காயல்பட்டினம் சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) மீன்பிடி தள வழக்கில், மத்திய அரசு வழக்கறிஞர் வாக்காலத் தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு இம்மாதம் 21ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
கடற்கரை பூங்காவிற்கு வடக்கே, சிங்கித்துறை (கற்புடையார் பள்ளி வட்டம்) பகுதியில் - மீன்வளத்துறை மூலமாக மீன்பிடி தளம் - முறையான CRZ அனுமதிபெறப்படாமல் கட்டப்பட்டு வருகிறது. மேலும் - இத்திட்டத்தின் ஓர் அங்கமாக - கான்க்ரீட் சாலை, தடை செய்யப்பட்டுள்ள உயர் அலை எல்லை (HTL) - குறைந்த அலை எல்லை (LTL) பகுதிகளுக்கு இடையில் போடப்பட்டுள்ளது.
+தடை செய்யப்பட்ட இடத்தில், விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள சாலையை அப்புறப்படுத்தவும், அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அப்புறப்படுத்த கோரியும், விதிமீறி பணிகளை மேற்கொண்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும்_ - தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல கிளையில் - நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் தொடர்ந்த வழக்கு - ஆகஸ்ட் 11 அன்று நீதிபதி திரு.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் திரு பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நடப்பது என்ன? சார்பாக வழக்கறிஞர்கள் யோகேஸ்வரன் மற்றும் நேஹா மிரியம் குரியன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது விபரங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி - புதிதாக எவ்வித பணிகளையும் செய்யக்கூடாது என இடைக்காலத்தடை (STATUS QUO) வழங்கினார். மேலும் - மேற்கொள்ளப்பட்ட பணிகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து (STATUS REPORT) - வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும்போது - அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
அவ்வழக்கு மீண்டும் செப்டம்பர் 20 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் திருமதி யாஸ்மீன் அலி - செப்டம்பர் 19 அன்று, சிங்கித்துறை பகுதியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வுகள் மேற்கொண்டதாகவும், அது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கோரினார். அதனை தொடர்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, நவம்பர் 20 தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைக்கப்பட்ட வழக்கு நவம்பர் 20 அன்று விசாரணைக்கு, நீதிபதி எம்.எஸ்.நம்பியார் முன்னர் வந்தது. அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் - கூடுதல் கால அவகாசம் கோரினார். ஆய்வு செய்து இரண்டு மாதங்கள் ஆகியும், அறிக்கை தாக்கல் செய்யாமல் ஏன் கூடுதல் கால அவகாசம் கேட்கிறீர்கள் என நீதிபதி வினவினார். அடுத்த விசாரணைக்கு முன்னர் கண்டிப்பாக அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என கூறி, வழக்கினை டிசம்பர் 8 தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.நம்பியார் ஒத்திவைத்தார்.
நவம்பர் 20 அன்று - மனுதாரரான நடப்பது என்ன? குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association; MEGA) தலைவருமான பி.எம்.ஏ.சதக்கத்துல்லாஹ் சார்பில் - கூடுதல் ஆவணங்கள், தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு இன்று மீண்டும் - பதிவாளர் நீதிமன்றத்தில் பதிவாளர் திருமதி மீனா சதீஷ் முன்னர் வந்தது. அப்போது - மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பாக திருமதி ஈ.சரஸ்வதி - வக்காலத்து தாக்கல் செய்தார்.
இதர எதிர்மனுதாரர்கள் - தங்கள் பதிலை தாக்கல் செய்யாததால், மீண்டும் இவ்வழக்கு - டிசம்பர் 21 அன்று நீதிபதிக்கு முன்னர் விசாரணைக்கு - மாற்றப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 8, 2017; 9:10pm]
[#NEPR/2017120803]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|