காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“வாவூ கதீஜா, வாவூ மஃதூம் சாலைகள் அமைக்கப்படாது! மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் உறுதியளித்த நகராட்சி முன்னாள் ஆணையர் காந்திராஜன்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 26ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் DTCP அமைப்புகள், சர்வே எண் 278 இடத்தினை - CRZ பகுதிக்குள் வருவதால் - பலமுறை நிராகரித்தவுடன், CRZ பகுதிக்குள் வரும் நிலங்களை மறைத்து - அரசு துறைகளின் அனுமதியை பெற காயல்பட்டினம் நகராட்சி முடிவு செய்தது.
இது சம்பந்தமாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் Institute of Remote Sensing துறைக்கு, அப்போதைய காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன் எழுதிய கடிதத்தில் - 278/1B நிலத்தை மட்டும் (அதாவது 4 ஏக்கர் நிலம்), GPS கருவிகள் மூலம் ஆய்வுகள் செய்ய வேண்டினார். (ROC No.647/2009/TP1 dated 9.3.2015).
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய - CRZ பகுதிக்குள் வரும் 1.5 ஏக்கர் நிலம் குறித்த விபரங்கள், அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அப்போதைய ஆணையர் காந்திராஜனால் மறைக்கப்பட்டது.
ஆய்வுகளை மேற்கொள்ள 18.3.2015 தேதிய கடிதம் மூலம் அண்ணா பல்கலைக் கழகம் சம்மதம் தெரிவிக்க, அதற்கான கட்டணத்தை (Rs.1,99,500) செலுத்தி - ஏப்ரல் 10, 2015 அன்று நகராட்சி ஆணையர் கடிதம் எழுதினார்.
அதனை தொடர்ந்து - அண்ணா பல்கலைக் கழகமும், ஆய்வுகள் மேற்கொண்டு - சர்வே எண் 278 /1B இடம், அதாவது 4 ஏக்கர் நிலம், CRZ எல்லையில் இருந்து வெளியில் உள்ளது என அறிக்கை வழங்கியது.
1.5 ஏக்கர் CRZ நிலத்தை மறைத்து பெறப்பட்ட இந்த அறிக்கையை தான் - பின்னர் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மானின் ஆதரவாளர்கள், அவர் தந்த நிலம் - CRZ எல்லைக்குள் இல்லை என அண்ணா பல்கலைக்கழகமே கூறிவிட்டது என நகைப்புக்குரிய முறையில் வாதிட்டனர்!
இதற்கிடையே - மார்ச் 24, 2015 அன்று மீண்டும் காயல்பட்டினம் நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தது. கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு விண்ணப்பம் செய்துவிட்டு, அனுமதிக்காக காத்துக்கொண்டிருக்காமல், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்காகவும் காத்துக்கொண்டிருக்காமல் - விதிமுறைகளை மீறி, மார்ச் 25, 2015 அன்று பூமி பூஜையை மேற்கொண்டார் காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜன்.
இந்த இரு திட்டங்களும், கொம்புத்துறை (கடையக்குடி) பகுதியில் வருவதால், ஏற்கனவே DCW கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அப்பகுதி மக்கள், மேலும் பாதிப்படைவர் என கொம்புத்துறை (கடையக்குடி) மற்றும் அருணாச்சலபுரம் மக்கள் சார்பாக, ஏற்கனவே, டிசம்பர் 6, 2013 இல், காயல்பட்டினம் நகராட்சியிடம் மனு வழங்கப்பட்டிருந்தது.
மார்ச் 2015 இறுதியில், எவ்வித அனுமதியும் பெறப்படாமல் பணிகள் துவங்கியதை அடுத்து, கொம்புத்துறை பகுதியை சார்ந்த பால் ரோஸ் என்பவரும், அருணாச்சலபுரம் பகுதியை சார்ந்த செந்தமிழ் செல்வன் என்பவரும் - ஏப்ரல் 2015 இறுதியில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை நாடினார்கள். வழக்கு எண் - WP[MD] No.7730/2015.
பொதுவாக, சுற்றுச்சூழல் குறித்த வழக்குகள், பசுமை தீர்ப்பாயம் தான் விசாரிக்கவேண்டும். இருப்பினும், மனுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையை நாடினார்கள். மே மாதம் முழுவதும் உயர்நீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை என்பதால், விடுமுறை நீதிபதிகள் முன்பு, இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை மே 13, 2015 அன்று விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் அமலுக்கு வந்தபின்பு, இது போன்ற வழக்குகள் - தீர்ப்பாயத்தில் தான் விசாரிக்கப்படவேண்டும் என கருத்து தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட, மனுதாரரின் வழக்கறிஞர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாட, நீதிமன்றத்தின் அனுமதியை கோரினார். நீதிமன்றத்தின் அனுமதி அவசியம் இல்லை எனத்தெரிவித்த நீதிபதி, இவ்வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தமுடியாது (NOT MAINTAINABLE) எனத்தெரிவித்து தள்ளுபடி செய்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதி, இருப்பினும் இவ்வழக்கில் நகராட்சி சார்பாக சில வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளின் உண்மைத்தன்மை குறித்து இந்நீதிமன்றம் விசாரிக்கவில்லை என்றும், அது போல - பிற தரப்புகள் சமர்ப்பித்த வாதங்கள் குறித்தும் இந்நீதிமன்றம் விசாரிக்கவில்லை என்றும் பதிவு செய்துவிட்டு, உயர் நீதிமன்றம் முன்பு எழுப்பப்பட்ட விஷயங்கள், இறுதி முடிவுக்கு திறந்தே உள்ளன என்றும் கூறினார்.
"... Accordingly, this writ petition stands rejected as not maintainable. However, this will not prevent the petitioners from approaching the National Green Tribunal for necessary relief. It is made clear that though the respondent Municipality has filed a counter-affidavit, this court has not adjudicated the correctness of the stand taken therin nor other submissions made by the other learned counsels and the issues are left open...". [Justice T.S.Sivagnanam; W.P.(MD) NO.7730/2015; 13-5-2015]
உயர்நீதிமன்றத்தின் கதவை தட்டியவர்கள், தீர்ப்பாயத்தின் கதவையும் தட்டுவார்கள் என உணர்ந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், இனிமேலும் தொடர்ந்து, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த நிலம், முற்றிலும் CRZ பகுதியை தாண்டி உள்ளது என தவறான தகவலை தெரிவிக்கமுடியாது என்பதால், முன்னாள் நகர்மன்றத்தலைவர் தந்த 1.5 ஏக்கர் நிலத்தில் சாலைகள் உருவாக்க மாட்டோம் என்ற உறுதிமொழியை வழங்க முடிவு செய்தார்.
மே 19, 2015 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் - சர்வே எண் 278 இடத்தில் கள ஆய்வுகள் செய்தனர். அந்த கள ஆய்வு சம்பந்தமாக விபரங்களை அறிக்கையில் பதிவு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காயல்பட்டினம் நகராட்சியின் அப்போதைய ஆணையர் காந்திராஜனின் வாக்குமூலத்தை கீழ்கண்டவாறு பதிவு செய்தனர்:
"...the Commissioner of the Municipality has informed that the approach road will be constructed outside the CRZ area (ie) in the western side of the Site, and given a declaration of that effect..."[TNPCB; SITE INSPECTION REPORT dated 19.5.2015]
""...அணுகு சாலை - CRZ இடத்திற்கு வெளியே, அதாவது திட்ட இடத்திற்கு மேற்கே, அமைக்கப்படும் என்ற உறுதிமொழியை நகராட்சி ஆணையர் வழங்கியுள்ளார்..." [தமிழாக்கம்]
காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் காந்திராஜன் வழங்கிய இவ்வுறுதிமொழி மூலம், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த நிலம் CRZ எல்லைக்கு வெளியே உள்ளது என பல வாரங்களாக சொல்லப்பட்டு வந்த உண்மைக்கு புறம்பான தகவலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது!
அது மட்டும் அல்ல - விதிமுறைகளை மீறி, CRZ பகுதிக்குள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த வாவூ கதீஜா சாலை மற்றும் வாவூ மஃதூம் சாலை திட்டங்களும் தடுக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 15, 2017; 8:30 am]
[#NEPR/2017121501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|