காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளானாலும் சரி! விட மாட்டோம்!!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 15ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகங்களில் - பப்பரப்பள்ளிக்கு மாற்றாக புதிய இடம் முடிவு செய்யும் முயற்சியில் எவ்வாறு முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் ஈடுபட்டிருந்தார் என்பதை கண்டோம்.
இது சம்பந்தமாக - சென்னையில் உ.சகாயம் IAS அவர்களை சந்தித்து, பனைப்பொருள் இலாகாவின் இடத்தை கோரியதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறையும் சந்தை விலைக்கு அந்நிலத்தை தர சம்மதம் தெரிவித்திருந்த செய்தியையும் கண்டோம். இது சம்பந்தமான கடித போக்குவரத்துகள் நடந்துக்கொண்டிருந்தன.
இதற்கிடையே, முதல்வரின் ஏப்ரல் 10, 2013 தேதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து, பயோ காஸ் திட்டத்தை விரைவில் முடிக்கவேண்டிய சூழல் எழுந்ததால் - இத்திட்டத்திற்கான தனி இடத்தை அடையாளம் காணும் பணியில் - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் இறங்கினார்.
முதலில் - VAO அலுவலகத்திற்கு அருகில் உள்ள 625/3 இடத்திலும், பின்னர் புதிய ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS பார்வையிட்ட பின்பு, 392/5 இடத்திலும் பயோ காஸ் திட்டம் கொண்டு வர பரிந்துரைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் IAS காயல்பட்டினத்திற்கு அக்டோபர் 8 அன்று வந்து சென்ற பின்பு அவரின் பரிந்துரை அறிக்கையை அக்டோபர் 11, 2013 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யாது அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு பாத்தியப்பட்ட, அன்று வரை காயல்பட்டினம் நகராட்சிக்கு எழுதிக்கொடுக்காத, சர்வே எண்278 இடத்தில் தான் - பயோ காஸ் திட்டமும், குப்பைகொட்டும் திட்டமும் வரவேண்டும் என உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்!
அந்த தீர்மானம் நிறைவேற்றிய பின்பும் - அந்நிலத்தை CRZ பகுதி / CRZ இல்லாத பகுதி என பிரித்து நகராட்சிக்கு வழங்கும் முயற்சியில் முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் இறங்கவில்லை.
நகர்மன்றத் தலைவருக்கு விரைவில் பயோ காஸ் திட்டத்திற்கு ஒரு இடத்தை முடிவு செய்ய அதிகாரிகள் நெருக்கடி கொடுக்க, மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்த, சர்வே எண் 392/5 இடத்தில் அத்திட்டத்தை கொண்டு வர, நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தீர்மானம் கொண்டு வந்தார். 20.1.2014 அன்று நடந்த கூட்டத்தில், பெருவாரியான உறுப்பினர்களால் (உறுப்பினர்கள் ம.ஜஹாங்கிர் மற்றும் எம்.எஸ்.எம்.சம்சுதீன் தவிர) அது நிராகரிக்கப்பட்டது.
அடுத்த மாதம் - மீண்டும் ஒரு முயற்சியை நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் எடுத்தார். பப்பரப்பள்ளியில் உள்ள EB சப் ஸ்டேஷன் நிலையத்திற்கு அடுத்துள்ள சர்வே எண் 42/1 இடத்தில் பயோ காஸ் திட்டத்தை மட்டும் கொண்டு வரலாம் என தீர்மானம் கொண்டு வந்தார். அதுவும் - 27.2.2014 அன்று நடந்த கூட்டத்தில் பெருவாரியான உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.
நகர்மன்ற உறுப்பினர்களை பொருத்த வரை - தெளிவாக இருந்தார்கள்.
காயல்பட்டினம் தென் பாகத்தில் உள்ள சுமார் 1000 சர்வே எண்களை தீர்மானமாக கொண்டு வந்தாலும், அவர்களுக்கு தெரிந்த சர்வே எண் எல்லாம் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் உடைய சர்வே எண் 278. 278. 278. 278. 278. 278 தான்.
அந்த நிலத்தை - CRZ இடம் / CRZ இல்லாத இடம் என முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் கண்டறிந்து, அதனை பிரித்து, பத்திரம் போட்டுத்தர எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் ஆனாலும் சரி - பப்பரப்பள்ளிக்கு மாற்று இடமோ, பயோ காஸ் திட்டத்திற்கான இடமோ - காத்திருக்கத்தான் வேண்டும்.
இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் உறுதியாக இருந்தார்கள்.
இந்த காலகட்டத்தில் - காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராக இருந்த அசோக் குமார் மாற்றலாகி, ம.காந்திராஜன் - புதிய ஆணையராக பொறுப்பேற்றார்.
சில தினங்களில் - பாராளுமன்ற தேர்தலும் அறிவிக்கப்பட, நன்னடை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இறுதி வரை, பயோ காஸ் திட்டத்திற்கான ஒரு இடத்தை உறுதி செய்ய இவ்வளவு முயற்சிகளை நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் எடுத்தும், அத்திட்டத்தை துவக்க அவர்தான் காலதாமதம் ஏற்படுத்தினார் என்று சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பினர்!
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 6, 2017; 11:00 pm]
[#NEPR/2017120602]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |