காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“குப்பைக் கிடங்கு, பயோகேஸ் திட்டம் அமைக்க புறம்போக்கு இடங்களைப் பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 11ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
{} ஜூன் 2012, ஜூலை 2012, ஆகஸ்ட் 2012 ஆகிய மூன்று மாதங்கள் நடக்கவேண்டிய நகர்மன்றக்கூட்டங்களை தொடர்ந்து உறுப்பினர்கள் புறக்கணித்தது
{} நவம்பர் 30, 2012 அன்று பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு இடத்திற்கு மாற்றமாகவும், பயோ காஸ் திட்டத்தினை அமைத்திடவும் - புறம்போக்கு நிலங்களை அரசிடம் கோரலாம் என தீர்மானம் நிறைவேற்றி 6 நாட்களில் - ஐக்கிய பேரவையிடம், உறுப்பினர்கள் தனியார் இடம் கோரியது
{} டிசம்பர் 14, 2012 அன்று இரண்டாம் குடிநீர் திட்டம் டெண்டருக்கு ஒப்புதல் கொடுக்க கூட்டப்பட்ட கூட்டத்தில் – நகர்மன்றத் தலைவரை தாக்க முயற்சி செய்தது
{} டிசம்பர் 19, 2012 அன்று - நகர்மன்ற தீர்மானத்திற்கு மாற்றமாக தீர்மானம் நிறைவேற்ற பேரவை கூட்டம் நடத்தியதன் மூலம் - ஓர் ஆண்டுக்கு முன்பு பொது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய பேரவையை, ஒரு தனி அதிகார மையமாக உருவாக்க செய்யப்பட்ட முயற்சி
{} அதே டிசம்பர் மாதம் - சென்னையில் ஒரு IAS அதிகாரியை சந்தித்து, நகர்மன்றத்தலைவரை பதவி நீக்கம் செய்ய உறுப்பினர்கள் திட்டம் தீட்டியது
இந்த சம்பவங்கள் எல்லாம் - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக், பதவி ஏற்று ஓர் ஆண்டுக்காலத்தில் அடுத்தடுத்து நடந்தன.
இந்த கூட்டத்தினர் தன்னை மக்கள் பணியாற்ற எளிதாக விடமாட்டார்கள் என்பதை நகர்மன்றத்தலைவர் உணர்ந்தார். ஆனால் - இவற்றை எல்லாம் கண்டு அஞ்சி, கோழையாக அவர் ராஜினாமா செய்யவில்லை.
நகரின் ஆதிக்க சக்திகளிடமும், அதிகாரவர்க்கத்திடமும், நிலபிரபுத்துவவாதிகளிடமும் மண்டியிடவில்லை. சட்டத்தை நாடினார்.
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், பிரிவு 39 (6) - ஒரு நகர்மன்றத்தலைவரை உறுப்பினர்கள் செயல்படவிடாமல் தடுத்தால், அவர் அரசை நாடலாம்; அரசு அல்லது அரசு நியமிக்கும் அதிகாரியின் மேற்பார்வையில் - ஆறு மாதங்கள் வரை, நகர்மன்றத்தலைவர் - தனியாக, உறுப்பினர்கள் இல்லாமல் - நகராட்சியை வழிநடத்தலாம் என தெரிவிக்கிறது.
===============================================================
THE TAMIL NADU DISTRICT MUNICIPALITES ACT, 1920 - Section 39(6)
===============================================================
(6) If on a representation in writing made by the Chairman, the State Government are satisfied that due to the non-co-operation of the Councillors with the Chairman, the Municipal Council is not able to function, the State Government may, by notification, authorise the Chairman to perform, subject to the control of the State Government or any officer authorised by the State Government in this behalf, such of the duties imposed upon the Municipal Council by law and for such period not exceeding six months as may be specified in such notification. During the period for which the Chairman is so authorised, there shall be no meeting of the Municipal Council.
இந்த பிரிவின்படி, தனது கோரிக்கையை, தமிழக முதல்வரிடமும், அரசு செயலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடமும் - நகர்மன்றத்தலைவர், டிசம்பர் 19, 2012 அன்று சமர்ப்பித்தார்.
இந்த விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு அதற்கான பதிலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கவில்லை. நகராட்சியில் தனது பணியை தொடர்ந்தார்.
நகராட்சிக்கான புதிய கட்டிடத்திற்கு தேவையான ஆவணங்களை தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார். நகராட்சி நிர்வாகத்துறை ஆணையரை ஜனவரி 2013 இல் நேரில் சந்தித்து, இதற்கான நினைவூட்டலை வழங்கினார்.
பப்பரப்பள்ளிக்கு மாற்று இடமாகவும், பயோ காஸ் திட்டத்தை நிறுவுவதற்கான இடமாகவும் - சிறுபட்டியல் செய்யப்பட்டிருந்த நான்கு அரசு புறம்போக்கு இடங்களை பார்வையிட - மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தார்.
அதன்படி, மாவட்ட ஆட்சியரும் பிப்ரவரி 1, 2013 இல் இடங்களை பார்வையிட காயல்பட்டினம் வந்தார். மாவட்ட ஆட்சியரின் பிப்ரவரி 1, 2013 வருகையின் போது - அவரிடம் - நகராட்சி சிறுபட்டியல் செய்திருந்த நான்கு இடங்கள் குறித்தும் விபரம் தெரிவிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தில் தென் கோடியில் இருந்த தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனம் துறைக்கு சொந்தமான 8.5 ஏக்கர் நிலத்தை பெற முயற்சிகள் மேற்கொள்ள - மாவட்ட ஆட்சியர் சொன்னார்.
அப்போதும் - ஐக்கிய பேரவை ஆதரவு உறுப்பினர்கள் - சர்வே எண் 278 இடத்தை பார்க்க ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். அடுத்த முறை காயல்பட்டினம் வரும் போது - அவ்விடத்தை பார்ப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
ஆறு தினங்கள் கழித்து - பிப்ரவரி 7, 2013 அன்று, மீண்டும் காயலபட்டினம் வந்தார் மாவட்ட ஆட்சியர். இம்முறை DCW தொழிற்சாலையை ஆய்வு செய்ய. அப்போது - நகர்மன்றத்தலைவரும், உறுப்பினர்களும் உடன் சென்றனர்.
அவ்வேளையில், DCW தொழிற்சாலையின் தென் கோடியில் இருந்து அவருக்கு - சர்வே எண் 278 இடம், காட்டப்பட்டது. அவருடன் வந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், CRZ இடம் என்பதால் இது ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது என தெரிவித்தனர். அப்போது பதில் கூறிய மாவட்ட ஆட்சியர் - CRZ இடம் என்றால், தான் நினைத்தாலும் ஒன்றும் செய்யமுடியாது என எடுத்துரைத்தார்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 4, 2017; 8:30 pm]
[#NEPR/2017120402]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|