காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு அனுப்பிய அறிவுறுத்தலைக் காயல்பட்டினம் நகராட்சி நீண்ட காலமாகக் கண்டுகொள்ளாதிருந்ததால், தமிழக அரசால் காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பான கோப்புகள் மீண்டும் அரசிடமே திருப்பியனுப்பப்பட்டன. இத்தகவலை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் ஏழாம் பாக அறிக்கை வெளியிடப்பட்டள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
பாகம் 6 இல் தெரிவித்தது போல் - பப்பரப்பள்ளிக்கான மாற்று இடம் தேடப்படவேண்டும் என்ற முடிவு 2000களின் ஆரம்பத்தில் எட்டப்பட்டு, செப்டம்பர் 6, 2006 இல் - தமிழக அரசால், நிலம் வாங்குவதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.
நிதி ஒதுக்கப்பட்டு ஒரு மாதம் கழித்து பொறுப்புக்கு வந்த ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான நகராட்சி, அதற்கு முன்பு இருந்த முழு ஐந்தாண்டுகளிலும், பப்பரப்பள்ளி இடத்திற்கு மாற்று இடத்தை தேர்வு செய்யவில்லை.
மார்ச் 31, 2007 க்குள் நிலம் தேர்வு செய்யப்படவேண்டும் என அரசாணை விதித்த காலக்கெடுவை - ஹாஜி வாவூ செய்யது அப்துர்ரஹ்மான் தலைமையிலான நகர்மன்றம் கடைபிடித்திருந்தால், பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கு மூடப்பட்டு இவ்வாண்டுடன், 10 ஆண்டுகள் நிறைவாகியிருக்கும். 2006 - 2011 காலகட்டத்தில் செயல்புரிந்த / செயல்புரியாத நகர்மன்றத்தினால் ஏற்பட்ட காலதாமதத்தால் - சுற்றுச்சூழல் / சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து, பப்பரப்பள்ளி குப்பைக்கிடங்கின் நிலைமை மேலும் மோசமானது.
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர்ரஹ்மான் - 2006 - 2011 காலகட்டத்திலேயே, புதிய குப்பைக்கிடங்கு அமைய முயற்சி செய்தார்; தன் சொந்த நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கர் இடம் தர முன்வந்தார் என்பது பரவலாக அனைவரும் அறிந்த தகவல்.
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
தான் பொறுப்பிற்கு வந்து மூன்றாண்டுகள் கழித்து, அரசு விதித்த காலக்கெடு முடிந்து 2.5 ஆண்டுகள் கழித்து - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் - 28 ஆகஸ்ட் 2009 அன்று நடந்த கூட்டத்தில், ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறார் (பொருள் எண் 8).
காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் பணிக்காக (கம்போஸ்ட் யார்டு) உரக்கிடங்கு வாங்குவதற்காக - பகுதி 2 திட்டத்தின் கீழ், மான்யமாக ரூ.5.00 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக நிலம் வாங்க - புல எண் 278 இல் ஐந்து ஏக்கர் நிலம் வாங்குவதற்கு, அதன் உரிமையாளர் திருமதி WSAR கதீஜத்துல பாத்திமா அவர்கள் ஏக்கர் ரூ 1.00 லட்சம் வீதம் காயல்பட்டணம் நகராட்சிக்காக வழங்க சம்மதித்து உரிய ஒப்பந்தம் செய்துகொடுத்துள்ளார். மேற்காணும் புல எண் 278 இல், அரசு வழிகாட்டுதல் விவரப்படி ஒரு ஹெக்டர் 144500/- எனவுள்ளதால், ஏக்கர் மதிப்பீடு சுமார் ரூ.59,000/- ஆகவுள்ளது. தற்பொழுது வெளிமார்க்கெட் விவரப்படி, ஏக்கர் 1 க்கு ரூ.1.50 லட்சமாக உள்ளது. காயல்பட்டணம் நகர் நலன் கருதி மேற்கண்ட நில உரிமையாளர், காயல்பட்டணம் நகராட்சிக்கு ஏக்கர் 1 க்கு ரூ 1.00 லட்சம் வீதம் வழங்க சம்மதித்துள்ளார். மேற்படி நிலத்தை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதிக்கு சமர்ப்பித்து, உத்தரவு பெற்று திருமதி WSAR கதீஜத்துல் பாத்திமா அவர்களிடம் 5 ஏக்கர் நிலத்தை காயல்பட்டினம் நகராட்சிக்கு ரூ.5.00 லட்சத்திற்கு உரக்கிடங்கு வாங்குவதற்கு மன்றத்தின் அனுமதிக்கு. (பொருள் எண் 8; ஆகஸ்ட் 28, 2009; காயல்பட்டினம் நகராட்சி கூட்டப்பொருள்)
இந்த தீர்மானப்படி - தனது மகளின் சர்வே எண் 278 (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) நிலத்தை, ஏக்கர் 1 க்கு ரூபாய் 1 லட்சம் என, 5 ஏக்கர் நிலத்திற்கு - ரூபாய் 5 லட்சம் என்ற அடிப்படையில் விற்பனை செய்ய, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர்ரஹ்மான் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானமும் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன் பிறகு என்ன நடந்தது?
(1) காயல்பட்டினம் நகராட்சியில் இருந்து திருநெல்வேலி மண்டலம், நகர் ஊரமைப்பு (DTCP) துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சில கடிதங்கள் எழுதப்பட்டதாக தெரிகிறது. 20.10.2010 அன்று, கீழ்க்காணும் விபரங்களுடன் - காயல்பட்டினம் நகராட்சியின் செயல் அலுவலருக்கு - அப்போதைய நகர் ஊரமைப்பு துணை இயக்குனர் பதில் எழுதுகிறார். அதில் - சர்வே எண் 278 இடம், CRZ - 1 வகைப்பாட்டில் அமைந்துள்ளது என தெரிவிக்கிறார். மேலும் இத்திட்டம் ஒப்புதல் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூட்டத்தில் வைத்து முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கிறார். பார்க்கவும் இணைப்பு - NEPR/2017120202/IMG01.
(2) தொடர்ந்து - 15.11.2010 அன்று - நகர் ஊரமைப்பு (DTCP) துணை இயக்குனரிடம் இருந்து பெற்ற கடிதத்தை, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி மாவட்ட செயற்பொறியாளருக்கு - காயல்பட்டினம் நகராட்சி செயல் அலுவலர் அனுப்புகிறார். பார்க்கவும் இணைப்பு - NEPR/2017120202/IMG02.
(3) அதனை தொடர்ந்து மீண்டும் ஒரு கடிதத்தை காயல்பட்டினம் நகராட்சி சார்பாக ஆணையாளர் - 17.2.2011 அன்று - மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியதாக தெரிகிறது. அதற்கான பதிலை - 18.4.2011 தேதியில் எழுதிய மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் - "எவ்வளவு பகுதி CRZ 3 இல் வருகிறது என்ற விபரத்தை இந்த அலுவலகத்திற்கு தெரியப்படுத்தும்படி தாங்கள் இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்" என தெரிவிக்கிறார். பார்க்கவும் இணைப்பு - NEPR/2017120202/IMG03.
(4) மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 18.4.2011 தேதி கடிதத்திற்கு நகராட்சி எந்த பதிலும் அனுப்பவில்லை. மீண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், நினைவூட்டல் கடிதம் - 19.5.2011 தேதியில் அனுப்புகிறது. அதற்கும் காயல்பட்டினம் நகராட்சி மௌனம் காக்கிறது. அதன் பிறகு - 15 மாதங்கள் ஆகியும், நகராட்சி எந்த விளக்கத்தையும் அளிக்காததால், "கூடுதல் விபரங்கள் இது நாள் வரையில் தங்கள் அலுவலகத்தில் இருந்து கிடைக்கப்பெறாத காரணத்தால் தங்களது விண்ணப்பங்கள் இத்துடன் இணைத்து திருப்பி அனுப்பப்படுகிறது" என தெரிவித்து (4.7.2012), சர்வே எண் 278 இடத்தில் குப்பைக்கிடங்கு கொண்டுவருவது சம்பந்தமான கோப்பை - மீண்டும் நகராட்சிக்கே, மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருப்பி அனுப்புகிறது. பார்க்கவும் இணைப்பு - NEPR/2017120202/IMG04.
2009 ஆம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, அவ்விடத்திற்கு குப்பைக்கிடங்கை மாற்ற ஏன் முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தொடர்ந்து முயற்சி எடுக்கவில்லை?
பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விளக்கங்கள் கேட்டும் - ஏன், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தலைமையிலான நகர்மன்றம் - அமைதி காத்தது?
அந்த இடத்தில் குப்பைக்கிடங்கு அமைத்திட இடம் வழங்கவேண்டாம் என புதிய முடிவை முன்னாள் நகர்மன்றத்தலைவர் எடுத்தாரா?
நகர் ஊரமைப்பு (DTCP) / மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை கேட்ட விளக்கங்களுக்கு பதில் கொடுக்கத்தேவையில்லை; CRZ என தெரிந்தபிறகு அவ்விடத்தில் குப்பைக்கிடங்கு கொண்டு வர முடியாது என்ற முடிவுக்கு முன்னாள் நகர்மன்றத்தலைவர் வந்தாரா?
முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களின் திடீர் அமைதிக்கு என்னதான் காரணம்?
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 2, 2017; 7:30 pm]
[#NEPR/2017120202]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|