சஊதி அரபிய்யா – ரியாத் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் புதிய திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் எமது ரியாத் காயல் நல மன்றத்தின் 63-வது செயற்குழு கூட்டம் கடந்த 08.12.2017 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்குப் பின் மன்ற தலைவர் சகோதரர் முஹம்மத் நூஹு அவர்களின் இல்லத்தில் சகோதரர் P.M.S. முஹம்மத் லெப்பை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
ஆரம்பமாக மதிய உணவு அனைவருக்கும் பரிமாறப்பட்டது, சகோதரர் K.S.M. அப்துல் காதர் அவர்கள் கூட்ட நிகழ்வின் சாரம்சத்தை வாசித்த பின் ஹாஃபிழ் S.A.C. ஸாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி கூட்டத்தை துவக்கி வைக்க, அதனைத் தொடர்ந்து ஹாஃபிழ் சதக் ஷமீல் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
தலைமையுரை:
தலைமையுரை ஆற்றிய மன்ற துணை தலைவர் சகோதரர் P.M.S. முஹம்மத் லெப்பை அவர்கள்; உலக காயல் நல மன்ற வரிசையில் பழமையான நல மன்றங்களின் ஒன்றான எமது ரியாத் காயல் நல மன்றம், நமதூருக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னோடி மன்றமாக தன்னால் இயன்ற உதவிகளை இன்று வரை வெகு சிறப்பாக செய்து வருகிறது, எல்லாப்புகழும் வல்ல இறைவனுக்கே. எமது ரியாத் காயல் நல மன்றம் மருத்துவம், சிறு தொழில் மற்றும் கல்வி ஆகியவைக்கான உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது, கூடுதலாக ரமலான் கால உணவுப்பொருள் வழங்கும் திட்டம், நோன்புப்பெருநாள் இரவில் நாட்டுக்கோழி திட்டம், மாதந்திர உணவுப்பொருள் வழங்கும் திட்டம் மற்றும் இதர காயல் நல மன்றங்களோடு இணைந்து இமாம் & முஅத்தின் ஊக்கத்தொகை திட்டம், உள்ளூர் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவியுடன் இயங்கி வரும் பள்ளிகளுக்கு உதவும் Kayal Schools Welfare Projects மேலும் நடப்பாண்டுக்கான நிர்வாகக்குழுவின் புதிய முயற்சியாகப் பெண்கள் மற்றும் சிறுவர்/சிறுமியர்களும் மன்ற நல உதவிகளில் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் Women And Kids Fund (WAKF) ஆகிய சிறப்பு வாய்ந்த நல்ல பல திட்டங்களை முன்னெடுத்து நம் ஊரில் உள்ள ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் செயல் படுத்தி வருகிறது.
2016-17ம் ஆண்டிற்கான நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் நிறைவுறும் நிலையில், மன்ற செயல்பாடுகளில் தங்களின் முழு பங்களிப்பை நல்கிய மன்ற நிர்வாகிகள், செயற்குழு/பொதுக்குழு/ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மன்றத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மன்ற நல உதவிகளுக்கான நிதி ஒதுக்கீடு:
நகரில் இருந்து பெறப்பட்ட மருத்துவ கடிதங்கள், கல்வி/சிறுதொழில் விண்ணப்பங்களை வாசித்து நிதியை ஒதுக்கிய பின், அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறைவனியிடம் பிரார்த்திக்கப்பட்டது. நிதி ஒதுக்கீட்டின் சாராம்சத்தை துணைப்பொருளாளர் சகோதரர் வாவு கிதுரு முஹம்மது அவர்கள் வாசித்தார். தொடர்ந்து மன்ற பொருளாளர் சகோதரர் M.N.முஹம்மது ஹசன் அவர்கள் 2017-ம் ஆண்டிற்கான நிதி அறிக்கையை வாசித்தார்.
பணியிட மாற்றம்:
புனித மக்கா நகருக்குப் பணியிட மாற்றம் பெற்றுச்செல்லும் எமது செயற்குழு உறுப்பினர் சகோதரர் இஸ்மத் நவ்ஃபல் எமது மன்றத்தோடு இணைத்துப் பணியாற்றிய அனுபவங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். மன்றத்தின் சார்பாக அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Women And Kids Fund (WAKF):
நடைபெற்று முடிந்த மன்றத்தின் 55-வது பொதுக்குழு கூட்டத்தில் Women And Kids Fund (WAKF) மூலம் கிடைக்கப்பெற்ற நன்கொடை தொகையை ஏற்கனவே செயற்குழுவில் தீர்மானித்தபடி பிரத்தியேக செயல்திட்டங்களில் பயன்படுத்திட செயற்குழு உறுப்பினர்கள் தங்களின் ஆலோசனைகளை மின்னஞ்சல் அல்லது வாட்சப் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
பார்வையாளர்கள் கருத்து:
இக்கூட்டத்தின் பார்வையாளர்களாக கலந்து கொண்ட சகோதரர் ஹபீப் முஹம்மது சாதிக், சகோதரர் தீபி மற்றும் சகோதரர் சேக்னா ஆகியோர் தங்களை கூட்டத்திற்கு அழைத்ததிற்கு நன்றி கூறி, தங்களுடைய கருத்துக்களையும் மேலான ஆலோசனைகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
இக்கூட்டம் நடத்த இடம் தந்த எம் மன்றத்தின் தலைவர் சகோதரர் முஹம்மது நூஹு அவர்கள் அனைவருக்கும் சுவைமிக்க பொறித்த காடை மற்றும் நாட்டுக்கோழி கறி விருந்தும், மாலை தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கினார்.
இறுதியாகச் ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோதரர் நுஸ்கி அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி நவில ஆலோசனைக்குழு உறுப்பினர் ஹாஃபிழ் தாவூத் இத்ரீஸ் அவர்களின் துஆவோடு குழுப்படம் எடுத்த பின்னர் இக்கூட்டம் இனிதே நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாக்கம்:
தைக்கா ஸாஹிப்
தகவல் & படங்கள்:
M.N.முஹம்மத் ஹஸன்
(பொருளாளர், ரியாத் கா.ந.மன்றம்.)
|