காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“பினாமி மூலமாக வழக்கு; தந்தி டீவியில் தவறான காட்சிகள் என பரப்பப்பட்ட அவதூறுகளுக்கான விளக்கம்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 27ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
குப்பைக்கிடங்கு துவக்கவோ, பயோ காஸ் பிளான்ட் அமைக்கவோ - அப்பணிகளை செய்ய நாடுவோர், கீழ்க்காணும் அனுமதிகளை - சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெறவேண்டும்:
(1) சுற்றுச்சூழல் ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE; EC) [திட்டத்தை பொறுத்து - மத்தியில் அல்லது மாநில அளவில்]
(2) நகராட்சி திடக்கழிவுகள் விதிமுறைகள்படியிலான அனுமதி (Municipal Solid Wastes [MSW] AUTHORISATION)
(3) கட்டுவதற்கான அனுமதி (CONSENT TO ESTABLISH; CTE) (AIR & WATER ACTS)
(4) கட்டி முடித்த பின் - இயக்குவதற்கான அனுமதி (CONSENT TO OPERATE; CTO) (AIR & WATER ACTS)
இந்த அனுமதிகளில் எதையும் பெறாமல், மார்ச் 25, 2015 அன்று - பயோ காஸ் பிளான்ட் பூமி பூஜையை, அப்போதைய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன், சர்வே எண் 278 இடத்தில நடத்தினார்.
சட்டத்திற்கு புறம்பான இச்செயலை எதிர்த்து, ஏப்ரல் 30, 2015 இல், கொம்புத்துறை (கடையக்குடி) மற்றும் அருணாச்சலபுரம் பகுதி மக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. சுற்றுச்சூழல் சம்பந்தமான விஷயங்கள் இதில் உள்ளதால், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை மனுதாரர்கள் அணுக உத்தரவிட்டு, மே 13, 2015 அன்று - உயர்நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. [WP (MD) NO.7730/2015]
அதன்பிறகு - அவ்வழக்கின் மனுதாரர்கள், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் வழக்கு தொடர்ந்தார்கள். [Application No.100 of 2015]
மே 21, 2015 அன்று விசாரணைக்கு வந்த அவ்வழக்கில் - அன்றே, தற்போதைய நிலை தொடரவேண்டும் (STATUS QUO) என தடை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தடை - ஜனவரி 25, 2016 வரை - மொத்தம் 249 நாட்கள் நீடித்தது.
இந்த வழக்கில் என்ன விவாதிக்கப்பட்டது, தீர்ப்பு என்ன கூறியது போன்ற விஷயங்களை அடுத்து வரும் பாகங்களில் காணலாம். இந்த பாகத்தில், இந்த வழக்கு குறித்து பரப்பப்பட்ட சில அவதூறுகளுக்கான விளக்கங்களை காண்போம்.
============================================
(I) தீர்ப்பாயத்தை நாடியவர்களின் யார்?
============================================
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கின் மனுதாரர்கள் - பால் ரோஸ் மற்றும் செந்தமிழ்செல்வன் ஆகியோர் ஆவர். இதில் பால் ரோஸ் - கொம்புத்துறை ஊர் நலக்குழுவின் துணைத்தலைவர். அருணாச்சலபுரத்தை சார்ந்த செந்தமிழ்செல்வன் - CEDA அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கொம்புத்துறை சதுப்புக்காடுகள் பாதுகாப்பு குழுவின் செயலாளர். இந்த தகவல்கள் நீதிமன்ற ஆவணங்களில் உள்ளன.
முந்தைய பாகங்களில் நாம் கண்டது போல் - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதி, ஏற்கனவே DCW தொழிற்சாலையின் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் குப்பைக்கிடங்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, டிசம்பர் 6, 2013 அன்று கொம்புத்துறை, அருணாச்சலபுரம் மக்கள் சார்பாக - நகராட்சிக்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
அந்த மனு ஏற்றுக்கொள்ளப்படாமல், பயோ காஸ் திட்டம்/குப்பைகொட்டும் திட்டம் ஆகியவை துவக்கப்பட்டதை அடுத்து - ஏப்ரல் 5, 2015 அன்று நடந்த கொம்புத்துறை ஊர் நலக்குழு கூட்டத்தில், இது குறித்து வழக்கு தொடரவும், அந்த வழக்கை அப்பகுதி மக்கள் சார்பாக பால் ரோஸ் என்பவர் போடவும் அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் - வழக்கின் மற்றொரு மனுதாரரான அருணாச்சலபுரத்தை சார்ந்த செந்தமிழ்செல்வன் சார்ந்த CEDA அறக்கட்டளை, கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் - 2004 ஆம் ஆண்டைய சுனாமிக்கு பிறகு, மாங்குரோவ் காடுகள் உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வந்ததாக - தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமர்ப்பிக்கப்பட்ட நீதிமன்ற ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடர்ந்தவர்கள் - அப்பகுதிகளை சார்ந்தவர்கள் என்பது மட்டுமன்றி, தங்கள் பகுதி சுற்றுச்சூழல் விஷயங்கள் குறித்து நீண்ட காலமாக ஆர்வம் கொண்டவர்கள் என்பதனையும் இதன் மூலம் காணலாம்.
============================================
(II) வழக்கை போட்டவர்கள் யாருக்காவது பினாமியாக செயல்பட்டார்களா?
============================================
உயர்நீதிமன்றத்திலும், பின்னர் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்தவர்கள், ஒரு சிலரின் பினாமியாக தான் வழக்குப்போட்டார்கள் என்ற அவதூறும் ஒரு சிலரால் பரப்பப்பட்டது.
மேலே கண்டது போல் - இவ்வழக்கை பதிவுசெய்தவர்கள், அப்பகுதியை சார்ந்த, பல ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள் ஆவர்.
சர்வே எண் 278 இடத்தில் - பயோ காஸ் திட்டத்தை கொண்டுவரவும், குப்பைக்கிடங்கை கொண்டுவரவும் - நகரில், எதிர்ப்பு தெரிவித்தவர்கள், வெளிப்படையாக - பல இடங்களில், பல தருணங்களில் - தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தவர்கள் ஆவர்; நகர்மன்ற கூட்டங்களிலோ, உள்ளூர் ஊடகங்களிலோ, MEGA அமைப்பு பெயரில் வெளியான துண்டு பிரசுரங்கள் மூலமோ - இத்திட்டங்களுக்கு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த சர்வே எண் 278 இடம் பொருத்தமானது அல்ல என தெளிவாக கூறியவர்கள்.
அவ்வாறு வெளிப்படையாக ஒரு விஷயத்தை எதிர்ப்பவர்கள், பினாமி மூலமாக வழக்கு தொடர அவசியம் இல்லை; வழக்கு தொடரவேண்டும் என அவர்கள் நாடியிருந்தால், அவர்கள் பெயரிலேயே வழக்கு தொடர்ந்திருப்பார்கள். இதற்கு முன்னர், நகரம் முன் இருந்த பல்வேறு விஷயங்களில், தங்கள் சொந்தப்பெயரிலும், தாங்கள் சார்ந்த அமைப்புகள் பெயரிலும், நேரடியாக வழக்கு தொடர்ந்தவர்கள் - தாங்கள் வெளிப்படையாக எதிர்த்த குப்பைக்கிடங்கு விஷயத்தில், "பினாமிகள்" மூலம் வழக்கு தொடர எவ்வித அவசியமும் இல்லை. இது தான் அடிப்படை உண்மை.
============================================
(III) தந்தி டிவி செய்தியில் குப்பைகொட்டும் இடம் தவறாக காண்பிக்கப்பட்டதா?
============================================
சர்வே எண் 278 இல் பணிகள் மேற்கொள்ள தீர்ப்பாயம் தடைவிதித்த அடுத்த சில தினங்களில், மே 31, 2015 அன்று, இது குறித்த செய்தி ஒன்றை தந்தி டிவி ஒளிபரப்பு செய்தது. அந்த செய்தியில், காட்டப்பட்ட குப்பைகொட்டும் இடம் காயல்பட்டினம் அல்ல என்றும், காயல்பட்டினத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்த அக்காட்சிகள் இணைக்கப்பட்டது என்றும் ஒரு சிலரால் அவதூறு பரப்பப்பட்டது. உண்மை என்ன?
சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட தந்தி டிவி செய்தியில், பேட்டி காண்பிக்கப்படும் போது, வலது - மேல் கோடியில், காயல்பட்டினம் என்றும், குப்பைகொட்டும் இடம், மிருகங்கள் காண்பிக்கப்படும் போது தூத்துக்குடி என்றும் காண்பிக்கப்படும். காண்பிக்கப்பட்ட குப்பைக்கிடங்கு, காயல்பட்டினத்தில் உள்ளது அல்ல என்பதை இதன் மூலம் பார்ப்பவர்கள் தெளிவாக அறியலாம். காணொளி ஊடகங்கள் (VISUAL MEDIA) எவ்வாறு இயங்குகிறது என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்கள், இந்த அவதூறையும் பரப்பினார்கள். இதனை விளக்கும் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
============================================
(IV) தந்தி டிவி பேட்டியில் இடம்பெற்ற வார்த்தைகள் குறித்த அவதூறு
============================================
மொத்தம் 96 வினாடிகள் நீளம் கொண்ட - மே 31, 2015 அன்று ஒளிபரப்பப்பட்ட - தந்தி டிவி செய்தியில், பேட்டி பகுதி மட்டும் - 20 வினாடிகள் தான். பேட்டி வழங்கியவர் - தற்போது நடப்பது என்ன? குழுமத்தின் நிர்வாகிகளில் ஒருவர். இதன் காரணமாகவே - அந்த செய்தி, ஒரு சிலரால் அவ்வப்போது, விவாதப்பொருள் ஆக்கப்படுகிறது.
ஒளிபரப்பபட்ட செய்தியில், பேட்டிகொடுத்தவர் - 20 வினாடிகளில் - கூறிய வார்த்தைகள் மொத்தமாக கீழே வழங்கப்பட்டுள்ளது:
"இதில், அந்த பகுதி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது என பல ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், அரசு அதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அதே இடத்தில் இத்திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்வதால், அதற்கான எதிர்ப்புகளை மக்கள் சார்பாக, எந்த வழிகளில் எல்லாம் - சட்டப்பூர்வமாக வெளிப்படுத்த முடியுமோ, அந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம்"
அந்த வார்த்தைகள் தெளிவாக விளக்குவது போல், குப்பை கொட்டுவதற்கு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய சர்வே எண் 278 அருகாமை பகுதிகள், ஏற்கனவே DCW தொழிற்சாலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஆகும்.
அதற்கான ஆய்வு ஆவணங்கள் உள்ளன. இத்தொடரின் முந்தைய பாகங்களில் - அந்த ஆவணங்களும் வெளியிடப்பட்டது. மே 2014 இல், DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட பசுமை தீர்ப்பாய வழக்கிலும் அவை தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதியில், குப்பைக்கிடங்கு கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கு அதுவும் ஒரு காரணமாகும்.
இந்த பேட்டி வெளியான காலகட்டத்தில், DCW வழக்கு [Appeal No.37/2014] - தீர்ப்பாயத்தின் முன்பு, நிலுவையில், விசாரணையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான, பிரயோஜனமான விஷயங்கள் குறித்து விவாதிக்காமல், தீர்வுகள் காணாமல் - திசைத்திருப்ப, பிரச்சனைகளுக்கான உண்மையான காரணக்கருத்தாக்களை பாதுகாக்க - தொடர்பில்லாத விஷயங்கள், ஒரு சிலரால் - அவ்வப்போது விவாதத்திற்குள்ளாக்கப்படுகிறது.
தந்தி டிவியில் 96 வினாடிகள் ஓடிய அச்செய்திக்குறித்து, கடந்த 2.5 ஆண்டுகளில் - விவாதிக்க வேறு விஷயங்கள் இல்லையென்றால், அவ்வப்போது பரப்பப்படும் அடிப்படையில்லாத அந்த விமர்சனங்களுக்கான விளக்கம்தான் இது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 16, 2017; 8:50 am]
[#NEPR/2017121601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |