காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“வழங்கப்பட்டது 5.5 ஏக்கர் அல்ல! 6 ஏக்கர் என பொய்யான தகவல் பரப்பிய ஐக்கியப் பேரவையின் துண்டுப் பிரசுரம்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 20ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகத்தில் நாம் கண்டது போல் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - அக்டோபர் 9, 2014 இல் - தனக்கு சொந்தமான, ஏறத்தாழ 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட சர்வே எண் 278 (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) இடத்தில், "உரக்கிடங்கு மற்றும் அதைச்சார்ந்த நகராட்சி பணிகள் உபயோகத்திற்காக" - ஒரு பகுதியை எழுதி வழங்குகிறார்.
காயல்பட்டினம் வரலாற்றில் - நகரின் முக்கிய தேவைகளுக்கு, நிலம் வைத்துள்ளவர்கள் தானங்கள் வழங்கிய - நிகழ்வுகள் ஏராளம். தற்போது நகராட்சி அமைந்துள்ள இடமாக இருந்தாலும் சரி; தற்போது பேருந்து நிலையம், குடிநீர் தொட்டி, அரசு நூலகம், சார்பதிவாளர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை இடமாக இருந்தாலும் சரி; காயல்பட்டினம் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் சரி; அவ்விடங்கள் எல்லாம் - அரசுக்கு தானமாக வழங்கப்பட்டவையே!
இது தவிர - பள்ளிவாசல்களுக்கு சொத்தாக தங்கள் நிலங்களை எழுதி வழங்கியவர்கள் ஏராளம் உண்டு; பல்வேறு பொது காரியங்களுக்கு - தாராளமாக நிதி வழங்கியவர்களும் ஏராளம் உண்டு.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தர முன்வந்த இடத்திற்கு - பல்வேறு நியாயமான காரணங்களுக்காக ஆட்சேபணைகளை தெரிவித்தவர்கள், அவர் மீதான தனிப்பட்ட வெறுப்பு காரணமாக ஆட்சேபணைகள் முன்வைத்ததாக ஒரு சிலரால் கூறப்பட்டது.
ஒரு கட்டத்தில் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் மீதான காழ்ப்புணர்ச்சியை வைத்துக்கொண்டு அவர் வழங்கும் இடத்தை தான் ஏற்க மறுக்கவில்லை என ஒரு சிலர் பரப்பிய அவதூறுக்கு பதில் தெரிவித்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், சர்வே எண் 278 தவிர்த்து - முன்னாள் நகர்மன்றத்தலைவர் தரும் எந்த இடமாக இருந்தாலும், அங்கு பயோ காஸ் திட்டத்தை கொண்டுபோக தான் தயார் எனவும் - சில உறுப்பினர்களிடம் அவர் தெரிவித்தார்.
2003 ஆம் ஆண்டு - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் குடும்பத்தினர், காயல்பட்டினம் - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உள்ள தங்களுக்கு சொந்தமான ஒரு நிலத்தை நகராட்சிக்கு வழங்கியிருந்தார்கள். எதற்காக அந்த நிலம் - நகராட்சிக்கு வழங்கப்பட்டது என தெரியவில்லை. வாய்ப்பிருந்தால், அவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வரவும் தான் தயார் என நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் கூறினார்.
ஆனால் - சர்வே எண் 278 இடத்தை தவிர வேறு இடங்களில் - அவ்விரு திட்டங்களையும் கொண்டு செல்ல, பெருவாரியான நகர்மன்ற உறுப்பினர்கள் தயாராக இல்லை.
ஒரு நிலம் தானமாக தரப்படுகிறது என்பதாலேயே அவ்விடம் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என எதிர்ப்பார்ப்பது அறிவான செயல் அல்ல; வழங்கப்படும் இடம், எந்த பணிக்காக வழங்கப்படுகிறது; அப்பணி - அவ்விடத்தில் நடந்திட, அவ்விடம் பொருத்தமானதுதானா என பார்ப்பதே, இவ்விஷயத்தில் முக்கியமானதாகும்.
அந்த அளவுகோல்படி - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தர முன்வந்த இடம், பொருத்தமானது அல்ல என்றே - இவ்விடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தவர்கள் கூறிவந்தார்கள். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறிய காரணங்களுக்கு, முறையான பதில்கள் வழங்காமல், பொய்யான தகவல்களும், அவதூறுகளும் முன்வைக்கப்பட்டன.
முன்னாள் நகர்மன்றத்தலைவரின் சர்வே எண் 278 இடம், மூன்று பாகங்கள் கொண்டது:
278/1 (24.23 ஏக்கர்)
278/2 (39 சென்ட்)
278/3 (42 சென்ட்)
அந்த மூன்று பாகங்களில் - பெரிய பாகமான, 278/1 இடத்தில் (24.23 ஏக்கர்) இருந்து தான், முன்னாள் நகர்மன்றத்தலைவர் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, இரு பத்திரங்கள் வாயிலாக இடம் வழங்கினார்.
===========
முதல் பத்திரம்
===========
பத்திரம் எண்: 2286/2014
வழங்கிய இடம் பரப்பளவு: 4 ஏக்கர்
குப்பைக்கிடங்கு மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு வழங்கப்பட்ட இடம். பின்னர் இவ்விடம் 278/1B என உட்பிரிவு எண் பெற்றது
===============
இரண்டாவது பத்திரம்
===============
பத்திரம் எண்: 2287/2014
வழங்கிய இடம் பரப்பளவு: 1.5 ஏக்கர்
466 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட வாவூ கதீஜா சாலை
140 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்ட வாவூ மொகுதூம் சாலை
இவ்விடம் உட்பிரிவு எண் பெறவில்லை
இந்த உட்பிரிவுகள் மேற்கொள்ளப்பட்டு, FMB வரைப்படம் நவம்பர் 2014 இல் வெளிவந்தது. பார்க்கவும் இணைக்கப்பட்டுள்ள வரைப்படம்.
அதன்படி - 278/1 இடம் தற்போது, 278/1A, 278/1B என இரண்டு இடங்களாகியது.
அதில் - 278/1A - 20.23 ஏக்கர் நிலம் கொண்டதாகவும், 278/1B- 4 ஏக்கர் நிலம் கொண்டதாகவும், பிரிந்தது.
இரு பத்திரங்களும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் தெரிவிப்பது போல் - குப்பைகொட்டுவதற்கு என ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் எழுதி வழங்கிய நிலம் 4 ஏக்கர்தான். சாலைகளுக்கு என அவர் 1.5 ஏக்கர் வழங்கியிருந்தார். ஆக மொத்தம் - 5.5 ஏக்கர்.
முந்தைய பாகங்களில் நாம் கண்டது போல் - குப்பைகொட்டுவதற்கு மட்டுமே, 5 ஏக்கர் நிலம், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தது. ஆனால் - அப்பணிகளுக்கு தற்போது 4 ஏக்கர் நிலமே, தானமாக பெறப்பட்டுள்ளது.
உண்மை இவ்வாறிருக்க, காயல்பட்டினம் முஸ்லீம் ஐக்கிய பேரவை வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கியது 5.5 ஏக்கர் அல்ல, 6 ஏக்கர் என்ற பொய்யான தகவல் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் - தானமாக பெறப்பட்ட அந்த 4 ஏக்கர் நிலத்திலும், பெரும் பகுதியை பயோ காஸ் திட்டம் எடுத்துக்கொள்ளும்.
பிறகு குப்பை கொட்டுவதற்கு எவ்வளவு இடம் மிஞ்சும்?
அவ்வாறு மிஞ்சும் இடம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்குமா?
இந்த கேள்விகளுக்கு இன்றைய தேதி வரை பதில் இல்லை.
அது மட்டும் அல்ல; முன்னாள் நகர்மன்றத்தலைவர் மீண்டும் வழங்கிய இடம் - CRZ பகுதிக்குள் வருகிறது என்ற உண்மையும், பொது மக்களிடம் மறைக்கப்பட்டது - நீதிமன்றம் கதவு தட்டப்படும் வரை!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 9, 2017; 4:00 pm]
[#NEPR/2017120901]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|