காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“சர்வே எண் 278 இடம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடந்த வழக்குகள் விபரம்!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 28ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
சுற்றுச்சூழல் விஷயங்கள் பிரதானமாக உள்ளதால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாட சொல்லி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு (WP [MD] NO.7730/2015) - மே 13, 2015 அன்று தள்ளுபடி செய்யப்பட்ட தகவலை நாம் முந்தைய பாகங்களில் பார்த்தோம்.
அதனை தொடர்ந்து - மனுதாரர்கள் பால் ரோஸ் மற்றும் செந்தமிழ்செல்வன் ஆகியோர், சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளையில், வழக்கு பதிவு செய்தனர். மே 21, 2015 அன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் (APPLICATION NO.100/2015) - நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் ஆகியோர் - இடைக்காலத்தடை (STATUS QUO ON DATE) வழங்கி, வழக்கினை - ஜூலை 9 தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முந்தைய பாகங்களில் நாம் கண்டது போல் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் தந்த 5.5 ஏக்கர் நிலத்தில் - CRZ பகுதிக்குள் வரும் 1.5 ஏக்கர் நிலம் மறைக்கப்பட்டு - அண்ணா பல்கலைக்கழகத்தின் INSTITUTE OF REMOTE SENSING (IRS) துறை CRZ சான்றிதழ் - ஏப்ரல் 2015 இல் - நகராட்சியினால் பெறப்பட்டது.
மேலும் - மே 19,2015 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட கள ஆய்வுகள் போது, முன்னாள் நகர்மன்றத் தலைவர் தந்த 1.5 ஏக்கர் நிலத்தில் - வாவூ கதீஜா / வாவூ மஃதூம் சாலைகள் உருவாக்கப்படாது என்ற உறுதிமொழியையும், அப்போதைய நகராட்சி ஆணையர் காந்திராஜன் வழங்கினார். இப்பணிகளுக்கான அணுகு சாலை - மேற்கு பகுதியில் உள்ள வண்டிப்பாதையில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து - மே 25, 2015 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய நிலத்தில் குப்பைகொட்ட MSW AUTHORISATION என்ற அனுமதியை வழங்கியது. அனுமதி வழங்கிய ஆணையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு 55 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அந்த அனுமதியின் ஆயுட்காலம் 31.3.2016 வரை ஆகும். அதன் பிறகு அது புதுப்பிக்கப்படவேண்டும். ஆணை முழுவதுமாக இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜூன் 24, 2015 அன்று, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய நிலத்தில் - பயோ காஸ் பிளான்ட் அமைத்திட Consent To Establish (CTE) என்ற அனுமதியும் வழங்கியது. அந்த ஆணையில் Air Act சட்டத்தின் கீழ் 20 நிபந்தனைகளும், Water Act சட்டத்தின் கீழ் 21 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. அதன் ஆயுட்காலம் 21.6.2017 வரை ஆகும். அதற்குள் பணிகள் நிறைவாகவில்லை என்றால் அனுமதியை நீட்டிக்க கோரி (EXTENSTION) விண்ணப்பம் செய்யவேண்டும். ஆணைகள் முழுவதுமாக இணைக்கப்பட்டுள்ளன.
மேலே விவரிக்கப்பட்ட இரு அனுமதிகளும் - தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்ட பிறகே பெறப்பட்டன. இவ்வனுமதிகள் இல்லாமலேயே - ஏறத்தாழ 50 சதவீத பணிகளை முடித்துவிட்டதாக நகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட மனு தெரிவித்திருந்தது.
பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்திருந்தவர்கள் - எதிர் மனுதாரர்களாக - 11 நபர்களை இணைத்திருந்தார்கள். அதில் - மத்திய அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர், நகராட்சி தலைவர், நகராட்சி ஆணையர், ஒப்பந்ததாரர் ஆகியோரும் அடங்கும்.
அம்மனுவில் - சுற்றுச்சூழல் ஒப்புதல் (ENVIRONMENTAL CLEARANCE), MSW விதிமுறை ஒப்புதல், கட்டுமான ஒப்புதல் (CTE) என எந்த அனுமதியும் பெறாமல், CRZ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரியும், அப்பணிகளை மேற்கொண்ட காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் மற்றும் காயல்பட்டினம் நகராட்சி தலைவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டிருந்தது
மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட பிரதான வாதம் - இப்பணிகளை மேற்கொள்ள, துவக்க கட்டத்திலேயே சுற்றுச்சூழல் ஒப்புதல் (PRIOR ENVIRONMENTAL CLEARANCE) பெறப்படவேண்டும்; அதன் பிறகு தான் MSW AUTHORISATION மற்றும் CONSENT TO ESTABLISH பெறப்படவேண்டும் என்பதாக இருந்தது.
Prior EC மூலம் தான் - தேர்வு செய்யப்பட்ட இடம் பொருத்தமான இடமா, அவ்விடத்தில் மாசு உட்பட வேறு பிரச்சனைகள் உள்ளதா போன்ற விஷயங்கள் குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சி தலைவர் திருமதி ஐ.ஆபிதா சேக் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் - சர்வே எண் 278 இடம் ஏன் பொருத்தமில்லை என்பதும், மாற்று இடங்கள் இருந்தும் இவ்விடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற விபரமும் தாக்கல் செய்யப்பட்டது.
நகராட்சி தரப்பில் - பயோ காஸ் திட்டத்திற்கு சர்வே எண் 392/5 இடம் பொருத்தம் என்றாலும், குப்பைகொட்ட அங்கு போதுமான இடமில்லை என்றும், இரு திட்டங்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதால் - சர்வே எண் 278 தேர்வு செய்யப்பட்டது என்றும் பதில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் - PRIOR EC என்பது ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளாட்சிமன்றங்கள் குப்பைக்கிடங்கு உருவாக்க முயற்சித்தால் மட்டுமே தேவைப்படும் என்றும் வாதம் வைக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் - செப்டம்பர் 9, 2015 அன்று நிறைவுற்று, நாள் குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் வழங்கப்பட்ட அனுமதிகளை அமல்படுத்த போதிய இடம் சர்வே எண் 278 இடத்தில் இல்லை என்பது உட்பட பல்வேறு குறைப்பாடுகள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதிகளில் இருந்தாலும் - அந்த அனுமதிகளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உடனடியாக எதிர்த்து வழக்கு தொடர இயலாது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணைகளை எதிர்த்து முறையீடு செய்வதற்கு என்றே அமைக்கப்பட்டுள்ள TAMILNADU POLLUTION CONTROL APPELLATE AUTHORITY அமைப்பில் தான் முறையீடு செய்யவேண்டும். அந்த அமைப்பின் முடிவு திருப்தியில்லை என்றால் தான் - மேல்முறையீடாக, பசுமை தீர்ப்பாயத்திற்கு வர முடியும்.
இந்த காரணத்தால் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய ஆணைகள் (MSW AUTHORISATION/CTE) குறித்து எவ்வித கருத்தும் - ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பில் எதிர்பார்க்கப்படவில்லை.
வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபிறகு - நகராட்சி தரப்பில் CRZ பகுதிகளில் வாவூ கதீஜா / வாவூ மஃதூம் சாலைகளும் உருவாக்கப்படாது என்ற வாக்குறுதி வழங்கப்பட்டதாலும், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு - மாசு கட்டுப்பாட்டு வாரியம், அனுமதிகள் வழங்கியதாலும் - தீர்ப்பாயம் முடிவு சொல்லவேண்டிய ஒரே விஷயம் - இத்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் ஒப்புதலும் (PRIOR ENVIRONMENTAL CLEARANCE) பெறப்படவேண்டுமா என்பது தான்.
வழக்கு நிறைவுபெற்று ஏறத்தாழ 5 மாதங்கள் கழித்து, ஜனவரி 25, 2016 அன்று - தேசிய பசுமை தீர்ப்பாயம், தனது தீர்ப்பை வழங்கியது. 34 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பு - முழுமையாக, PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் நிபுணர் உறுப்பினர் பேராசிரியர் நாகேந்திரன் வழங்கிய தீர்ப்பில் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய CRZ பகுதிகளில் சாலைகள் உருவாக்கப்படாது என்ற உத்திரவாதம் பதிவு செய்யப்படுகிறது.
வழக்கு தொடரப்பட்டபின்பு - MSW Authorisation மற்றும் Consent to Establish (CTE) பெறப்பட்டுள்ளது என்பதும் பதிவு செய்யப்படுகிறது.
இந்த அனுமதிகள் (MSW AUTHORISATION/CTE) பெறப்படுவதற்கு முன்பு - சுற்றுச்சூழல் ஒப்புதலும் (PRIOR ENVIRONMENTAL CLEARANCE) பெறவேண்டுமா என்ற கேள்விக்கு - கீழ்காணும் விளக்கம் அடிப்படையில், Prior EC தேவையில்லை என கூறி, இதுவரை பெறப்பட்டுள்ள அனுமதிகள் அடிப்படையில் பணிகளை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது.
"...Therefore, a combined reading of the entire statutory rules make it abundantly clear that there can be separate person nominated by the municipal authority for each of the Municipal Solid Waste Facility like collection, segregation etc. The Municipal Authority itself can be operator of all facilities combined together. In such circumstances, only we are of the considered view that the word MSWMF contemplated under item 7(i) of EIA Notification will be called as Common MSWMF. In our considered view this can only be the harmonious and natural construction of the term Common MSWMF. Construing otherwise stating that all the components of operation of MSW as one integral unit will only result in misconstruction of MSW Rules, 2000. It is true that common MSW facility may also include cases of more than one Municipalities joining in a centralised fashion which may also be referred under item 7(i)..." [Para 36; Judgement Extract]
"...ஒரு நகராட்சியில் குப்பைகளை பராமரிக்கும் பணியில் பல்வேறு அம்சங்கள் உள்ளன; அவற்றில் ஒவ்வொன்றையும் வெவ்வேறு நபர்கள் பராமரிக்கலாம்; அல்லது அனைத்து பணிகளையும் இணைத்து நகராட்சியே பராமரிக்கலாம். அது போன்ற தருணங்களில் தான் குப்பைகள் பராமரிக்கும் பணி (MUNICIPAL SOLID WASTE MANAGEMENT FACILITY; MSWMF) - பொதுவான (COMMON) MSWMF என கருதப்பட்டு, சுற்றுச்சூழல் ஒப்புதல் முன்னர் பெறப்படவேண்டும் என்ற EIA NOTIFICATION விதிமுறைகளுக்கு கீழ் வரும்..." (தமிழாக்கம்)
"... taking note of the fact that the 6th respondent has made application for authorisation under MSW Rules, 2000 to establish Municipal Solid Waste Processing Facility in the area of 4.2 ha in S.R.No. 278/1B and applied for Consent to Establish separately for Biomethanation Plant in the remaining area of 0.3 acre, the same cannot be termed as a CMSWMF within the purview of item 7(i) of MSW Rules...Therefore, we hold that prior EC under the facts and circumstance of the case is not necessary to be obtained and the 6th respondent is entitled to proceed with the scheme." [Para 37; Judgement Extract]
குப்பைகளை கொட்ட தனி விண்ணப்பமும், பயோ காஸ் திட்டங்களுக்கு தனி விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்ட காரணத்தினால் - இந்த பணிகள் CMSWMF ஆக கருதப்படாது என்றும், பெறப்பட்ட அனுமதிகள் அடிப்படையிலேயே நகராட்சி - திட்டப்பணிகளை தொடரலாம் என்றும், தீர்ப்பு கூறப்பட்டு - 249 நாட்கள் நீடித்த தடை, முடிவுக்கு வந்தது.
வெவ்வேறு விண்ணப்பங்களாக சமர்ப்பித்தாலும், விண்ணப்பம் செய்தது ஒரே அமைப்பு (நகராட்சி) தான் என்பதால், தீர்ப்பு - நீதிபதியின் விளக்கத்தில் இருந்தே முரண்பட்டது. மேலும் - தீர்ப்பாயத்தின் ஆணை - இது போன்ற விஷயங்களில், இதற்கு முன்பு வழங்கப்பட்ட பல்வேறு தீர்ப்புகளில் இருந்தும், இந்த சட்டம் குறித்து இதற்கு முன்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ள தெளிவுரைகளுக்கு மாற்றமாக இருந்ததாலும் - மனுதாரர்கள் சார்பாக இவ்வழக்கு உச்சநீதிமன்றத்திலும் - மேல்முறையீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. [Civil Appeal No.5373/2016]
ஜூலை 15, 2016 அன்று இவ்வழக்கு, புதுடில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் - தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி ஏ.எம்.கண்வில்கார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீண்ட நேரம் நடந்த வாதங்களை தொடர்ந்து, பசுமை தீர்ப்பாய ஆணையில் தலையிட எவ்வித காரணமும் இல்லை எனக்கூறி, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள் - இந்த மேல்முறையீட்டு வழக்கு எழுப்பியுள்ள கேள்விகள், இன்னும் திறந்தே உள்ளன ("The Question of Law is however left open") என்றும் தீர்ப்பு வழங்கினர்.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 16, 2017; 10:30 pm]
[#NEPR/2017121602]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|