காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“உண்மையை மறைக்க, பல உண்மைகளை மறந்து பரப்பப்பட்ட அவதூறுகள்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 24ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகத்தில் நாம் கண்டது போல், முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் உடைய 25 ஏக்கர் நிலம் (சர்வே எண் 278), 80 சதவீதம் - CRZ - 1 என்ற CRZ விதிமுறைகளிலேயே, மிகவும் கடுமையான பிரிவை சார்ந்தது.
மேலும் - அவர் தந்த இடமும் (4 + 1.5 ஏக்கர் நிலம்) - 30 சதவீதம், CRZ - 1 எல்லைக்குள் வருவதாகும்.
இந்த உண்மைகள் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டபோது - முன்னாள் நகர்மன்றத் தலைவரின் ஆதரவாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் - இதனை கடுமையாக மறுத்தார்கள். இந்த உண்மைகளை எடுத்துரைத்தவர்கள் மீது பல்வேறு அவதூறுகளை பரப்பினார்கள்.
மேலே தெரிவிக்கப்பட்ட காரணங்களுக்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், DTCP அமைப்பும் - அந்நிலத்தை பலமுறை நிராகரித்தபோதும், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் - புதிய கதையை - பொய்யான புதிய கதையை - மக்கள் மத்தியில் பரப்பினார்கள்.
அது என்ன?
தலைவியின் ஆதரவாளர்களால், காயல்பட்டினம் வடபாகத்தில் உள்ள சர்வே எண் 278 இடம் காட்டப்பட்டது என்றும், முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய இடம் தென்பாகத்தில் உள்ள சர்வே எண் 278 இடம் என்றும், குழம்பிப்போன மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பின்னர் சுதாரித்துக்கொண்டு மீண்டும் - பிறகு அனுமதி வழங்கினார்கள் என்றும் கூறினார்கள்.
இதில் ஏதேனும் உண்மை உள்ளதா?
(1) முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் உடைய சர்வே எண் 278 இடம் குறித்து தனி கோப்பு, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் - 2009 ஆம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அப்படி இருக்க 2015 ஆம் ஆண்டில் எவ்வாறு அந்த அதிகாரிகள் குழம்பி போவார்கள்?
(2) முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் உடைய சர்வே எண் 278 இடத்தை - முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார், பிப்ரவரி 2013 இல் *நேரில் ஆய்வு செய்தபோது, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்படி இருக்க 2015 ஆம் ஆண்டில் எவ்வாறு அந்த அதிகாரிகள் குழம்பி போவார்கள்?
(3) முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் உடைய சர்வே எண் 278 இடத்தை - முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார், அக்டோபர் 2013 இல் நேரில் ஆய்வு செய்தபோது, மாசுக்கட்டுப்பாட்டு வருவாய்த்துறை அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்படி இருக்க 2015 ஆம் ஆண்டில் எவ்வாறு அந்த அதிகாரிகள் குழம்பி போவார்கள்?
(4) தேர்வு செய்யப்பட்ட சர்வே எண் 278 இடம் குறித்த விண்ணப்பத்தை தயார் செய்து, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் - டிசம்பர் 8, 2014 இல் - சமர்ப்பித்தது, அப்போதைய நகராட்சி ஆணையர் காந்திராஜன். அப்படி இருக்க, 2015 ஆம் ஆண்டில், எவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு - யாரினால் தவறான இடம் தகவலாக வழங்க முடியும்?
(5) காயல்பட்டினம் நகராட்சி மூலம், அப்போதைய ஆணையர் காந்திராஜனால், சமர்ப்பிக்கப்பட்ட - டிசம்பர் 8, 2014 விண்ணப்பம் அடிப்படையிலேயே, ஜனவரி 7,2015 இல் - மாசு கட்டுப்பாட்டு வாரியம், கள ஆய்வுகள் செய்ததது. கள ஆய்வுக்கான வழிமுறைகள்படி - கள ஆய்வில், எந்த இடம் பார்க்கப்பட்டது, யார்யார் ஆய்வின்போது இருந்தார்கள், என்ன பார்க்கப்பட்டது போன்ற தகவல்கள் - பதிவு செய்யப்படும். அந்த கள அறிக்கை (SITE INSPECTION REPORT), முன்னாள் தலைவியோ, அவரின் ஆதரவாளர்களோ - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அழைத்ததாகவோ அல்லது கள ஆய்வின் போது, அவர்கள் உடன் இருந்தார்கள் என்றோ தெரிவித்ததா?
(6) வடபாகத்தில் உள்ள சர்வே எண் 278 இடம், அரசு புறம்போக்கு நிலம்; தென்பாகத்தில் உள்ள சர்வே எண் 278 இடம், தனியாருக்கு சொந்தமானது. அப்படி இருக்க - எவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழம்பிப்போவார்கள்?
(7) வடபாகத்தில் உள்ள சர்வே எண் 278 இடம், கொட்டமடைக்காடு நிலங்களின் ஒரு பகுதி என கிராமப்படம் தெளிவாக தெரிவிக்கிறது; அப்படி இருக்க - எவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழம்பிப்போவார்கள்?
(8) வடபாகத்தில் உள்ள சர்வே எண் 278 இடத்திற்கு இன்றுவரை எந்த உட்பிரிவும் (278/1, 278/2, 278/3) கிடையாது; தென்பாக சர்வே எண் 278 இடத்திற்கு, உட்பிரிவுகள் பல உள்ளன. அப்படி இருக்க - எவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழம்பிப்போவார்கள்?
(9) வடபாக சர்வே எண் 278 இடத்தின் பரப்பளவு 6 ஏக்கர்; மேய்ச்சல் தரை என வருவாய்த்துறை ஆவணங்கள் தெரிவிக்கிறது; தென்பாக சர்வே எண் 278 இடத்தின் பரப்பளவு 25 ஏக்கர்; அதில் 278/2 உட்பிரிவு நிலவியல் பாதை உள்ளது என்ற அளவிலான தகவல் வரை இருக்க, எவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழம்பிப்போவார்கள்?
(10) அதுமட்டும் அல்ல - மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காயல்பட்டினம் வடபாக கிராமத்திற்கான CRZ இடங்கள் குறித்த சர்வே எண்கள் பட்டியலில், சர்வே எண் 278 கிடையவே கிடையாது; அப்படி இருக்க - எவ்வாறு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழம்பிப்போவார்கள்?
இத்தனை கேள்விகள் இருக்க - மக்களை ஏமாற்றவேண்டும் என்ற நோக்கிலும், தங்கள் தவறை மறைக்கவேண்டும் என்ற நோக்கிலும் - மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குழம்பி போய், முதலில் நிராகரித்தார்கள்; பின்னர் சுதாரித்து, அனுமதி வழங்கினார்கள் என்ற பச்சை நிற பொய் - திட்டமிட்டு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மானின் ஆதரவாளர்களால் - பரப்பப்பட்டது.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 14, 2017; 12:00 pm]
[#NEPR/2017121102]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |