காயல்பட்டினத்தில் திடக்கழிவு கிடங்கு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் பொய்த் தகவல்கள் தொடர்பாக, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விரிவான விளக்கம் தொடராக அளிக்கப்பட்டு வருகிறது.
“விதிமுறைகளை மீறி, CRZ – 1 பகுதிக்குள் சாலைகளை அமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி!” என்ற தலைப்பில் பல தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” குழுமத்தால் 25ஆம் பாக அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
முந்தைய பாகங்களில் - நகர்மன்றத்திற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு, முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மானால் மீண்டும் CRZ நிலம் (1.5 ஏக்கர்) வழங்கப்பட்டது என்பதை கண்டோம்.
மேலும் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், சர்வே எண் 278 (தென்பாகம்) இடத்தை - நீர் தேங்கும் இடம் எனக்கூறியும், CRZ பகுதிக்குள் வருகிறது எனக்கூறியும் - முன்னாள் நகர்மன்றத்தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய நிலத்தை நிராகரித்தது என்பதனையும் கண்டோம்.
இந்த உண்மையை மறைக்க எவ்வாறு அவதூறுகள் பரப்பப்பட்டன என்பதனையும் முந்தைய பாகத்தில் கண்டோம்.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான் வழங்கிய 5.5 ஏக்கர் நிலத்தின் 30 சதவீத நிலம் CRZ-1 எல்லைக்குள் வருகிறது. இந்த CRZ-1 பகுதி வழியாகவே, வாவூ கதீஜா (கிழமேல் 466 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம்) மற்றும் வாவூ மஃதூம் (தென்வடல் மீட்டர் 140 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம்) சாலைகள் உருவாக்க திட்டமிடப்பட்டது.
எவ்வாறு - அந்த சாலைகள், CRZ பகுதிகளுக்குள் செல்கின்றன என்பதை இணைக்கப்பட்டுள்ள படம் விளக்கும். இணைக்கப்பட்டுள்ள சர்வே எண் 278 CRZ வரைப்படத்தில் - நீல வர்ணத்தில் காட்சி தருவது, தாமிரபரணி ஆற்றின் ஒரு கிளையாகும். அது சர்வே எண் 278 இடத்தின் வட - கிழக்கு பகுதியில் ஓடுகிறது. பச்சை வர்ணத்தில் காட்சி தருவது, அதன் தொடர்ச்சியான - CRZ 1 நிலமாகும். வெள்ளை நிறத்தில் உள்ள சிறு பகுதி மட்டும், CRZ எல்லையை தாண்டியுள்ளது.
சாலைகள் அமைக்கப்பட்ட விதமும் - பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
முன்னாள் நகர்மன்றத் தலைவரின் 278 நிலத்திற்குள், சர்வே எண் 279 இடத்தில் உள்ள நிலவியல் பாதை மூலம் நுழையலாம். அவ்வாறு நுழைந்தவுடன், உடனடியாக மேற்கு நோக்கி சாலை வருவதே, முன்னாள் நகர்மன்றத்தலைவர் வழங்கிய மேற்கில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை அடைவதற்கான மிகவும் குறைந்த தூர வழியாகும். ஆனால் அவ்வாறு சாலைகள் வழங்கப்படவில்லை!
மாறாக - சர்வே எண் 279 இடத்தில் இருந்து சர்வே எண் 278 நிலத்திற்குள் நுழைந்தவுடன், தென் வடலாக, இத்திட்டத்திற்கு எவ்வித அவசியமும் இல்லாமல், 140 மீட்டர் நீளம் / 10 மீட்டர் அகலம் சாலை, வாவூ மஃதூம் சாலை என்ற பெயரில் உருவாக்கப்படுகிறது.
அதன் பிறகு, அந்த சாலை வடக்கில் முடிந்தவுடன், கிழ மேலாக - 466 மீட்டர் நீளம் / 10 மீட்டர் அகலம் சாலை உருவாக்கப்படுகிறது. இந்த சாலைக்கு வாவூ கதீஜா என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு - 4 ஏக்கர் (278/1B) நிலத்தை, ஏன் தலை சுற்றி அடையவேண்டும் என்பதற்கான காரணம் பொதுமக்களிடம் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் இந்த சாலைகள் இவ்வாறு அமைவதன் விளைவு என்னவென்றால், கிழக்கில் உள்ள தென் வடல் சாலைக்கும், மேற்கில் உள்ள 4 ஏக்கர் நிலத்திற்கும் இடையில், சுமார் 10 ஏக்கர் நிலம் கொண்ட ஒரு பகுதி உருவாகிறது.
எந்த நோக்கத்தில் இந்த பகுதி உருவாக்கப்படுகிறது? தெற்கில் இருந்து, சர்வே எண் 278 இடத்திற்குள் நுழைந்தவுடன், மேற்கு நோக்கி - ஒரு சாலையை அமைத்திருக்கலாமே?
முந்தைய பாகத்தில் நாம் கண்டது போல் - 2009 ஆம் ஆண்டு, அப்போதைய நகர்மன்றம் ஒப்புதல் தந்த CITY DEVELOPMENT PLAN (CDP) அறிக்கையில் - கொம்புத்துறை (கடையக்குடி) பகுதிக்கு பரிந்துரைக்கப்பட்ட BEACH RESORT போன்ற திட்டங்களை அமல்படுத்த யோசனை இருந்ததா?
BEACH RESORT இல்லாமல் வேறு ஏதாவது பணிகளுக்காக (DEVELOPMENT) அப்பகுதி உருவாக்கப்பட்டதா?
இவ்வாறு பல கேள்விகள் உள்ளன.
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம்.
[மக்கள் உரிமைநிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: டிசம்பர் 14, 2017; 9:30 pm]
[#NEPR/2017121403]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |