காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“தாமிரபரணி முகத்துவாரத்தின் அருகே...!” எனும் தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் எட்டாம் பாக அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பாகம் 6 இல் - பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு இடத்திற்கு மாற்றாக புதிய இடம் வாங்க - தமிழக அரசு, 2006 ஆம் ஆண்டு, 5 லட்சம் ரூபாய் ஒதுக்கிய விபரத்தையும், அந்த நிதிக்கொண்டு - மார்ச் 31, 2007 க்கு முன்னர் இடம் வாங்கப்படவேண்டும் என்ற அரசாணை அறிவுறுத்தல் விபரங்களையும் கண்டோம்.
பாகம் 7 இல் - நிதி ஒதுக்கப்பட்ட அடுத்த மாதம் பொறுப்பிற்கு வந்த ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான நகர்மன்றம், காலக்கெடுக்குள் பப்பரப்பள்ளிக்கு மாற்று இடத்தை தேர்வு செய்யவில்லை என்பது மட்டும் அல்லாமல், ஆகஸ்ட் 2009 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் வாங்க முடிவு செய்யப்பட்ட தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் மகள் பெயரில் இருந்த நிலம் CRZ-1 பகுதிக்குள் வருவதால், அது குறித்த கூடுதல் தகவல் கேட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு - அந்த விபரங்களை இரு முறை வழங்கப்பட்ட நினைவூட்டலுக்கு பிறகும் வழங்கவில்லை என்ற தகவலும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் காரணமாக - அது சம்பந்தமான கோப்பு, மீண்டும் நகராட்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட செய்தியும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
ஏன் மூன்று ஆண்டு காலம் தாமதம் செய்து - தன் மகளின் காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தை, முன்னாள் நகர்மன்றத்தலைவர் - ஆகஸ்ட் 2009 இல் - நகராட்சிக்கு விற்பனை செய்ய முடிவு செய்தார்?
பிறகு, ஏன் - மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நினைவூட்டலுக்கு பிறகும், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
என்ற கேள்விகளும் - பாகம் 7 இல் எழுப்பபட்டிருந்தன.
ஆகஸ்ட் 2009 இல் மற்றொரு முக்கிய நிகழ்வும் நடந்தது.
மத்திய அரசு, 2005ஆம் ஆண்டில், Urban Infrastructure Development Scheme for Small & Medium Towns (UIDSSMT) என்ற திட்டத்தை வகுத்திருந்தது. சிறு மற்றும் நடுத்தர நகரங்களுக்கான இத்திட்டத்தினை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள 49 மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கான நகர் மேம்பாட்டு திட்டம் (CITY DEVELOPMENT PLAN [CDP]) தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது.
அதனை தொடர்ந்து Infrastructure Professionals Enterprise Private Limited (IPE) என்ற நிறுவனம் காயல்பட்டினம் நகராட்சி கூட்ட அரங்கில் - செப்டம்பர் 21, 2007 அன்றும், பின்னர் மதுரையில் அக்டோபர் 16, 2007 அன்றும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தியது.
அந்த நிறுவனம் தயாரித்த CDP அறிக்கையும் - ஆகஸ்ட் 2009 இல் தான் இறுதி செய்யப்பட்டது. அதாவது - சர்வே எண் 278 இடத்தில், 5 ஏக்கர் நிலம், நகராட்சிக்கு விற்கப்பட முடிவு செய்யப்பட்ட அதே மாதம், இவ்வறிக்கையும் இறுதியாயிற்று.
இது தற்செயலாகவே இருக்கலாம்.
இருப்பினும் அந்த ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்ட ஓர் அம்சத்திற்கும், முன்னாள் நகர்மன்றத்தலைவர் கொம்புத்துறை (கடையக்குடி) பகுதிக்கு அருகே உள்ள, தனது மகளின் சர்வே எண் 278 இடத்தை நகராட்சிக்கு விற்பதற்கு தீர்மானம் கொண்டு வந்ததற்கும், பின்னர் அவ்விடத்தில் குப்பைக்கிடங்கு கொண்டு வர - தன் பதவி காலத்தில், எவ்வித ஆர்வமும் காட்டாததற்கும் தொடர்பு இருக்குமா என்ற கேள்வியும் எழும்புகிறது.
============================================================================
CITY DEVELOPMENT PLAN - KAYALPATTINAM - FINAL REPORT - AUGUST 2009 (Page 84)
============================================================================
Accordingly, the town can use its strength as a sea facing one and permit entry of Tourism (pilgrim eco tourism – port / industry / business tourism) and aggressively market it as resort town for short stay. The estuary area Tamirabarani river and its vicinity can be an appropriate for such an activity in small village like environments and indigenously designed buildings, close to nature, independent and secluded from city functions etc. subject to feasibility studies and land availability. (Original English Version)
அதன்படி, கடலை நோக்கி அமைந்துள்ள நகரம் என்ற அம்சத்தை தனக்கு பலமாக எடுத்துக்கொண்டு, (மத / இயற்கை / துறைமுகம் / தொழில்) சுற்றுலாக்களை அனுமதித்து, நகரினை குறுகிய காலம் தங்கிட ஏதுவான சுற்றுலா தலமாக விளம்பரப்படுத்தலாம். இக்காரியத்திற்கு, இடம் மற்றும் வாய்ப்புகள் இருந்தால், தாமிரபரணி ஆற்றின் முகத்துவாரத்திற்கு பக்கம், உள்ளூர் தொழில்நுட்பத்துடன் - இயற்கை சூழலுக்கு அருகே, தனியாக நிற்கும் கட்டிடங்களில், சிறு கிராமம் போன்ற சூழல்களை உருவாக்கலாம். (தமிழாக்கம்)
இணைக்கப்பட்டுள்ள படம் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் நகராட்சிக்கு விற்க முன்மொழிந்த சர்வே எண் 278 க்கு மேற்கே, கடற்கரை/சுற்றுச்சூழல் உல்லாச போக்கிடம் (Beach / eco resort) பரிந்துரைக்கப்பட்டுள்ளதை காண்பிக்கிறது. இது - CDP அறிக்கையில், பக்கம் 28 இல் இடம்பெற்றுள்ளது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 3, 2017; 9:00 am]
[#NEPR/2017120301]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|