காயல்பட்டினத்தில் கடந்த நவம்பர் மாதம் 28 முதல் இன்று (டிசம்பர் 01) காலை 10.30 மணி வரை தொடர் மழை பெய்துள்ளது. கடந்த நாட்களில் சாரல், சிறுமழை, இதமழை எனப் பொழிந்த நிலையில், இன்று காலையில் அது கனமழையாகக் கொட்டித் தீர்த்துள்ளது.
வங்கக் கடலில் மையமிட்டுள்ள ‘ஓகி’ (OCKHI) புயல் சின்னம் காரணமாகவே இம்மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை காரணமாக, நேற்று (நவம்பர் 30) 0.230 மணி துவங்கி, 20.30 மணி வரை நாள் முழுக்க நகரில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், காற்று வலிமையாக வீசுவதன் காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு வராதிருக்கவே மின் தடை செய்யப்பட்டுள்ளதாக மின் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டது. நேற்றிரவில் மீண்டும் மின் வினியோகம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடிக்கடி துண்டிக்கப்பட்டு, நிறைவில் 20.30 மணியளவில் முறையான மின் வினியோகம் செய்யப்பட்டது.
நேற்று பெய்த மழை, வீசிய வலிமையான காற்று காரணமாக, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பல தலைமுறைகளாக கம்பீரமாக நின்றிருந்த ஆலமரம் வேறோடு சாய்ந்தது.
வழமைக்கு மாற்றமான இம்மழையால் அலியார் தெரு உள்ளிட்ட வீதிகளில் ஏற்பட்டுள்ள சாலைச் சிதிலங்கள், ஏற்கனவே இருந்த சிதிலங்கள் சரி செய்யப்படாததால் ஏற்பட்டுள்ள தீவினைகள் உள்ளிட்ட பாதிப்புகளை முன்வைத்து, நகராட்சி அதிகாரிகளிடம் நேரடியாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் –“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் முறையிட்டதையடுத்து, ஆணையர் பொன்னம்பலம் தலைமையில் – நகராட்சி களப்பணியாற்றியது.
சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் காணப்பட்ட பகுதிகளிலும் கட்டிடம் உடைக்கப்பட்ட கல் – மணலைக் கொண்டு பள்ளங்கள் ஓரளவுக்கு நிரப்பப்பட்டன. என்றாலும், பெய்த மழைக்கு இப்பணிகள் ஈடுகொடுக்க முடியாமல் போனதில் வியப்பில்லை. நகரின் பெரும்பகுதி மழைநீர் வழந்தோடும் கடற்கரை கீரிக்குளத்தில் தேங்கியிருந்த மழை நீர் நகராட்சியால் பொக்லைன் இயந்திரம் மூலம் கடலுக்குச் செல்லும் வகையில் வெட்டி விடப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் துணைப்பணியாற்றினர்.
இவ்வாறிருக்க, இன்று நள்ளிரவில் பெய்த தொடர் மழை காரணமாக, அவ்வப்போது மின் வினியோகம் தடை செய்யப்பட்டது. இத்தனை நாட்களாக இதமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை துவங்கி, 10.30 மணி வரை அது கனமழையாக உருவெடுத்து நகரில் கொட்டித் தீர்த்துள்ளது. அதன் பிறகும், சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே மழை பெய்தவண்ணம் உள்ளது.
இதன் காரணமாக, பெரும்பாலும் நகரின் அனைத்து வீதிகளிலும் பெருமளவில் மழை நீர் வழிந்தோடியது. ஆஸாத் தெரு, சித்தன் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் அமைந்துள்ள தாழ்வான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் அவர்கள் வீட்டை விட்டும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. அருகிலுள்ள வீடுகளில் தம் உடமைகளை ஒப்படைத்துவிட்டு, அவரவருக்குத் தெரிந்த இடங்களில் அடைக்கலமாயினர்.
இன்று 17.00 மணி நிலவரப்படி, வானம் மேகமூட்டத்துடனேயே காணப்படுகிறது. வானிலை இதமாக உள்ளது. மழை விட்டு விட்டுப் பொழிந்தவண்ணம் உள்ளது.
மொத்தத்தில் காயல்பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெய்துள்ள இம்மழை அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளபோதிலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், பழைய வீடுகளில் குடியிருப்போருக்கும் அவதியைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து பெறப்பட்டுள்ள மழைபொழிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் நேற்று 34.80 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. இன்று 112.80 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது.
படங்கள்:
நேரடியாகப் பதிவு செய்யப்பட்டவை & சமூக ஊடகங்கள் மூலம் பெறப்பட்டவை
|