காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“சர்வே எண் 278 இடம் ஏன் பொருத்தமில்லை? – MEGA வெளியிட்ட விழிப்புணர்வுப் பிரசுரம்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 21ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகங்களில் - எவ்வாறு, பல ஆண்டுகளாக, காயல்பட்டினம் நகராட்சிக்கு - பப்பரப்பள்ளிக்கு மாற்றாக - குறைந்தது 5 ஏக்கர் நிலம் - புதிய குப்பைக்கிடங்குக்கு மட்டும் தேடப்பட்டு வந்தது என்பதையும், முன்னாள் நகர்மன்றத்தலைவர் - குப்பைக்கிடங்கு மற்றும் பயோ காஸ் திட்டத்திற்கும் சேர்த்து - 4 ஏக்கர் நிலம் தந்ததையும் (சாலைகளை தவிர்த்து), பொது மக்களிடம் - இந்த உண்மை மறைக்கப்பட்டு, குப்பைக்கிடங்கு மற்றும் பயோ காஸ் திட்டம் அமைய, 5.5 ஏக்கர் தரப்பட்டது, 6 ஏக்கர் தரப்பட்டது என பொய்யான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டதையும் கண்டோம்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த நிலத்தில் - நிலத்தின் அளவு மட்டுமே பிரச்சனை இல்லை; அவ்விடத்தில் குப்பைக்கிடங்கு மற்றும் பயோ காஸ் திட்டம் அமைவதில், CRZ விதிமீறல் உட்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
பயோ காஸ் திட்டத்திற்கான தீர்மானம், நவம்பர் 25, 2014 இல் - நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது - அத்திட்டம் அமைந்திட உறுப்பினர்கள் தேர்வு செய்த முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த நிலத்தில் உள்ள குறைப்பாடுகள் குறித்து, தீர்மான புத்தகத்தில் - வருங்கால சந்ததிகளும் அறிய வேண்டும் என்ற நோக்கில் - அவ்விடம், ஏன் இருத்திட்டங்களுக்கும் பொருத்தமானது அல்ல என்பதை முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், பதிவு செய்தார். அவர் பதிந்த கருத்துக்கள் வருமாறு:
// மண்டல செயற்பொறியாளர் அறிக்கையில் தொழில்நுட்ப காரணங்கள் கூறி நிராகரித்த இடங்களுக்கு கூறப்பட்ட காரணங்கள் தொழிநுட்ப ரீதியானவை அல்ல
// பயோ காஸ் திட்டத்திற்கு சர்வே எண் 278 இல் BUFFER ZONE குறித்து முடிவெடுக்கும் வரை, அங்கு எவ்வித திட்டப்பணிகளும் செயல்படுத்தக்கூடாது
// கிழக்கில் உள்ள கடலில் இருந்து - 500 மீட்டர் தூரத்தில் பயோ காஸ் பிளான்ட் அமைப்பதால், தொடர் கடற்காற்று, புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் கருத்திற்கொள்ளப்படவில்லை
// மழைநீர், விவசாயக்கழிவு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் சென்றடையும் வடக்கில் உள்ள ஓடையில் இருந்து 200 மீட்டரில் பயோ காஸ் பிளான்ட் அமைப்பதால் உள்ள பாதிப்புகள் கருத்திற்கொள்ளப்படவில்லை
// பரிந்துரைக்கப்பட்ட இடத்தில மின் வசதிகள், தரமான சாலைகள் இல்லை என்பது கருத்திற்கொள்ளப்படவில்லை
// மிகவும் ஒதுக்குப்புறமான இந்த இடத்தில பயோ காஸ் பிளான்ட் அமைவதால் உள்ள செலவு (COST - BENEFIT) பரிசீலனை செய்யப்பட்டு ஆய்வில் உள்ள பிற இடங்களோடு ஒப்பிடப்பட்டு, வெவ்வேறு இடங்களில் அமைவதால் எத்தனை வார்டுகள், தெருக்கள் பயனடையும் என்ற விபரங்கள் இவ்வறிக்கையில் வழங்கப்படவில்லை
மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பும் (MEGA) - இது சம்பந்தமாக இரு பிரசுரங்களும், உள்ளூர் தொலைக்காட்சியில் விழிப்புணர்வு வீடியோ பிரச்சாரமும் வெளியிட்டது.
முதல் துண்டு பிரசுரம் - அக்டோபர் 25, 2013 அன்று - கையில் வெண்ணை இருக்க நெய்க்கு அலைவதேன்??? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அந்த விழிப்புணரவு பிரசுரம் (8 பக்கங்கள்) இணைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது துண்டு பிரசுரம் - ஜனவரி 5, 2015 அன்று - சுண்டைக்காய் கால் துட்டு! சுமை கூலி முக்கால் துட்டா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. அந்த விழிப்புணரவு பிரசுரம் (2 பக்கங்கள்) இணைக்கப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 10, 2017; 8:30 am]
[#NEPR/2017121001]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |