பள்ளி மாணவ-மாணவியரிடையே நூல் வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்குடன், ‘புன்னகை மன்றம்’ சமூக ஊடகக் குழுமம் சார்பில், காயல்பட்டினம் அல்அமீன் மழலையர் & துவக்கப் பள்ளி மாணவ-மாணவியர், 15.12.2017. அன்று காயல்பட்டினம் அரசு பொது நூலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு, நூலகர் முஜீப் மாணவ-மாணவியரையும், அவர்களை அழைத்துச் சென்ற பொறுப்பாளர்களையும் வரவேற்று, நூலகத்தைப் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.
ஆங்கில பேச்சுப் பயிற்சி உட்பட பல்வேறு தலைப்புகளிலான நூற்களை மாணவ-மாணவியர் ஆர்வமுடன் வாசித்தனர்.
நிறைவில், அவர்களுள் பலர், அரசு பொது நூலக உறுப்பினர்களாகத் தம்மை இணைத்துக் கொண்டனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாணவ-மாணவியர், தமக்கு இது புதிய பட்டறிவைத் தந்துள்ளதாகவும், தொடர்ந்து அந்நூலகத்தைப் பயன்படுத்தப் போவதாகவும், இனி வருங்காலங்களில் இதர பொழுதுபோக்குகளை இயன்ற வரை தவிர்த்து, நூல் வாசிப்பைப் பயனுள்ள பொழுதுபோக்காக ஆக்கிக்கொள்ளப் போவதாகவும் உற்சாகத்துடன் கூறினர். குழுப்படம் எடுத்துக்கொண்ட பின், நூலகருக்கு நன்றி தெரிவித்து மாணவ-மாணவியர் விடைபெற்றனர்.
‘புன்னகை மன்றம்’ சமூக ஊடகக் குழும நிர்வாகி ஏ.எல்.முஹம்மத் நிஜார் தலைமை ஒருங்கிணைப்பில் – அல்அமீன் பள்ளி தாளாளர் எம்.ஏ.புகாரீ, சமூக ஆர்வலர் பி.ஏ.ஷேக் உள்ளிட்ட குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
A.L.முஹம்மத் நிஜார்
|