காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“உ.சகாயம் IASஐ நகர்மன்றத் தலைவர் சந்தித்ததைத் தொடர்ந்து – குப்பை கொட்ட இடம் வழங்கிட சம்மதம் தெரிவித்த பனை பொருள் துறை!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 12ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பிப்ரவரி 2013 முதல் வாரத்தில் இரு முறை காயல்பட்டினம் வந்தார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு ஆசிஷ் குமார். தனது இரு வருகைகளின் போதும் - இத்திட்டங்களுக்கு தேவையான இடங்களை பார்த்து சென்றார்.
அவரின் ஆலோசனை பெயரில் தமிழ்நாடு மாநில பனை வெள்ள கூட்டுறவு சம்மேளனத்திற்கு பாத்தியப்பட்ட 8.5 ஏக்கர் இடத்தினை பெறும் முயற்சியில் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் ஐ.ஆபிதா சேக் இறங்கினார். இந்த நிலம் குறித்த வருவாய்த்துறை ஆவணங்கள், பனைப்பொருள் துறை ஆவணங்களை சேகரிக்க அதிகாரிகளை சந்தித்தார்.
இப்பணிகளில் நகர்மன்றத்தலைவர் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, அதே வேளையில் - மறு பக்கம் - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள் பெருவாரியானோர் - மற்றொரு முக்கிய பணியில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தார்கள்.
அதுதான் - காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவருவதற்கான திட்டம்!
மார்ச் 8 அன்று - 17 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட, ஆதாரங்கள் எதுவும் இல்லாத - 11 குற்றச்சாட்டுக்கள், திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரிடம் - உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டு, தலைவி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர கோரப்பட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமுடியாது; அவர் - மக்களின் நம்பிக்கையை பெற்று தலைவரானவர்; உறுப்பினர்களின் தயவால் அல்ல என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அந்த கடிதம் - உறுப்பினர்களால் - அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டிருந்தது.
அதிகாரிகளுக்கு அனுப்பிய புகாரின் நகலை நகர்மன்றத் தலைவருக்கும் உறுப்பினர்கள் - பதிவு தபாலில் - அனுப்பினார்கள்.
அந்த கடிதத்தை நகர்மன்றத்தலைவருக்கு கொடுக்கவந்த போஸ்ட்மேன் - இரு கடிதங்களை, நகர்மன்றத் தலைவரிடம் கொடுக்கிறார்.
போஸ்ட்மேன் கொடுத்த ஒரு கடிதம் நம்பிக்கை இல்லா தீர்மானம் சம்பந்தமான உறுப்பினர்கள் கடிதம்!
போஸ்ட்மேன் கொடுத்த மற்றொரு கடிதம் - அமெரிக்க அரசின் சிறப்பு விருந்தினராக, அமெரிக்கா செல்ல நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களை தேர்வு செய்து, அமெரிக்க தூதரகம் அவருக்கு அனுப்பியிருந்த அழைப்பு கடிதம்!!
யாரை கௌரவிக்கவேண்டும், யாரை கெளரவம் இழக்க செய்யவேண்டும் என நிர்ணயம் செய்பவன் இறைவன் ஒருவனே என்பதற்கு இதுவே மிகப்பெரிய அத்தாச்சியாக இருந்தது என்றால் அது மிகையாகாது!
உறுப்பினர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை கண்டு நகர்மன்றத்தலைவர் - துவண்டுபோகவில்லை. சீதக்காதி திடலில் - நூற்றுக்கணக்கான மக்கள் முன்பு - தனது விளக்கத்தை வழங்குகிறார் (மார்ச் 17, 2013)
மார்ச் 22, 2013 அன்று - நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான தேதி முடிவு செய்து - நகர்மன்றத் தலைவருக்கு தபால் கொடுக்க வருகிறார்கள். அவர் சென்னையில் இருந்ததால் வீடு மூடியிருக்கிறது.
லஞ்சம், ஊழலை எதிர்த்துக்கேட்டதாலும், நேர்மையான நிர்வாகம், ஆதிக்கதவாதிகளின் தலையீடு இல்லாத நிர்வாகம் வழங்க வேண்டும் என விரும்பிய ஒரே காரணத்திற்காக அவரை அவமானம் படுத்தவேண்டும் என்று - நகராட்சி அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி ஆகியோர் புடைசூழ - நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் அவர்களின் வீட்டுவாசல் கதவில் - நம்பிக்கை இல்லா தீர்மான நோடீஸை ஒட்டி செல்கிறார்கள். அவர்களின் சந்தோசம் - 15 நாட்கள் கூட நீடிக்காது என்று அப்போது அவர்களுக்கு தெரியாது.
நம்பிக்கை இல்லாத்தீர்மானத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஏப்ரல் 5, 2013.
பெரிதாக அதனை நகர்மன்றத்தலைவர் சட்டைசெய்யவில்லை.
ஏப்ரல் முதல் வாரத்தில் - பட்ஜெட் அறிவிப்புகள் வர இருப்பதால், நகராட்சிக்கான புதிய கட்டிடம் நிதி அறிவிப்பு - இந்த அறிவிப்பில் இடம்பெறவேண்டும் என்பதை உறுதி செய்ய அதிகாரிகளை, சென்னையில் சந்திக்கிறார். அடுத்த வாரம் முதல்வர் சட்டசபையில் அதையும், பயோ காஸ் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவிக்க இருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்கான நாள் நெருங்குகிறது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றினை இது சம்பந்தமாக தொடருகிறார். அந்த வழக்கு ஏப்ரல் 1 அன்று விசாரணைக்கு வருகிறது. நகர்மன்றத் தலைவர் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம். அஜ்மல் கான் ஆஜராகிறார். அரசிடம் சில விளக்கங்கள் கோரி - வழக்கினை ஏப்ரல் 3 தேதிக்கு ஒத்திவைக்கிறார் நீதிபதி.
வழக்கு - மீண்டும் ஏப்ரல் 3 அன்று விசாரணைக்கு வருகிறது. இல்லாத ஒரு சட்டப்பிரிவை (அதாவது செப்டம்பர் 2011 இல் நீக்கப்பட்ட ஒரு சட்டப்பிரிவை) மேற்கோள்காட்டி - உறுப்பினர்களும், அதிகாரிகளும் - நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏப்ரல் 5, 2013 அன்று நகர்மன்றத்தலைவர் மீது கொண்டு வந்துள்ளார்கள் என்பதை வழக்கறிஞர் எடுத்துக் கூற - ஏப்ரல் 5, 2013 அன்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லாத்தீர்மான கூட்டத்திற்கு தடை விதிக்கிறார் நீதிபதி கே.கே.சசிதரன்.
சூழ்ச்சிகாரர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் யார் என்று அன்று நிரூபணம் ஆகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நகரின் அதிகாரவர்க்கமும், ஆதிக்கசக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழல் வாதிகளும் பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள்.
ஏப்ரல் 4, 2013. இடைக்காலத் தடை பெற்றதற்கு அடுத்த நாள். சென்னை தலைமை செயலகத்தில், பனைப்பொருள் இலாகாவிற்கு சொந்தமான இடத்தினை பப்பரப்பள்ளிக்கு மாற்றாக குப்பைக்கொட்ட இடம் கோரி - கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலர் திரு சந்தானம் IAS அவர்களை, நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக் - நேரில் சந்தித்து, கடிதம் கொடுக்கிறார்.
விபரங்களை கேட்டறிந்த அவர் - இத்துறையை நேரடியாக இயக்கும் Khadi and Village Industries Board அமைப்புடைய - தலைமை செயல் அலுவலர் (CEO) திரு உ.சகாயம் IAS அவர்களை சந்திக்க அறிவுறுத்துகிறார். உ.சகாயம் IAS அவர்களை உடனடியாக - சென்னை குறளகத்தில் இருந்த அவரின் அலுவலகத்தில் சந்திக்கிறார் காயல்பட்டினம் நகர்மன்றத்தலைவர் ஐ.ஆபிதா சேக்.
எவ்வளவு நிலம், எதற்காக நிலம் கேட்கப்படுகிறது போன்ற விபரங்களை கேட்ட உ.சகாயம் IAS - இது சம்பந்தமான பிரிவு அலுவலகம் திருநெல்வேலியில் உள்ளது; அவர்களிடம் அறிக்கை கேட்கிறேன்; முடிந்தால் சந்தை விலைக்கு வழங்க ஆவனம் செய்கிறேன் என்ற உறுதி வழங்கி நகர்மன்றத்தலைவரை வழி அனுப்புகிறார் அவர்.
ஏப்ரல் 10, 2013 அன்று - சட்டசபையில், காயல்பட்டினம் நகராட்சிக்கு - புதிய அலுவலக கட்டிடம் கட்டவும், பயோ காஸ் திட்டம் அமைத்திடவும் - நிதி ஒதுக்கி, அறிவிப்பு வெளியிடுகிறார் அப்போதைய தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா.
அந்த சந்திப்புக்கு பிறகு - மூன்று வாரத்தில் - அதாவது ஏப்ரல் 22, 2013 தேதிய கடிதம் மூலமாக - பப்பரப்பள்ளிக்கு மாற்றாக குப்பைக்கொட்ட இடம்கோரி நகர்மன்றத்தலைவர் வைத்த கோரிக்கையை ஏற்று - சந்தை விலைக்கு, அரசு விதிமுறைகள்படி அந்நிலத்தை வழங்கிட - தமிழ்நாடு மாநில பனை வெல்லம் (ம) தும்பு விற்பனைக் கூட்டுறவு இணையம் - நகராட்சிக்கு கடிதம் அனுப்புகிறது [ந.க.எண் 703/அ 2/02 (22.04.2013)].
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 5, 2017; 12:30 pm]
[#NEPR/2017120501]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|