursing), BPT (Physiotherapy), B.Ed., M.Sc.(Maths), M.Com, Diploma in Biochemical and Microbial Techniques (DBMT) உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.
இக்ராஃ ஜகாத் நிதியைப் பொறுத்தவரை 2010-11 ஆம் வருடம் ரூபாய் 48,000/- கிடைக்கப் பெற்று 5 மாணவ -மாணவியருக்கும், 2011-12 ஆம் வருடம் ரூபாய் 91,800/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும், 2012-13 ஆம் வருடம் ரூபாய் 4,36,400/- கிடைக்கப்பெற்று 39 ஏழை-எளிய மாணவர்களுக்கும், 2013-14 ஆம் வருடம் ரூபாய் 2,40,600/- கிடைக்கப்பெற்று 25 மாணவ-மாணவியருக்கும், 2014-15 ஆம் வருடம் ரூபாய் 2,27,000/- கிடைக்கப்பெற்று 22 மாணவ-மாணவியருக்கும், 2015-16 ஆம் வருடம் ரூபாய் 2,36,000/- கிடைக்கப்பெற்று 28 மாணவ-மாணவியருக்கும், சென்ற வருடம் (2016-17) ரூபாய் 3,66,100/- கிடைக்கப்பெற்று 32 மாணவ-மாணவியருக்கும், இவ்வருடம் (2017-18) ரூபாய் 3,72,000/- கிடைக்கப்பெற்று 36 மாணவ-மாணவியருக்கும், கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆக கடந்த 8 ஆண்டுகளில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜக்காத் நிதி ரூபாய் 20,17,900/- ஐ 197 ஏழை-எளிய மாணவ- மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஜகாத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கிய சகோதரர்களுக்கு மிகுந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இன்ஷா அல்லாஹ்! இனி வரும் வருடங்களில் இதை விட அதிகமாக ஜகாத் நிதி கிடைக்கப் பெற்று, அதனை முறையாக ஏழை- எளிய மாணவர்களுக்கு வழங்கி அதன்மூலம் அவர்கள்தம் வாழ்வை பிரகாசம் பெறச் செய்வோமாக! அல்லாஹ் அதற்கு அருள் புரியட்டுமாக! ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.தர்வேஷ் முஹம்மத்
(நிர்வாகி, இக்ராஃ கல்விச் சங்கம்)
|