காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“ஒரு கி.மீ. தொலைவுக்கு குடியிருப்புகளோ, தெருக்களோ, தெரு விளக்குகளோ இல்லாத பகுதியில் யாருக்காக இந்த மின்சாரம்?” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 19ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சட்டங்கள், விதிமுறைகள் - பொதுவாக மக்கள் நலன் கருதியே இயற்றப்படுகின்றன.
உதாரணமாக - சுற்றுச்சூழல் சம்பந்தமான சட்டங்கள்; இவை இயற்றப்படுவதற்கான முக்கிய நோக்கங்களில் ஒன்று, வேதியல் பொருட்கள் அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளதை அடுத்து - அவற்றால் ஏற்படும் மாசுவை கட்டுப்படுத்த.
ஒரு சாலை எவ்வாறு போடப்படவேண்டும் என்ற விதிமுறைகளுக்கான நோக்கம் - மக்கள் வரிப்பணத்தில் போடப்படும் அந்த சாலை நீண்ட நாட்கள் பயனளிக்க வேண்டும் என்பதற்காக.
ஆனால் - இவ்விதிமுறைகள், சட்டங்கள், யாரால் பயன்படுத்தப்படவேண்டுமோ, யாரால் கடைப்பிடிக்கப்பட வேண்டுமோ - பயன்படுத்தவோ, கடைபிடிக்கப்படுவதோ இல்லை.
தனி மனித, சமுதாய நலன்களுக்காக இயற்றப்பட்டுள்ள இச்சட்டங்களை, விதிமுறைகளை - கடைபிடிக்க, அமல்படுத்த - வலியுறுத்துபவர்கள் இன்று, வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இது பரவலாக நாம் காணக்கூடிய ஒரு விஷயம் - காயல்பட்டினத்தில் உட்பட.
காயல்பட்டினத்தில் அமல்படுத்த வேண்டிய, குப்பைக்கிடங்கு திட்டமும் சரி, பயோ காஸ் திட்டமும் சரி - அவைகள் - மக்களுக்கு பிரயோஜனமாக இல்லாமல், நீண்ட நாட்கள் பயன்தரக்கூடியதாக இல்லாமல் போய் விடும் என்ற அச்சத்தில் - அது குறித்து கேள்விகளை எழுப்பியவர்கள் - ஆதிக்க சக்திகளாலும், அதிகாரவர்க்கத்தாலும், நிலப்பிரபுத்துவவாதிகளாலும், ஊழல்வாதிகளாலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கபட்டார்கள். இருப்பினும் - அரசு திட்டங்கள் - சுய நலன்களுக்காக, சீரழிக்கப்படுவதை, வளைக்கப்படுவதை வெளிக்கொண்டுவருவது, எதிர்ப்பது - சமூக சிந்தனை கொண்டுள்ள அனைவரின் கடமையாகும்.
அரசாணை வெளிவந்து 26 மாதங்கள் கழித்து, ஐக்கிய பேரவை கூட்டத்தில் வாக்குறுதி கொடுத்து 22 மாதங்கள் கழித்து - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - அவரின் சர்வே எண் 278 இடத்தின் ஒரு பகுதியை - பயோ காஸ் திட்டம் நிறைவேற்றவும், குப்பைக்கிடங்கு திட்டம் நிறைவேற்றவும் - அக்டோபர் 9, 2014 அன்று பதிவு செய்யப்பட்ட இரு பத்திரங்கள் வாயிலாக, அரசுக்கு எழுதி வைத்தார்.
பொருத்தமில்லாத ஒரு இடத்தில் இரு முக்கிய திட்டங்கள் செல்வதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க முடியாமல், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனருக்கு, அக்டோபர் 13, 2014 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் - பொருத்தமில்லாத ஒரு இடத்திற்கு, முக்கிய இரு திட்டங்கள் கொண்டு செல்லப்படுவதை சுட்டிக்காட்டி, பரிசீலனை செய்யப்பட்ட இடங்களில், பொருத்தமான இடம் குறித்து - தொழில்நுட்ப அறிக்கை, வல்லுநர்களால் தயாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
அக்டோபர் 20, 2014 தேதிக்கு அழைக்கப்பட்ட கூட்டத்தில், பயோ காஸ் திட்டத்திற்கான டெண்டர் முடிவுகள் பரிசீலனைக்கு வருகிறது. அப்போது - தொழில்நுட்ப அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படாததால், தொடரும் கூட்டத்தில் அப்பொருள் குறித்து பரிசீலனை செய்யலாம் என ஒத்திவைக்கப்படுகிறது.
இதற்கிடையே - திருநெல்வேலி மண்டலத்தின் நகராட்சி நிர்வாகத்துறை செயற்பொறியாளர் திரு கனகராஜ் - அக்டோபர் 17, 2014 தேதிய அறிக்கை ஒன்று தயாரிக்கிறார். அதில் – நகர்மன்றத் தலைவர் கோரியபடி எவ்வித தொழில்நுட்ப விஷயங்களையும் கருத்தில் கொள்ளவில்லை.
மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த 392/5 இடம் குறித்து - இவ்விடம், தீர்மானம் எண் 728 (20.01.2014) மூலம் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது என்று மட்டும் கருத்து கூறுகிறார். அவ்விடம் இத்திட்டத்திற்கு பொருத்தமா என்று எவ்வித கருத்தையும் சொல்லவில்லை.
மேலும் - சர்வே எண் 278 இடம் குறித்து தெரிவிக்கையில், இவ்விடத்திற்கு உறுப்பினர்கள் அக்டோபர் 2013 லேயே ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள் என்றும், அக்டோபர் 9, 2014 இல் அவ்விடம் தானம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்.
நகைப்புக்குரிய வகையில் - அவரின் அறிக்கையின் இறுதியில், அந்த இடத்தை (சர்வே எண் 278) சுற்றி குடியிருப்புகள் ஏதும் இல்லாததால், நில அளவை எண் 278 இல் பயோ மீத்தனேசன் பிளான்ட் அமைத்திட உகந்த இடமாக உள்ளது என்பதனை பணிவுடன் தெரிவித்து கொள்வதாக தெரிவித்து, அவ்வறிக்கையை முடிக்கிறார்.
சுற்றுப்புறத்தில் - ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகள், தெருக்கள், தெரு விளக்குகள் இல்லாத பகுதியில் - யாருக்காக, இந்த மின்சாரம் தயாரிக்கப்படுகிறது?
டெண்டர் விதிமுறைப்படி - பயோ காஸ் திட்டம் அமையும் இடத்திற்கு அருகில் உள்ள எத்தனை தெருக்களுக்கு இத்திட்டம் பயன்தரும் போன்ற (டெண்டர் விதிமுறைகள் கூறும்) அடிப்படை தகுதிகளை கூட கருத்தில் கொள்ளாமல், அவ்வறிக்கையை - மண்டல செயற்பொறியாளர் கனகராஜ் - வழங்குகிறார்.
வழங்கப்பட்ட சிறிய இடத்தில் - பயோ காஸ் திட்டம் அமைவதால், குப்பைக்கிடங்குக்கான இடம் குறையுமே, என்ற அம்சத்தை கூட - செயற்பொறியாளர் கருத்தில் கொள்ளவில்லை.
இந்த அறிக்கை - 25.11.2014 அன்று நடந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் - பயோ காஸ் திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டு, அத்திட்டமும், குப்பைக்கிடங்கு திட்டமும் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய சர்வே எண் 278 இடத்தில் கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த தீர்மானம் ஏன் தவறு என்பதற்கான தன் கருத்தை, நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - குறிப்பாக பதிவு செய்கிறார். 13 வது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் மட்டும் - அந்த குறிப்புக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 8, 2017; 4:00 pm]
[#NEPR/2017120802]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|