தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்காக, நில எடுப்புப் பணிகள் மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, கேட்புத் துறையாக தென்னக ரெயில்வேயிடம் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் வழங்கியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடியிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரை வரை புதிய இரயில் வழித்தடம் 143.5 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை 18.7 கி.மீ நீளத்திற்கு சுமார் ரூ.100 கோடி மதிப்பிலும், இரண்டாவது கட்டமாக மேலமருதூர் முதல் அருப்புக்கோட்டை வரை 51.3 கி.மீ நீளத்திற்கும், மூன்றாம் கட்டமாக அருப்புக்கோட்டை முதல் மதுரை வரை 73.5 கி.மீ நீளத்திற்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வடக்குசிலுக்கன்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், சாமிநத்தம், சில்லாநத்தம், வாலசமுத்திரம், மேலமருதூர் ஆகிய 6 கிராமங்களில் தனியார் நிலம் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தனியார் நிலங்கள் 71.09 ஹெக்டேரும், அரசு நிலங்கள் 3.778 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
அதனை தொடர்ந்து, தூத்துக்குடி முதல் மேலமருதூர் வரை மொத்தம் 18.7 கி.மீ வரை முதல் கட்டமாக வடக்குசிலுக்கன்பட்டி, சாமிநத்தம், சில்லாநத்தம் ஆகிய சுமார் 8.5.கி.மீ நிளம் வரையிலான 3 கிராமங்களில் 24 ஏக்கா; நிலங்கள் கையப்படுத்தி அதற்கான நில ஒப்படைப்பு சான்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., , தென்னக இரயில்வே, மதுரை கோட்ட செயற்பொறியாளர் திரு.சந்துரு பிரகாஷ், ஜ.ஆர்.எஸ்.இ, அவர்களிடம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (18.12.2017) வழங்கினார்கள்.
மேலும், நிலுவையில் உள்ள 3 கிராமங்களாகிய தெற்கு வீரபாண்டியபுரம், வாலசமுத்திரம், மேலமருதூர் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதற்கான நில ஒப்படைப்பு சான்று விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.என்.வெங்கடேஷ்,இ.ஆ.ப., தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மூ.வீரப்பன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.சரவணன்,இ.ஆ.ப.. மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி.சிந்து, நில எடுப்பு தனி வட்டாட்சியர் திரு.கே.லெனின், இரயில்வே உதவி பொறியாளர் திரு.பா.ராஜேந்திர முத்துக்குமார், உள்ளீட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்..
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும்பாலும் பேருந்து மூலமே மதுரை சென்று வருகின்றனர். ரயிலில் செல்வதென்றால் திருநெல்வேலிக்குச் சென்றால்தான் இயலும் என்ற நிலையுள்ளது. இப்புதிய வழித்தடம் அமையப்பெற்றால், இம்மக்கள் ரயிலை அதிகளவில் பயன்படுத்த வாய்ப்பேற்படும். எனவே, இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டப் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. |