காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“CRZ இல்லாத 5 ஏக்கர் நிலம் தரப்படும் என நகர்மன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டது!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 23ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
11.10.2013 அன்று நிறைவேற்றப்பட்ட காயல்பட்டினம் நகராட்சி தீர்மானம் (#635) கீழ்கண்டவாறு சொல்கிறது:
காயல்பட்டினம் தென் பாகம் வருவாய் கிராமத்தில், கடையக்குடி பகுதியில், சர்வே எண் 278 இல், (CRZ தவிர்த்து) 5 ஏக்கரில் குப்பை தட்டுவதற்கும், பயோ காஸ் எரிவாயு நிலையம் அமைப்பதற்கும் மன்றம் அனுமதி வழங்குகிறது.
ஆனால் - நடந்தது என்ன?
முந்தைய பாகங்களில் நாம் கண்டது போல் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், மொத்த பரப்பளவு 25 ஏக்கர் கொண்ட, தனது சர்வே எண் 278 இடத்தில் இருந்து, இரு பத்திரங்கள் வாயிலாக - காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் வழங்கினார்.
அதில் 4 ஏக்கர் நிலம், குப்பைகொட்டுவது மற்றும் அது தொடர்பான தேவைகளுக்கு எனவும், 1.5 ஏக்கர் நிலம் - வாவூ கதீஜா மற்றும் வாவூ மஃதூம் என்று பெயரிடப்பட்ட இரு சாலைகளை உருவாக்குவதற்காகவும் ஆகும். ஆக மொத்தம் - 5.5 ஏக்கர் நிலம்.
குப்பை கொட்டுவதற்கு என மட்டும் 5 ஏக்கர் நிலம் தேடி வந்த சூழலில், குப்பை கொட்டுவதற்கு மற்றும் பயோ காஸ் திட்டத்திற்கு என இரு பணிகளுக்கும் சேர்த்து 4 ஏக்கர் நிலம் - முன்னாள் நகர்மன்றத் தலைவரால் வழங்கப்பட்டது.
11.10.2013 அன்று நகர்மன்றத்தில், தீர்மானம் வாயிலாக, கொடுக்கப்பட்ட வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டிருந்தது. இந்த ஒரு காரணத்திற்காகவே - சர்வே எண் 278 இடம் நகர்மன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் - அந்நிலத்தை - உறுப்பினர்கள் நிராகரிக்கவில்லை. இவ்வாறு உறுதிமொழி மீறப்பட்டுள்ளதும், அதன் விளைவுகள் குறித்த முழு விபரமும் பொது மக்களிடம் கொண்டு செல்லப்படவும் இல்லை.
25 ஆண்டுகளுக்கு அப்பகுதியில் எந்த வளர்ச்சியும் இருக்காது; அதனால் அங்கு குப்பைக் கிடங்கை கொண்டு செல்லலாம் என கூறியவர்கள், வழங்கப்பட்டுள்ள 4 ஏக்கர் நிலம் (பயோ காஸ் திட்டத்திற்கும் சேர்த்து), காயல்பட்டினத்தின் 25 ஆண்டுக்கான குப்பைக்கிடங்கு தேவையை பூர்த்தி செய்யுமா என சிந்திக்கவேயில்லை.
4 ஏக்கரே போதுமானது அல்ல என இருக்க, பயோ காஸ் திட்டத்தை வேறு பல இடங்களுக்கு கொண்டு செல்ல பல வாய்ப்புகள் வந்த போதும் (சர்வே எண் 625/3, 392/5, 42/1), நகரின் ஆதிக்க சக்திகள், அதிகாரவர்க்கம், நிலப்பிரபுத்துவவாதிகளின் தூண்டுதலின் பெயரில் - அவ்விடங்களுக்கு அத்திட்டத்தை கொண்டு செல்லவிடாமல் - உறுப்பினர்கள் தடுத்தனர்.
இது ஒரு புறமிருக்க - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், CRZ பகுதிக்குள் வராத இடத்தை தருவார் என்ற வாக்குறுதியும் மீறப்பட்டது.
நவம்பர் 25, 2014 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் SK & Co. என்ற நிறுவனத்திற்கு - பயோ காஸ் திட்டப் பணிகளுக்கான வேலை ஆணை (15.12.2014) வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து - அப்போதைய ஆணையர் காந்திராஜன் மூலமாக - டிசம்பர் 8, 2014 அன்று - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் - சர்வே எண் 278 இடத்தில் பணிகள் மேற்கொள்ள, காயல்பட்டினம் நகராட்சி, விண்ணப்பம் செய்தது.
அந்த விண்ணப்பம் அடிப்படையில் - மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஜனவரி 7, 2015 இல் (விண்ணப்பம் செய்த ஒரு மாதத்தில்) - கள ஆய்வு செய்து, அவ்விடம் நீர் தேங்கும் இடம் என்பதால், அத்திட்டங்களை அனுமதிக்கமுடியாது என்றும், வேறு இடம் பார்க்கவும் எனக்கூறியும் - ஜனவரி 12, 2015 அன்று நகராட்சிக்கு கடிதம் அனுப்பியது.
அதன் பிறகு - மீண்டும் நகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் செய்துள்ளது. அதுவும் - பிப்ரவரி 19, 2015 அன்று நிராகரிக்கப்பட்டது என்றும், DTCP அமைப்பும் அவ்விடத்தை CRZ இடம் எனக்கூறி நிராகரித்தது என்றும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது.
"... the Kayalpattinam Municipality had applied for setting up a Municipal Solid Waste Management facility at S.F.No.278/1. The applications were returned on 19.2.2015 for since it was informed by DD, DTCP, Tirunelveli that the site is under CRZ area.
The Municipality has applied again and this was not accepted as the Municipality has not produced relevant documents..."
(Lr.No.DEE/TNPCB/TTN/MSWA/2015 dated 3/3/2015)
ஏன் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரியமும், DTCP அமைப்பும் இவ்விடங்களை நிராகரித்தார்கள்?
நிலைமை என்னவென்றால் முன்னாள் நகர்மன்றத்தலைவரின் சர்வே எண் 278 மொத்த 25 ஏக்கர் நிலத்தில் - சுமார் 80 சதவீதம் இடம், CRZ-1 எல்லைக்குள் வருகிறது. CRZ விதிமுறைகளிலேயே - CRZ-1 வகை தான் மிகவும் கடுமையானது; இது போன்று வகைப்படுத்தப்படும் நிலங்கள், பல்வேறு காரணங்களுக்காக - சுற்றுச்சூழல் அடிப்படையில் மிகவும் பாதுகாக்க வேண்டிய நிலமாக கருதப்படுகிறது (Ecologically Sensitive). அவ்விடத்தில் - மத்திய அரசு குறிப்பிட்டு விலக்கு அளித்துள்ள பணிகளை தவிர - எந்த பணிகளுக்கும் அனுமதி கிடையாது.
இணைக்கப்பட்டுள்ள சர்வே எண் 278 CRZ வரைப்படத்தில் - நீல வர்ணத்தில் காட்சி தருவது, தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளையாகும். அது சர்வே எண் 278 இடத்தின் வட - கிழக்கு பகுதியில் ஓடுகிறது. பச்சை வர்ணத்தில் காட்சி தருவது, அதன் தொடர்ச்சியான - CRZ 1 நிலமாகும். வெள்ளை நிறத்தில் உள்ள சிறு பகுதி மட்டும், CRZ எல்லையை தாண்டியுள்ளது.
இந்த உண்மையும் பொதுமக்களிடம், தொடர்ந்து மறைக்கப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 14, 2017; 9:45 am]
[#NEPR/2017121401]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |